பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன? குடி அரசு கட்டுரை - 19.09.1926

Rate this item
(0 votes)

கும்பகோணத்து “பிராமணனின்” லஜ்ஜையும் சீற்றமும்

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறுவளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும் , சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், “பிராமணன்” என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச்சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மைவிடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் ‘சுவாமி’ என்று கூப்பிடவேண்டும்? அவனைக் கண்டால் நாம் தான் முதலில் கும்பிட வேண்டும் என்கிற மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவனாயிருக்கிற வனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்? அல்லாமலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மையில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக்காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங்கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உதாரணமாக, பார்ப்பனனுக்கு பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை. ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோக்ஷத்திற்கு கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லாநிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனிததர்மமென்றே சொல்லுவோம். இந்த நிலை ‘பிராமணனிடம்’ கண்டாலும் சரி ‘பஞ்சமனிடம்’ கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது “பாயாசத்திற்கு குங்குமப்பூ போதவில்லை; அக்கார வடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் லோபிப் பயல்” என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

‘பிராமணன்’ என்கிற ஒரு பத்திரிகை ‘பஞ்சாங்கப்’ பிராமணர்களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாகவும், அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகவும், ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் “இவ்விழிதொழில்” செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணஸ்தராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் ‘தமிழ்நாடு’ பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை. தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்திலொருவர் கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கௌரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக்கொள்ளுகிறது. ஆனால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம் காப்பி ஓட்டல் முதலிய இழிதொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகாபரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல்லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார். ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழிதொழில் இன்னது என்பதுகளிலேயே இவ்விரு பார்ப்பனர் களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம்.

இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள், எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகா மகாகனம் பட்டம் பெற்ற ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், சர். சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அனேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும், வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. “பிராமணன்” உண்மையிலேயே இந்த ‘இழி தொழிலாகிய’ பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் ‘பிராமணர்களை’க் கடைத் தேற்றி ‘பிராமணன்’சொல்லுகிறபடி அவர்களை ‘கௌரவமான’ வாழ்க்கையில் நடக்கும்படி செய்யும் பிரசாரத்திற்கு நம்மை யும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய ‘இழிதொழிலை விட்ட பிராமணர்’ பெயர்களையும் வாரா வாரம் ‘பிராமணன்’ பத்திரிகை கொண்டு வெளிவருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம். அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்கூட அவர்கள் தங்கள் தொழில் இழிதொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டானவுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்து கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை. வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழிதொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழிதொழில் என்று வாயில் ஒப்புக்கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப்படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலம் பார்ப்பனர்களுக்கு கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு கட்டுரை - 19.09.1926

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.