நான்அரசியல்வாதி அல்ல-பின் ஏன் இன்னாருக்கு ஓட்டு போடு என்று கூறுகிறேன்? விடுதலை 2.6.1962.

Rate this item
(0 votes)

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!

இந்த நாட்டில் பொதுத் தொண்டு பேரால் வாழ்கின்றவர்கள் எல்லாம் பொதுத் தொண்டின் பெயரால் வயிறு பிழைப்பவர்களாகவும், வாழ்க்கைக்கு வசதி தேடிக் கொள்பவர்களாகவுமே உள்ளார்கள். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி சட்டசபைக்குப் போக வேண்டும் என்றும், அதன் பெயரால் உயர வேண்டும் என்பவர்கள்தான் இன்று பொதுத் தொண்டுக்காரர்களாக உலவுகின்றனர்.

நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக, சிந்தனைவாதிகளாக ஆகவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். இந்தக் கூட்டம் மாணவர் கழகத்தின் சார்பாக நடக்கின்றது. மாணவர்கள் என்றாலே படிக்கின்ற வர்கள் என்பதுதான் பொருள்.

மாணவர்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி வளர வேண்டும். மற்றபடி அரசியலில் ஈடுபட்டு பிழைப்பை பாழ்படுத்திக் கொள்ளக் கூடாது.

நண்பர் ராஜகோபால் சொன்னது போல திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி அல்ல. உங்களிடம் ஓட்டுக்கு வந்து பொய்யும், புளுகும் புளுகுபவர்கள் அல்ல. எங்கள் பேச்சு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. கசப்பாகத்தான் இருக்கும். நாங்கள் உங்கள் தொண்டின் காரணமாக வெகு பேருக்கு விரோதியாக இருக்கிறோம்.

நான் சொன்னேன், அரசியல்வாதி அல்ல என்று. அப்படியானால், பின் ஏன் இன்னாருக்கு ஓட்டு போடு என்று கேட்டார்கள் என்று. நாங்கள் எங்களுக்கு ஓட்டு கொடுங்கள் என்று ஒரு நாளும்ட கேட்டு இருக்க மாட்டோம். இனியும் கேட்க மாட்டோம். இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவது கூட, இன்னார் வராது இருக்க வேண்டி இன்னாருக்கு ஓட்டு போடுங்கள்; இன்னாருக்கு ஓட்டு போட்டால் கேடுகள் ஏற்படும், அது ஏற்படாமல் இருக்க இப்படிச் செய்யுங்கள் என்றுதான் கூறி பாடுபட்டு இருக்கின்றோம்.

நாட்டில் தவறான ஆட்சி நடப்பதைக் கண்டாலும் என்ன பாடுபட்டாவது அதனை ஒழிக்கப் பாடுபட்டு இருக்கின்றோம். அதுபோலவே ஒரு ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்கவல்லதாக இருந்தால், அதற்கு எதிரிகள் தொல்லை கொடுக்க நேர்ந்தால் நாங்கள் எப்பாடுபட்டாவது அதனைப் பாதுகாக்க முயன்றே இருக்கின்றோம்.

உதாரணமாக ஆச்சாரியார் 1937-இல் முதன் மந்திரியாக வந்து இந்தியை கட்டாயப் பாடமாக ஆக்கி நம்மவர் படிக்காது இருக்கச் செய்த கேடுகள் கண்டு அன்று அவரது ஆட்சியினை ஒழித்து இருக்கின்றோம். அதுபோலவேதான் 1952 தேர்தலில் ராஜாஜி முதன்மந்திரியாக வந்து குலக் கல்வித் திட்டங்களைப் புகுத்தி நமது படிப்பில் கை வைத்த போது மீண்டும் ஒழித்துக் கட்டி இருக்கின்றோம்.

அதேபோலத்தான் காமராஜர் அவர்கள் முதன்மந்திரியாக வந்து ஆச்சாரியார் செய்த கொடுமைகளை எல்லாம் மாற்றி தமிழ் மக்கள் படிக்கவும், உத்தியோகம், பதவி பெற வழிவகை செய்து வருவது கண்டு அவரது ஆட்சியை ஆதரித்தோம். மீண்டும் அவரே அய்ந்து ஆண்டுகள் மந்திரியாக வரவேண்டும் என்று பாடுபட்டு அதிலேயும் வெற்றி பெற்றுள்ளோம்.

எங்களுடைய தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டுதான். தேர்தல் முடிந்ததும் ஒத்தி வைக்கப்பட்ட சமுதாயத் தொண்டை மீண்டும் தீவிரமாகச் செய்ய முற்பட்டு இருக்கின்றோம்.

நாங்கள் அலங்காரப் பேச்சாளர்கள் அல்ல, கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள், மத நம்பிக்கைகள் அத்தனைக்கும் மாறுபட்டவர்கள் ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டு வருபவர்கள் எங்களுக்கு அரசியல் கட்சிக்காரர்கள், மதவாதிகள், வைதீகர்கள் எல்லோருமே எதிர்ப்பாக இருப்பவர்களே, இந்த அரசாங்கம் கூட எதிர்ப்பாகத்தான் உள்ளது. இத்தனைக்கும் இடையில்தான் எங்கள் தொண்டு நடைபெறுகின்றது.

புத்தருக்குப் பிறகு அதாவது 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவுப் பிரச்சாரம் செய்து வருபவர்கள் நாங்கள்தான். வேறு எவரும் தோன்றவே இல்லை. தோன்றியவர்கள் எல்லாம் பழமையை, மூடத்தனத்தை நமது ஜாதி இழிவு நீங்காமல் நிலைத்து இருக்க வழிவகை செய்தவர்களாகத்தான் இருந்தார்களே ஒழிய, இந்தத் துறையில் எவரும் இறங்கிப் பாடுபடவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம் என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், கடவுள், மதம், சாஸ்திரம், புராணங்கள், ஜாதி இவை ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், மக்கள் அறிவின் வழி நடக்க வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

 

21.5.1962 அன்று சேதுராயன் குடிக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை.

விடுதலை 2.6.1962.

Read 33 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.