அய்யங்கார் தர்மம். குடி அரசு - கட்டுரை - 09.05.1926

Rate this item
(0 votes)

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப்பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாசமெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக்கொள்வதென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார்களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக்கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துக் கொள்வதென்பது பின்னவருடையதுமான வெளிப்படை கொள்கைகளாகும். இந்தக் கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டீஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொருவிதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக்கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமுமில்லை. சுயராஜ்யக் கட்சி “சாத்தமுதில் மல அமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு” என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தியோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது, ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு தமிழ்நாட்டு ஐயங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல. ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டீஸ் கட்சியாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தி யோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காக கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரசிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன்வந்தார்கள். அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர்களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்- மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆச்சிரமத்தின் பெயரையும் மகாத்மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு “புதுத் திருடன்”, “பழய திருடன்” ஆகிய இருவரும் இனிமேல் திருடப்போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள். இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பங்குக்காரர்களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயிருந்தபடியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகிவிடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.

தமிழ்நாட்டுக்கு பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த ஐயங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ் “வெச்சரிக்கை”யைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டித நேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார். இவ்வந்தரை ஜெயகர் கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டித நேரு ஒரு சமாதானம் சொல்லுகிறார். அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற்காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்ட வுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான். மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான். திருடன் கன்று குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான். மரக்காரன் தென்னை மரத்தின் மீது புல் ஏதுவென்று கேட்டான். திருடன் அதனால்தான் கீழே இறங்கி வந்து விட்டேன் என்று சொன்னான். அதைப்போல் பண்டித நேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு ஐயங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது. பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப்பாரேயானால் தனது சமாதானத்தை தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியிலிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லக்ஷணம். அதை விடுத்து ‘நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப்போனேன்; இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன்’ என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமணருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்ல வென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பிடித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.

குடி அரசு - தலையங்கம் - 09.05.1926

 
Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.