ராஜியின் பலன். குடி அரசு - தலையங்கம் - 25.04.1926

Rate this item
(0 votes)

சுயராஜ்யக்கக்ஷியின் கதி “பயித்தியம் தெளிந்து போய்விட்டது. உலக்கையை எடுத்துக் கொண்டுவா கோவணங் கட்டிக்கொள்கிறேன்.” என்று ஒரு பழமொழி யுண்டு.

அதாவது, ஒரு வாலிபனுக்குப் பெண்ணாசையால் பயித்தியம் பிடித்திருந்தது. அவன் கோவணமுமில்லாமல் நிர்வாணமாய்த் திரிந்து கொண்டிருப்பது வழக்கம். அதனால் ஜனங்கள் அவனைப் பிடித்து விலங்கிட்டு ஒரு அறையில் மூடி வைத்திருந்தார்கள். கொஞ்சநாள் பொறுத்து அவ்வாலிபன் “தனக்கு பயித்தியம் தெளிந்து விட்டது. உலக்கை எடுத்துக்கொண்டு வாருங்கள், அதைக் கோவணமாகக் கட்டிக்கொள்கிறேன்” என்று சொன்னானாம். அது போல் நமது ராஜீயக் கக்ஷிகளுக்குள் ராஜி ஏற்பட்டுப் போய்விட்டதாம்; காங்கிரசுக்கும் நல்ல காலமாம்; தங்கள் கக்ஷிக்கும் இனிமேல் குறைவில்லையாம்; இனி எல்லோரும் ஒத்து வேலைசெய்ய வேண்டியதுதான் பாக்கியாம் என்பதாக இன்னும் என்னென்னவோ எழுதி பிராமணப் பத்திரிகைகள் ஏமாற்றுப் பிரசாரம் செய்கின்றன. பயித்தியம் தெளிந்ததாகச் சொல்லுபவன் எப்படி உலக்கையை கோவணம் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தானோ அதேபோல் சுயராஜ்யக் கக்ஷியார் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளுவதை “காங்கிரஸ்” கட்டளைப்படி நடப்பது என்று தீர்மானித்து ராஜியாய் விட்டார்கள். இதிலிருந்து என்ன விளங்குகிறது? மந்திரி வேலையைப் பெறும் ஆசையை மனதில் வைத்துக்கொண்டு சட்டசபையில் “ஒத்துழையாமை” என்றும், “உத்தியோகம் ஒப்புக்கொள்ளுவதில்லை’ என்றும், “முட்டுக்கட்டை” என்றும் சொல்லிக் கொண்டு வோட்டர்களை ஏமாற்ற நினைத்த தந்திரமும் ரகசியமும் இப்போது வெளியாய்விட்டது.

முதலில் ஒத்துழையாதாராயிருந்து சட்டசபைக்குள் “ஒத்துழையாமை”, “முட்டுக்கட்டை” என்று மாறி கடைசியாய் பரஸ்பர ஒத்துழைப்பாளருடன் ராஜி செய்துகொள்ளுவது என்கிற சாக்கை வைத்துக்கொண்டு மந்திரிவேலை கிடைத்தால் ஒத்துழைப்பது இல்லாவிட்டால் அப்பதவி கிடைக்கும் வரையில் “ஒத்துழையாமை”, “முட்டுக்கட்டை” என்று சொல்லிக் கொண்டிருப்பது என்கிற ராஜிக்கு வந்தாகி விட்டது. சுயராஜ்யக் கக்ஷியின் உள் குட்டை வெளிப்படுத்திய பெருமை ஸ்ரீமான் ஜெயகருக்குத்தான் சேரவேண்டும். இந்த ராஜியின் பலனாய் ஐரோப்பிய மகாயுத்தத்தில் 14 நிபந்தனைகள் ஏற்படுத்தின. அமெரிக்கா பிரசிடெண்ட் வில்சன் துரைக்கு இருந்த பெருமை இப்போது எலெக்ஷன் உலகத்தில் ஸ்ரீமான் ஜெயகருக்கு ஏற்பட்டி ருக்கிறது. ஐயோ பாவம்! தலைவர் பண்டிதர் நேருவும், அவரின் வாலான ஸ்ரீமான் ரெங்கசாமி ஐயங்காரும் ஸ்ரீமான் ஜெயகர் பெயரைச் சொல்லித்திரிய வேண்டிய வேலை ஏற்பட்டுவிட்டது. இனி இவர்கள், ஆடுகளுக்கு எவ்வித உபயோகமும் இல்லாமல் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ‘தாடி’ என்று சொல்லக்கூடிய இரண்டு மாமிசத்துண்டுகளைப் போல் ராஜீய உலகத்தில் எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இவ்விரண்டு பிராமணர்களும் ஆகிவிட்டார்கள்.

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கோ வயிற்றுக் கடுப்புதான் ஏற்பட்டிருக்கும். அடுத்த காங்கிரசுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரே பிரசிடெண்ட் ஆகலாம் என்று நினைத்திருந்தார். அவரின் சிஷ்யர்களான பிராமணப்பத்திரிகைகளும் ‘நமது சொந்த நிரூபர்’ என்ற பெயரால் தூக்கி விட்டுக்கொண்டிருந்தன. முன் ஒரு காலத்தில் ஸ்ரீமான் திலகர் இறந்த உடன் ‘இனி இந்தியாவுக்கு திலகர் லோகமான்ய சீனிவாசய்யங்கார்தான்’ என்று ‘இந்து’ பத்திரிகை முதல் எல்லா பிராமணப் பத்திரிகைகளும் தம்பட்டம் அடித்து வந்தன. கடைசியாய் காந்தி வந்ததும் ஐயங்கார் கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டியதாயிற்று. அது போலவே மகாத்மா காங்கிரஸை விட்டு ஒழிந்ததும், மறுபடியும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை அந்த இடத்தில் இருத்த பிராமணப் பத்திரிகைகள் பாடுபட்டன. ஐயங்காரின் துரதிருஷ்டத்தால் இப்போது ஜெயகர் முளைத்துவிட்டார். இனி ஐயங்காருக்கு காங்கிரஸ் பிரசிடெண்ட் பதவி கிடைப்பது சந்தேகந்தான். ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப்பற்றி ஒரு நண்பர் நம்மிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அவர் ஸ்ரீனிவாசய்யங்கார் பிரசாரத்தைப் பற்றி ஏன் நீங்கள் மிகுதியும் கவலை எடுத்துக்கொள்ளுகிறீர்கள்? அவருடைய ஜாதகக் குறிப்பே ‘அவர் தொட்டது துலங்காது’ என்று இருக்கிறது. ஐயங்கார் தடபுடல் எல்லாம் அவர் பணம் சிலவு செய்கிற வரையில்தான். சிலவு நின்றதும் தானாகவே அமர்ந்து விடுவார். இதுவரையில் அவர் எதாவது ஒரு காரியத்தில் முடிவான வெற்றியடைந்திருக்கிறாரா? அவர் பின்னால் திரியும் சிஷ்யக் கோடிகள் அவரைத் தலைவர், தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரிவதோடு சரியாய்ப் போய்விடும் என்று சொல்லுவது வழக்கம். அதுபோலவே நடந்து வருகிறது.

முதலாவதாக, நமது ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு சென்னை சட்டசபையில் தன் கக்ஷியான சுயராஜ்யக்கக்ஷி உருப்படும் என்கிற நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. இதுவரை அவர் கூட சேர்ந்திருக்கும் ஆள்களெல்லாம் “ஜஸ்டிஸ்” கக்ஷியிலிருந்து பார்த்து உத்தியோகம் கிடைக்காமல் வெளியே வந்தவர்களும் “ஜஸ்டிஸ்” கக்ஷியில் நீக்கப்பட்ட அதன் விரோதிகளுமே தவிர வேறு எவராவது புதிதாக சேர்ந்திருக்கிறார்களா? “ஜஸ்டிஸ்” கக்ஷியார் பழயபடி ஏதாவது கொடுப்பதாகச் சொன்னால், போவதில்லை என்று சொல்லக் கூடியவர்கள் எவராவது இருக்கிறார்களா? என்பது அவருக்கே தெரியும். அல்லாமலும் இவ்வளவு ஆர்ப்பாட்டத்தோடு ஸ்ரீமான் முதலியார் போன்றவர்களைப் பின்னால் இழுத்துக்கொண்டு ஊர் ஊராய்த் திரிந்தும் இம்மாதம் 18 - சட்டசபைகளுக்கு ஆள்களை நிறுத்துவதற்கென்று சென்னை மகாஜனசபைக் கட்டிடத்தில் போட்ட நிர்வாகக் கூட்டத்தின் ரகசியம் 8 நாளாகியும் இன்னும் வரவில்லை. ‘திராவிடன்’ பத்திரிகையில் மாத்திரம் கொஞ்சம் வெளிவந்திருக்கிறது. நிறுத்த ஆளில்லாமல் இவர்கள் படும் கஷ்டம் கடவுளுக்குத்தான் தெரியும்.

இதிலிருந்தே சுயராஜ்யக் கக்ஷியின் யோக்கியதையும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் பணம் செலவானதின் பலனும், முதலியார் உதவியின் பலனும் ஒருவாறு அறிந்து கொள்ளலாம். இதன் பலனாய்த்தான் ஸ்ரீமான் அய்யங்கார் சென்னை சட்டசபைக்கு நின்றால் தனக்கு ஆகுமோ ஆகாதோ என்று பயந்தும், பிராமண வோட்டுக்களே நிறைந்த யூனிவர்சிட்டி ஸ்தானத்திற்குதான் நிற்பதானால் சென்னை சட்டசபையில் அடிக்கடி வாயாடித்தனம் செய்யக்கூடிய ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வேறு கதியென்ன? என்று நினைத்தும், சென்னையில் மந்திரி வேலையை எதிர்பார்ப்பது, குழந்தை அம்புலியைக் கையில் பிடிக்க ஆசைப்படுவது போலாகுமென்று கருதி, சென்னை சட்டசபை ஆசையையும் விட்டு இந்தியா சட்டசபைக்குத் தலைவராகப் பார்த்தார். அங்கும் ஸ்ரீமான் ஜெயகர் முளைத்துவிட்டார். இனி என்ன செய்வார்? பாவம்!

நேருகளும் ஐயங்கார்களுமே இக்கதியாகி விட்டால் இவர்கள் பெற்றெடுத்த சுயராஜ்யக்கக்ஷி அழிந்து விட்டதா? இல்லையா? என்று கூடக் கேட்க வேண்டுமா? நமக்கு அதைப்பற்றிக்கூட அதிக பரிதாபம் இல்லை. இனி ஐயங்கார் அவர்களின் வலக்கை, இடக்கைகளான ஸ்ரீமான்கள் முதலியார்கள் கதியும், நாயுடுகள் கதியும் என்ன ஆகும் என்பதும் இவர்களை நம்பி அக்கக்ஷியில் சேர்ந்த மற்றவர்கள் கதி என்ன ஆகும் என்பதும்தான் நமது பரிதாபம். அம்மிக்கல் போன்ற இவர்களே ஆகாசத்தில் பறக்கும்போது மற்றவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? வாசகர்களே தெரிந்து கொள்ளலாம்.

குடி அரசு - தலையங்கம் - 25.04.1926

 
Read 22 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.