போலீஸ் நிர்வாகம். குடி அரசு - கட்டுரை - 18.04.1926

Rate this item
(0 votes)

கொஞ்சகாலமாக போலீஸ் நிர்வாகம் வெகு தடபுடலாக இருந்து வருவதாகவே சொல்லலாம். வீதிகளில் முக்கு முக்குக்கு போலீஸாரை நிறுத்தி வண்டிகளையும் மோட்டார்களையும் இடம் வலம் பிரித்து அனுப்புவது வெகு மும்முரமாயிருக்கிறது. இது ஒரு விதத்தில் நன்மை ஆனாலும் 15 அடி 20 அடி உள்ள குறுகிய ரோட்டுகளில் கூட போலீஸார் நடுவில் நின்று கொண்டு வண்டிகளை இடம் வலம் பிரிப்பது வேடிக்கையாயிருக்கிறது. ஒவ்வொரு சமயங்களில் போலீஸார் பாடு உயிருக்கே ஆபத்தாய் விடும் போலிருக்கிறது. சிற்சில போலீஸார் தங்கள் மேல் வண்டி ஏறட்டுமென்றே உறுதியாய் விலகாமல் நிற்கிறார்கள். அது சமயங்களில் வண்டிக்காரர்கள் பாடு வெகு கஷ்டமாய்ப் போய்விடுகிறது. அல்லாமல் இந்த கொடுமையான வெய்யிலில் போலீஸ்காரர்கள் அசையாமல் நின்று கொண்டிருப்பதானது போலீஸாருக்கு பெரிய தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும். பார்க்கிறவர்கள் கண்ணுக்கு இந்த போலீஸார்களின் நிலை மிகப்பரிதாபமாகவே காணப்படுகிறதும் தவிர மாதம் 20, 25 ரூபாய் சம்பளமும் லீவு, பென்ஷன், உடுப்பு வகையறாக்களுக்கு குறைந்தது மாதம் 10 ரூபாய் சிலவுகளும் ஆக மாதம் 35 ரூபாய் சம்பளம் கொடுக்கும் ஆள்களை நடுரோட்டில் வெய்யிலில் கைகாட்டி மரம்போல் நிறுத்தி வண்டிகளை இடது புறம் விடு, வலது புறம் விடு என்பதற்குத்தானா உபயோகப்படுத்த வேண்டும். இந்த ஆளுகளுக்கு எஜமானர்களாய் இருக்க 100,200,500 சம்பளமுள்ள உத்தியோகஸ்தர்கள் வேண்டுமா? இவற்றைக் கவனிக்க சட்டசபை மெம்பர்கள் இல்லை. எந்த உத்தியோகமானாலும் எங்கள் ஜாதிக்கு கொடு என்பதற்கு மாத்திரம் சட்டசபையில் மெம்பர்களுக்கு குறைவில்லை.

வண்டி விலக்கி இடம் வலம் விடுவதற்கென்று ஒரு இலாக்கா வைத்து அவற்றிற்கு மாதம் 12 அல்லது 15 ரூ. கொடுத்தால் 1000 -க் கணக்கான ஆள்கள் கிடைக்கும். அதை விட்டுவிட்டு 10´ 15, 20 ´ அநுபோகம் பெற்ற 20, 25 ரூபாய் ஆளுகளைக் கொண்டு இந்த வேலை வாங்குவது ஸாது ஜனங்களின் வரிப்பணம் கேழ்ப்பாரற்று சிலவாகிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்லலாம். அல்லாமலும் போலீஸாரெல்லாம் பிராமணரல்லாதாராய் போய்விட்டபடியாலும், மேலதிகாரிகள் எல்லாம் பிராமணராய் அமைந்து விட்டதாலும் போலீஸ் கான்ஸ்டேபிள்கள் நாயிலும் கடையாய் நடத்தப்படுகிறார்கள். அவர்களை மேலதிகாரிகள் பேசும் வார்த்தைகளோ சில சேரியில் பேசிக்கொள்வது போல் அடே, போடா, வாடா என்பதோடு நாய், கழுதை, எருமை இதுகளுக்குப் பிறந்தவன் என்று பேசுவதோடல்லாமல் பெண்டு பிள்ளைகளும் சில சமயங்களில் தடுமாறிப்போகிறதாம். வெள்ளைக்கார அதிகாரிகள் இவற்றைக் கொஞ்சமும் கவனிப்பதில்லை. போலீஸ் இலாக்காவில் போலீஸாரை மனிதர்களாக பாவிக்கவேண்டுமென்றால் குறைந்தது ஒவ்வொரு இடங்களிலும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரோ அல்லது சப் இன்ஸ்பெக்டரோ யாராவது ஒருவர் பிராமணரல்லாதாராயிருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படிக்கில்லாமல் சிற்சில சமயங்களில் டிப்டி சூப்ரெண்ட், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டேபிள், ரைட்டர் ஆகிய எல்லோரும் பிராமணர்களாய் அமைந்து விடுகிறார்கள். இம்மாதிரி சமயங்களில் பிராமணரல்லாத போலீஸ் கான்ஸ்டேபிள்கள் பாடு நரக வேதனைதான். ரைட்டர் முதல் ஒவ்வொரு பிராமண உத்தியோகஸ்தருக்கும் இரண்டு இரண்டு ஆள்கள் வீட்டு வேலைக்கு வேண்டியிருக்கிறது. போகாவிட்டால் பிரமோஷன் இல்லை. கஷ்ட்டமான டூட்டி கொடுத்து அவர்களைக் கொடுமை செய்வது அல்லாமலும் வரும்படி வரக்கூடிய பிராதுகள் ஏதாவது வந்தால் அதுகளைப் பங்கிட்டு நிரவி இவர்களுக்கும் கொடுக்காமல் பிராமண போலீஸ் கான்ஸ்டேபிள், ஹெட் கான்ஸ்டேபிள் இவர்களுக்குள்ளாகவே சரி செய்துக் கொள்வது. இன்னம் இதில் எழுதக்கூடாத எவ்வளவோ கொடுமைகள் பிராமணரல்லாத கான்ஸ்டேபிள்கள் அநுபவிக்க நேரிடுகிறது. பிராமணரல்லாதாரிலேயே சிலர் பிராமணர்களுக்குள் நுழைந்துக் கொண்டு இவ்வித காரியங்களுக்கும் உடந்தையாயிருப்பதால் பிராமணரல்லாதாரின் நிலை இப்படி இருக்க வேண்டியிருக்கிறது. இந்த கஷ்டங்கள் என்று துலையுமோ நமக்குத் தெரியவில்லை.

குடி அரசு - கட்டுரை - 18.04.1926

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.