ஓட்டர்களை ஏமாற்றும் தந்திரம். குடி அரசு தலையங்கம் - 14.03.1926

Rate this item
(0 votes)

இவ்வாரம் பத்திரிகைகளெல்லாம் ஒரே மூச்சாய் சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபைகளை விட்டு வெளியேறிவிட்டார்கள், வெளியேறி விட்டார்களென்று சுயராஜ்யக் கக்ஷியாருக்காக வஞ்சகப் பிரசாரங்கள் செய்து வருகின்றன. சுயராஜ்யக் கக்ஷியார் எப்பொழுது விலகினார்கள்? எதற்காக விலகினார்கள்? எவ்வளவு நாளைக்கு விலகியிருப்பார்கள்? விலகியபின் இவர்களுடைய வேலை என்ன? இந்த நான்கு விஷயங்களையும் கவனித்துப்பார்த்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் தந்திரம் பொது ஜனங்களுக்கு விளங்காமற்போகாது.

எப்போது விலகினார்கள்?

இருக்கவேண்டிய நாளெல்லாம் இருந்து விட்டு அடைய வேண்டிய பெருமையையும், உத்தியோகத்தையும், பணத்தையும், தங்கள் பிள்ளைகளுக்கு உத்தியோகத்தையும் சம்பாதித்துக் கொண்டு கடைசியாய் சட்டசபை வேலையெல்லாம் முடிந்து, காலாவதி முடிய ஒரு வாரமிருக்கும்போது விலகி விட்டோம்! விலகி விட்டோம்!! என்று ஆடம்பரம் செய்கிறார்கள்.

எதற்காக விலகினார்கள்?

விலகி விட்டோமென்று பொதுஜனங்களை ஏமாற்றி மறுபடியும் தங்களுக்கே வோட்டுப்போடும்படி செய்து மறுபடியும் தாங்களே போய் முன்னிலும் பலமாய் உட்கார்ந்துக் கொள்ளுவதற்காக விலகினார்கள். அல்லாமல் தங்களுடைய காரியமொன்றும் பலிக்காததினால் தங்களுக்கே வெட்கம் வந்தோ, அல்லது சர்க்காருக்கு ஒரு உணர்ச்சி உண்டாவதற்கோ விலகினவர்களல்ல.

எவ்வளவு நாளைக்கு விலகியிருப்பார்கள்?

அடியோடு ஒன்றும் ராஜிநாமாக் கொடுத்து வெளியில் வந்தவர்களல்ல. மறுபடியும் நாளைக்கு வேண்டுமானாலும் இவர்கள் போவதற்கு இடம் வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். மறுபடியும் உள்ளே போய் மூன்று வருடம் உட்கார்ந்து, பதவியும், உத்தியோகமும், பணமும் சம்பாதித்துக்கொள்ள சவுகரியம் கிடைக்கிற வரையில்தான் வெளியிலிருப்பார்கள்.

விலகினபின் இவர்களுடைய வேலை என்ன?

வோட்டர்களிடம் போய் நாங்கள் வெளியில் வந்து விட்டோம்; எங்களுடைய வீரப்பிரதாபத்தைப் பார்த்தீர்களா? ஆதலால் எங்களை மறுபடியும் அனுப்புங்களென்று வோட்டர்களை ஏமாற்றுவதுதான் இவர்களுடைய முக்கிய வேலை. இவர்களின் நிலையோ சட்டசபையை விட்டு வெளியேறுங்காலத்தில் கக்ஷித் தலைவர் பண்டிதநேரு சொல்லியதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

“சர்க்காரை நாங்கள் பயமுறுத்தவில்லை; சர்க்காருக்கு மகத்தான அதிகாரங்கள் உண்டு; சர்க்காரை எதிர்க்கத் தகுந்த பலம் எங்களிடம் கிடை யாது; தேசத்தில் சமூக வேற்றுமை ஏற்பட்டு ஒற்றுமைக் குலைந்திருக்கிறது. ஆதலால், சட்டமறுப்புச் செய்ய எங்களால் ஆகாது. இந்த நிலைமையில் சட்டசபையில் நாங்களிருப்பதில் பிரயோஜனமில்லை. இவ்வளவு பலமுள்ள பெரிய சர்க்காரை ஒழித்துவிடும் நோக்கத்துடன் நாங்கள் வெளியே போகவில்லை. நாங்கள் ஆசைப்பட்டாலும் அது ஆகிற காரியமல்ல. எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியும், எங்கள் நோக்கங்களை அடைய முடியவில்லை என்றே வெளியே போகிறோம். வெகு நாளைக்கு முன்னமேயே நாங்கள் சட்டசபையை விட்டுப்போயிருக்க வேண்டும்; சர்க்காருடைய தந்திரம் எங்களை ஏமாற்றிவிட்டது. ஆதலால் நாங்கள் இங்கிருப்பதில் பிரயோஜனமில்லை, போய் வருகிறோம்” என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையான விஷயம். ஆனால், ஒரு கக்ஷியார் இந்த உண்மையை அறிந்து இந்த தத்துவத்திற்காக வெளியானது உண்மையாய் இருந்து அவர்களுக்கு சுயமரியாதையும் யோக்கியப் பொறுப்பும் இருக்குமானால் மறுபடியும் தாங்கள் விட்டுவந்த சட்டசபையைத் திரும்பிப் பார்ப்பார்களா? மற்றவை மறுமுறை விபரமாய் எழுதுவோம்.

குடி அரசு தலையங்கம் - 14.03.1926

Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.