ஜமீன்தார்கள் வீட்டில் பிராமண எலிகள். குடி அரசு பத்திராதிபர் குறிப்பு - 27.12.1925

Rate this item
(0 votes)

டில்லி ராஜாங்க சபைக்கு இவ்வருடம் நடந்த தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களிலொருவரான ஒரு பிராமணரல்லாத பிரபு கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பெரிய ஜமீன்தாரொருவருக்கு தனக்கு வோட் செய்யும்படி கேட்டு இரண்டு மூன்று கடிதங்கள் எழுதியிருந்தார். மற்றொரு பிராமண கனவானும் தனக்கு வோட் செய்ய வேண்டுமாய் ஒரு கடிதம் போட்டிருந்தார். தேர்தல் காலம் சமீபத்திலிருக்கும்போது பிராமணரல்லாத கனவானுக்காக கோயமுத்தூரிலுள்ள ஒரு பிரபல யந்திரசாலையின் நிர்வாகி ஒருவர் வோட் கேட்பதற்கு ஜமீன்தாரிடம் நேரில் சென்று, விஷயத்தை எடுத்துச் சொன்னார். உடனே ஜமீன்தார் இதைப் பற்றி, தனக்குத் தகவலே தெரியாதே; ஒரு பிராமணர்தான் கடிதம் எழுதியிருந்தார்; அவருக்கு வோட் செய்வதாக நமது குமஸ்தாவிடமும் சொல்லிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குமஸ்தாவான பிராமணர் தங்களுக்கு நான்கு வோட் இருக்கிறது; ஒரு வோட் தாங்கள் சொன்னபடி பிராமணருக்குச் செய்துவிட்டாலும், மற்றும் ஒரு வோட் செட்டியாருக்கும் கொடுக்கலா மென்றார். உடனே வோட்டுக் கேட்கப்போன கனவான் தங்களுக்கும் இது விஷயத்தைப்பற்றி 2, 3 கடிதம் எழுதப்பட்டிருக்கிறது, அது தங்களுக்குச் சேராத காரணமென்னவென்று கேட்டார்.

ஜமீன்தார் ஆத்திரப்பட்டு, ஐயர் குமாஸ்தாவைப் பார்த்து, என்ன ஐயரே, தபால் வந்ததா? என்று கேட்டார். ஐயர், ஒன்றோ, இரண்டோ வந்ததாக ஞாபகம், ஆனால் அதைத் தங்களிடம் சொல்லமறந்து விட்டேனோ என்னமோ என்று சொல்லி மழுப்பிவிட்டார். உடனே, ஜமீன்தாரும் கனவானும் பிராமண சூழ்ச்சிகளைப்பற்றி, ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். எவ்வளவுதான் பிராமணரல்லாத ஜமீன்தார்களும், பிரபுக்களும் ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்திருந்தாலும், ஜமீன்தாரென்கிற பெருமைக்குண்டான சுகங்களெல்லாம், அனுபவிக்க வேண்டுமானால், பிராமணர்களில்லாமல் இவர்களால் ஒன்றும் முடியவே முடியாது. ஆதலால் ஒவ்வொரு ஜமீன்தார்களும், மிராஸ்தார்களும், பெரிய பண்ணைகளும் தங்கள் நன்மையின் பொருட்டு ஒவ்வொரு பிராமணருக்குள்தான் அடக்கமாயிருக்கிறார்கள் இவையெல்லாம் மாறாமல் ஜஸ்டிஸ் கக்ஷியின் வெறுந் தீர்மானங்கள் மாத்திரம், பெரிய நன்மையொன்றும் செய்து விடாது.

டி.எஸ்.பி

குறிப்பு:- இதை நாம் நமது அநுபவத்திலேயே பார்க்கிறோம். நமது “குடி அரசு”ப் பத்திரிக்கைக்கூட பிராமணாதிக்கமுள்ள சில ஜமீன்தார்களிடமிருந்தும், பல பிரபல மிராஸ்தார்களிடமிருந்தும் திருப்பியனுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்களை நேரில் காண சந்தர்ப்பம் நேர்ந்த காலத்தில் தங்களுக்கு பத்திரிகை வந்ததும், திருப்பியனுப்பப்பட்டதும் இரண்டும் தெரியாதென்றே சொல்லியிருக்கிறார்கள். இப்படி சொன்னதோடு ஒரு பெரிய ஜமீன்தார் தனது வருத்தத்தைத் தெரிவித்தும் கொண்டார். ஆனால், இவர்களை உங்கள் பிரைவேட் செக்கரடேரி பிராமணர்தானேயென்று கேட்டதற்கு மிராஸ்தார்கள் ஆம் என்று சொல்லிக்கொண்டு சிரித்தார்கள்.

குடி அரசு பத்திராதிபர் குறிப்பு - 27.12.1925

 
Read 18 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.