அம்பலத்து அதிசயம். குடி அரசு துணைத் தலையங்கம் - 18.10.1925

Rate this item
(0 votes)

( தேசீய பிராமணர்களின் கண்டனம் )

தேச விடுதலை விஷயத்தில், பிராமணரல்லாதார் பொது நன்மையை உத்தேசித்து, அநேக பிராமணர்களுடைய, கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கூட்டாக்காமல் கபடமற்று பிராமணர்களுடன் ஒத்துழைத்து வந்திருந்தாலும், அவர்களுடைய உழைப்பையெல்லாம் தாங்கள், தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அநுபவித்து கொள்வதல்லாமல் உழைக்கின்ற பிராமணரல்லாதாருக்கு எவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக்கின்றார்களென்பதை - செய்து வருகின்றார்களென்பதைப் பொறு மையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.

முதலாவது, பழைய காலத்திய தேசீயவாதிகளில் சிறந்தவர்களில் ஸர்.சி. சங்கரன் நாயர் என்கிற பிராமணரல்லாதார் முக்கியமானவர் ஆவார். அவர் காங்கிரஸிலும் தலைமை வகித்தவர். அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்காகப் பிராமணர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள். அவருக்கு கிடைக்கவிருந்த ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவியை கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய எவ்வித பொதுநலத்திலும் தலையிட்டிராத, ஸர்.வி.பாஷ்யம் ஐயங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பிராமண வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்த தோடல்லாமல், அவர் பேரில் எவ்வளவோ பழிகளை யெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, ஐந்து வருஷங்களுக்கு முன்னதாகவே கிடைக்க வேண்டிய ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவி வெகு காலம் பொறுத்துத்தான் கிடைத்தது.

டாக்டர் டி.எம். நாயர் அக்காலத்திய தேசீயவாதிகளில் மிகவும் முக்கியமான பிராமணரல்லாத தேசீயவாதி. அவர் எவ்வளவோ பொதுக்காரியங்களில் ஈடுபட்டிருந்தவர். அவரையும், மைலாப்பூர் பிராமணர்கள் ஓர் முனிசிபாலிட்டியில் கூட அவர் உட்காருவதை பொறுக்காமல், அவருக்கு விரோதமாகச் சூழ்ச்சிகளைச் செய்து அவரையும் உபத்திரவப்படுத்தினார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்துவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் முதன்மையானதென்று, ஓர் காங்கிரஸ் பிராமண பிரசிடெண்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.

இவ்விதமான கஷ்டங்களிலிருந்து பிராமணரல்லாதாரைக் காப்பாற்றுவதற்காக வேண்டி முக்கிய காங்கிரஸ்வாதிகளாயிருந்த டாக்டர் நாயர் போன்ற பிராமணரல்லாத தலைவர்களால் ஜஸ்டிஸ் கட்சியென்னும் ஓர் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

அதை ஒழிப்பதற்காகப் பிராமணர்கள் சூழ்ச்சி செய்து அதற்கு எதிரிடையாக பிராமணரல்லாதார் சிலரைப் பிடித்தே சென்னை மாகாணச் சங்கமென்று ஒன்றை ஆரம்பிக்கச் செய்து அதற்கு வேண்டிய பொருளத்தனையும் பெரும்பான்மையாகப் பிராமணரே உதவி, ‘தேசபக்தன்’ என்ற தமிழ் தினசரி பத்திரிக்கையையும், ‘இந்தியன் பேட்ரியட்’ என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிக்கையையும், ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்லுவதற்காகவே பிரசாரம் செய்யும் பொருட்டு, ஏற்பாடு செய்து கொடுத்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் செல்வாக்கில்லாமல் அடித்தார்கள். ‘இந்தியன் பேட்ரியட்’ பத்திரிக்கையைத் தங்கள் வேலையை முடித்துக் கொண்டவுடனே ஒழித்துவிட்டார்கள்.

எஞ்சியிருந்த ‘தேசபக்தன்’ பத்திரிகையை, தேசத்தில் அதற்கு கொஞ்சம் செல்வாக்கு ஆரம்பித்தவுடனே, அதில் ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் ஆசிரியராயிருப்பதை ஒழிக்க வேண்டுமென்னும் முக்கியக் கருத்துடன் அவருக்கு விரோதமாகச் சில பிராமணரல்லாதாரையே கிளப்பிவிட்டு, சில பிராமணர்களும் இரகசியமாக அப்பத்திரிகைக்கு விரோதமாகத் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து ஸ்ரீமான் முதலியாரவர்களே ‘தேசபக்தனை’ விட்டு ஓடிப்போகும்படியாகச் செய்துவிட்டார்கள்.

அதற்குப்பிறகு, அப்பத்திரிகைக்கு பிராமணர்களே ஆசிரியர்களும், எஜமானர்களுமாகி மெதுவாக நழுவவிட்டுக் கொண்டார்கள். இதே மாதிரியே சென்னை மாகாணச் சங்கத்திலும், பிராமணர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த சிலர் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து அவர்களைக் கொண்டே தங்கள் காரியமெல்லாம் முடிந்து போனவுடன் மறையும்படி செய்துவிட்டார்கள்.

இவையெல்லாம் பழைய காங்கிரஸின் கொள்கைப்படி ஏற்பட்ட திரு விளையாடல்களென்றாலும், ஒத்துழையாமை ஏற்பட்ட காலத்தில் பிராமணரல்லாத தேசபக்தர்களுக்குச் செய்த கொடுமைகளில் சிலவற்றைக் கீழே குறிக்கிறோம்:-

ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்பதாக சென்னையில் தேசீயவாதிகளின் சங்கமொன்று ( சூயவiடியேடளைவ’ள ஹளளடிஉயைவiடிn) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்கு ஸ்ரீமான் சி.விஜயராகவாச்சாரியார் அவர்களை அக்கிராசனராக வைத்து, உப அக்கிராசன ஸ்தானத்துக்கு ஸ்ரீமான் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரை பிரேரேபித்தவுடன் அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி அதை அவர் அடையவிடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்கள் பிராமணர்கள் செய்தார்கள்.

இதைப் பிராமணரல்லாதாரில் சிலர் தெரிந்து அப்போதே கூச்சல் போட்டதின் பலனாக அநேக உப அக்கிராசனாதிபதிகளை ஏற்பாடு செய்து அந்த ஸ்தானத்திற்கு ஒரு மதிப்பில்லாமல் அடிக்கப் பார்த்தார்கள். இதன் பலனாக, அதன் நிர்வாக சபைகளில் பிராமணரல்லாதாரை அதிகமாகப் போடும்படி நேரிட்டது. இதன் காரணமாக தேசீயவாதிகளின் சங்கமென்பதை குழந்தைப் பருவத்திலேயே கழுத்தைத் திருகிக் கொன்று போட்டார்கள்.

பிறகு, திருப்பூரில் கூடிய தமிழ்நாடு மாகாண கான்பரன்ஸுக்கு ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு அவர்களை அக்கிராசனம் வகிக்க வேண்டுமென்று சிலர் பிரேரேபித்தார்கள். அதற்கு விரோதமாக ஹிந்து, சுதேசமித்திரன், சுயராஜ்யா ஆகிய மூன்று பத்திரிகைகளும், அதுசமயம் நாயுடு அவர்கள் கான்பரன்சில் தலைமை வகிக்கத் தகுதியற்றவரென்று எழுதி வந்ததோடு பிரேரேபித்தவருக்கும் இம்மாதிரியே பிரேரேபித்தது தப்பிதமென்று சொல்லியும், அநேக ஜில்லாக்கள் பெரும்பான்மையாய் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவையே தெரிந்தெடுத்திருந்தும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாரவர்களைக் கொண்டும் ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி ஐயங்கார் திருப்பூருக்குச் சென்றதன் பலனாயும் உபசரணைக் கமிட்டியாரை வசப்படுத்தி இவருடைய தேர்தலை ஒப்புக்கொள்ளாமல் நிராகரிக்கும்படிச் செய்து விட்டார்கள்.

பிறகு, மாகாண காங்கிரஸ் கமிட்டியார் பிரவேசித்து அவரை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று, தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு நிர்பந்தப் படுத்தினதின் பேரில் சுயமரியாதையுள்ளவர் ஒப்புக்கொள்ள முடியாதவாறு உள்ள ஓர் தீர்மானத்தைப் போட்டு, அவரையே ஒப்புக்கொண்ட மாதிரியாய் தெரியப்படுத்தினார்கள்.

இத்தீர்மானத்தின் போக்கு யோக்கியதையற்றதாயிருந்தபடியால் ஸ்ரீமான் நாயுடு அதைத் தமக்கு வேண்டாமென நிராகரிக்கும் படியாயிற்று. பிறகு, திடீரென்று ஸ்ரீமான் எம்.ஜி.வாசுதேவய்யரவர்களைக் கொண்டு அம்மகாநாட்டை நடத்திக் கொண்டார்கள்.

அதற்கு அடுத்தாற்போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கிராசனாதிபதியாக பெரும்பான்மையோரால் ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டபோது, தெரிந்தெடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஸ்ரீமான் வ.வே.சு.ஐயரவர்கள் ‘நம்பிக்கையில்லை’ என்னும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்த சமயத்தில், ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியாரிருந்து இது ராஜீய நோக்கத்துடன் கொண்டுவந்த தீர்மானமல்ல வென்றும், அது ஓர் பிராமணரல்லாதார் இந்த ஸ்தானம் பெறுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டுமென்கிற வகுப்புத் துவேஷத்தின் மேல் கொண்டு வந்ததென்றும் பொருள்பட உக்ரமாய் அப்பொழுதே பேசியிருக்கிறார்.

இத்தீர்மானம் ஸ்ரீமான் வ.வே.சு.ஐயர் கொண்டு வந்ததின் பலனாய், சில நாட்களுக்குள் ஸ்ரீமான் என்.ஸ்ரீனிவாசய்யங்காரால் ³ ஐயரவர்களுக்கு குருகுலத்திற்கென்று ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது.

இவ்வருஷம் காஞ்சீபுரத்தில் நடக்கப்போகும் தமிழ் மாகாண மகாநாட்டிற்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியாரை சில ஜில்லா கமிட்டிகள் தெரிந்தெடுத்திருந்தும், அதை வெளியாருக்குத் தெரிவிக்காமல் இரகசியமாய் வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆகும்படி இரகசிய பிரசாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னெல்லாம் யார் யாரை எந்தெந்த ஜில்லாக்கள் தெரிந்தெடுத்தனவென்பது பத்திரிகைகளில் வருவது வழக்கம்.

இப்பொழுது உபசரணைக் கமிட்டியாரும் தெரிவிக்காமல் பத்திரிகைக்காரர்களும் தெரிவிக்காமல் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. தவிர, கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை இராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று தீர்மானமொன்று செய்திருக்கிறது.

சென்னை காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீமான்கள் ஈ.வி.இராமசாமி நாயக்கரையும், சுரேந்திரநாத் ஆரியாவையும் கண்டித்து ஓர் தீர்மானம் செய்திருக்கிறது. நன்னிலம் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான்கள் ஈ.வி.இராமசாமி நாயக்கர், கலியாணசுந்திர முதலியார், ஆரியா இவர்களைக் காங்கிரசினின்று வெளியாக்க வேண்டுமென ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பேசியிருக்கிறார்.

சட்டசபையில் காங்கிரஸ் பிராமண மெம்பர்களுடைய வேலை, பிராமணரல்லாதாருடைய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்பதும் , பிராமணரல்லாதாருக்கு எதிரிடையாய் நிற்கவேண்டுமென்பதுமே என்று சட்டசபையில் எலக்ஷன் ஆனவுடனேயே ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை எழுதியுமிருக்கிறது. சட்டசபையில் ஒரு பிராமணர், எங்களுக்கு உத்தியோகம் கொடுக்காவிட்டால், ஒத்துழையாமைக் கக்ஷியில் சேர்ந்து விடுவோமென சர்க்காரை மிரட்டியிருக்கிறார்.

அன்றி, வைக்கம் சத்தியாக்கிரகத்தின் மூலமாய் அடைந்த தண்டனையிலிருந்து ஸ்ரீமான் ஈ.வி. இராமசாமி நாயக்கர் விடுதலையாகி தமிழ்நாட்டுக்கு வந்தவுடன், மறுபடியும் வைக்கம் போகாமலிருப்பதற்காக வேண்டி, ஓர் பிராமண சட்ட மெம்பரையும், ஓர் பிராமண அட்வோகெட் ஜென்ரலையும் கொண்ட கவர்ன்மெண்டு எட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன்னால் பேசிய, பழைய குப்பைகளை ஆதாரமாக வைத்து ராஜத்துரோக முதலிய கேஸ் எடுத்து அதன் மூலமாகக் கைதியாக்கிக் கொண்டு போனார்கள்.

பிராமணர்களின் பொல்லாத வேளையாய் ஓர் பிராமணரல்லாத மேஜிஸ்திரேட்டிடம் அந்த கேஸ் நடந்தபடியால், கேஸ் ஒன்றும் ருஜுவாக வில்லையென்றும், அவர் கேஸை முடித்துத் தண்டிக்காமல் திருப்பி ஓட்டிவிட்டார். இவ்வளவுமில்லாமல், பிராமணரல்லாத மந்திரிகள், பெரிய உத்தி யோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்குகிறவர்கள் அது செய்கிறார்கள். இது செய்கிறார்களென்று கிராமம் கிராமமாய் ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்வதற்குப் பணம் செலவு செய்து, ஆட்களை ஏற்படுத்திப் பிரசாரம் செய்து, அவர்கள் பேரில் தப்பபிப்பிராயத்தைக் கற்பித்து வரு கிறார்கள்.

குருகுலம் சம்மந்தமாய் நடந்த மீட்டிங்குகளில் பிராமணர்கள் கல்லெடுத்துப் போட்டார்கள். சென்னைக் கார்ப்போரேஷன் தேர்தல்களில், ஸ்ரீமான் ஆரியாவை ஆட்களை விட்டு அடித்தார்கள். பொதுவாய் ஏழைகளுக்கும், முக்கியமாய் பிராமணரல்லாதார்களுக்கும், அவசியமானதாகிய மதுவிலக்கு, தீண்டாமை முதலிய திட்டங்களைக் காங்கிரசை விட்டு ஓட்டி விட்டார்கள். போதாக்குறைக்குக் கதரும் காங்கிரஸில் இருக்க கூடாதென்று, பூனா பிராமண பத்திரிகைகள் இப்பொழுதே எழுத ஆரம்பித்து விட்டன. இதைப் பற்றிச் சென்ற வாரமே ‘குடிஅரசில்’ ஜோசியம் கூறப்பட்டிருக்கிறது.

பிராமணரல்லாதார் தெய்வத்தின் பேராலும், nக்ஷத்திரங்களின் பேராலும் காணிக்கை வேண்டுதல் மூலமாகக் கொடுக்கின்ற பணங்கள் ஒழுங்கான வழியில் செலவழிப்பதற்காக ஏற்பட்ட தேவஸ்தான ஆக்ட் டானது, பிராமணர்களுடைய எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் தப்பி நிறைவேற்றி விட்டபடியினால், இப்போது அந்த ஆக்ட்டே செல்லாதென்றும் அதை எடுத்துவிட வேண்டுமென்றும், அதை இப்போது அமுலில்லாமல் சஸ்பெண்டு செய்வதற்கு இன்சக்ஷன் தடை கோரி ஹைக்கோர்ட்டில் மகந்துக்கள் பேரால் வியாஜ்யந் தொடுத்திருக்கின்றார்கள். இதற்கு வக்கீல்களோ, ஸ்ரீமான்கள் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார், டி.ரங்காச்சாரியார், டி. ராமச்சந்திர ஐயர் மகந்து பக்கமும், இதற்கு எதிர் வக்கீலாய் ஏற்பட்டவரோ அட்வோகெட் ஜெனரலான ஸ்ரீமான் டி.ஆர்.வெங்கிட்ட ரமண சாஸ்திரிகள் என்ற பிராமணருமே. இந்த ஆக்ட் ஒழிய வேண்டுமென ஹைக் கோர்ட்டில் பிராது தொடுத்திருந்தாலும் இந்த ஆக்ட்டின் மூலமாய் ஏற்பட்ட உத்தியோ கங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று, தேவஸ்தான போர்டு ஆபீஸையும், மந்திரி வீடுகளையும் பிராமணர்கள் சுற்றிக் கொண்டு வருகிறார்கள்.

இவையெல்லாமிருக்க மகாத்மாவையே ஒழிப்பதற்காக “ப்ராமணன்” என்கிற ஓர் பத்திரிகையையும் சங்கராச்சாரியார்கள், மகந்துகள் முதலிய பிராமண சிரேஷ்டர்களென்போரின் ஆதரணையில் ஆரம்பித்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு பதவிகளையும், சட்டசபை ஸ்தாபனங்களையும் பெறுவதற்கு பிராமணரல்லாதாரை ஏமாற்றியும், அலைந்து கொண்டுமிருக்கிறார்கள். இதற்குச் சில பிராமணரல்லாதாரையும் மிரட்டி சுயாதீனப்படுத்திக் கொண்டார்கள்.

தினசரி பத்திரிகைகள் தங்கள் கைகளில் இருக்கிற காரணங்களால் பாமர ஜனங்களை ஏமாற்றித் தங்கள் வசப்படுத்திக் கொள்வதோடு, சில முக்கியமான பிராமணரல்லாதாரைத் தலையெடுக்கவொட்டாதபடி பத்திரிகைகளில் ஊர், பேர் தெரியாது பிராமணல்லாதாரின் பொய்ப் பெயர்களை இட்டு தூற்றுதலான வியாசங்களை எழுதுவதும், பிராமண வக்கீல்களிடம் ( அப்ரென்டிஸ் ) அதாவது வேலை படிக்கும் பிராமணரல்லாத வக்கீல்களான, வாலிபர்களின் கையெழுத்தைப் போடச் செய்து அவர்கள் பெயரால் பிராமணரல்லாதாரை வைது பத்திரிகைகளில் எழுதுவதும், வயிற்றுக்கில்லாத வர்களினுடையவும் பணத்தாசை பிடித்தவர்களினுடையவும் தேசபக்தியையும் விலைக்கு வாங்கிக் கொண்டு அவைகளை பிராமணரல்லாதாருக்கு விரோதமாக உபயோகப்படுத்தி பணச்செறுக்கால் செய்து வருவது, சென்னைத் தேர்தல்களிலும், மற்ற தேர்தல்களிலும் தெரிந்து போயிருக்கிறது.

ஸ்தல ஸ்தாபனங்களில், பிராமணரல்லாதாருக்குள் கட்சிப் பிரதி கட்சிகளை உண்டாக்கி, இவர்களைக் கோர்ட்டுக்குச் செல்லும்படி செய்வதும் சில பிராமணர்களேயாகும்.

தேசீய பிராமணர்கள், பிராமணரல்லாதாருக்குச் செய்துள்ள கொடுமைகள் இவ்வளவுதானென வரையறுத்துவிட முடியாது. அவர்கள் செய்தவையும், இன்னும் செய்யப்போகின்றதுமான காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளை சமயம் நேரும்போது வெளியிட நாம் பின் வாங்கப்போவதில்லை. இவ்வளவெல்லாமிருக்கும் போது சென்னை காங்கிரஸ் கமிட்டியார் ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கரவர்கள் மீதும், ஆரியா அவர்கள் பேரிலும் கண்டனத் தீர்மானம் செய்திருப்பதை நாம் இலட்சியம் செய்ய வேண்யதில்லை என எண்ணுகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 18.10.1925 

Read 98 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.