சுயராஜ்யக் கட்சியும் ஸ்ரீமான் படேலின் உத்தியோகமும். குடி அரசு தலையங்கம் - 30.08.1925

Rate this item
(0 votes)

சுயராஜ்யக் கட்சியார் தங்கள் கட்சியை ஆரம்பிக்கும்போதே கயா காங்கிரஸ் தீர்மானத்தை மீறிக் கலகம் செய்து காங்கிரசுக்கு விரோதமாய் ஆரம்பித்தார்கள். அதுசமயம் காங்கிரஸில் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களின் கோழைமனத்தாலும் ஜாதியபிமானத்தாலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு சட்டசபைப் பிரவேசம் பிறகு அனுமதிக்கப்பட்டுப் போய்விட்டது. காங்கிரஸ் அனுமதித்தாலும் பொது ஜனங்களில் மிகுதி யானவர்கள் தங்கள் பேரால் சட்டசபைப் பிரவேசத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்யலானார்கள். ஆனாலும் அதுசமயம் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையைப் பற்றி ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நம்பிப் பலர் அனுமதித்தார்கள். சுயராஜ்யக் கட்சியாருக்கே ஓட்டும் செய்தார்கள். இவ்வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டனவா? அல்லது பிரிட்டிஷாரின் வாக்குறுதிகள் போலாயினவா? அன்றி அதைவிடமோசமாயினவா? என்று பார்ப்போம்.

வாக்குறுதிகளாவன
:1. தாங்கள் சட்டசபைக்குப் போவது சர்க்காரின் ராஜ்யபாரம் நடைபெறவிடாமல் செய்வதற்கென்றும்,
2. அதற்காக எவ்வித தீர்மானங்கள் வந்தாலும் முட்டுக்கட்டைபோட்டு எதிர்ப்பது என்றும்,
3. தங்களுக்கு ( மெஜாரிட்டி ) பெரும்பான்மையோர் கிடைக்கா விட்டால் தாங்கள் சட்டசபை வேலைகளில் கலந்துகொள்வதில்லை என்றும்,
4. காங்கிரஸ் ஒத்துழைத்தாலும் தாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்றும்,
5. தங்கள் போக்குவரவு செலவுபடியும் கூட பெறுவதில்லை என்றும்,
6. எவ்விதக் கமிட்டியிலும் அங்கத்தினராவதில்லை என்றும்,
7. எவ்வித உத்தியோகத்தையும் பெற்றுக் கொள்வதில்லை என்றும் இன்னும் பலவிதமாய் ஜனங்கள் ஏமாறத்தகுந்த மாதிரியெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஸ்தானங்களைப் பெற்றார்கள்.
பெற்ற பின்பு தங்கள் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. ஒத்துழைப்புக் காலத்தில் சட்டசபையில் சிலர் வாயாடிகளாயிருந்து அடிக்கடி ஒவ்வொரு தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக்கொண்டு எப்படி மறு தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டு வந்தார்களோ அதுபோல் இவர்கள் நடவடிக்கை வந்துவிட்டது. அதுமாத்திரமல்லாமல் சென்னையிலும், மத்திய மாகாணத்திலும் பிராமணரல்லாதாருக்கு விரோதமாயும்,பம்பாயில் பிராமணரல்லாதாருக்கும், மகமதியருக்கும் விரோதமாயும் வேலை செய்வதை சுய ராஜ்யக் கட்சியார் தங்கள் கொள்கைகளாய் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பிராமணர் கட்சி என்று நாம் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்ததற்கொப்ப சென்னை சட்டசபை எலக்ஷன் தீர்ந்தவுடன் சுதேசமித்திரன் பத்திரிகை எழுதியது ஞாபகமிருக்கும்.

அதாவது: - நமது வேலை பிராமணரல்லாதாரை எதிர்க்க வேண்டியதுதான் என்று எழுதியிருந்தது. இதை அப்போதே சில பத்திரிகைகள் கண்டித்திருக்கின்றன. இப்பொழுதும் அதன் பொதுத்தலைவர் பிராமணர், உப தலைவர் பிராமணர், காரியதரிசி பிராமணர் மற்ற மாகாணங்களிலும் பிராமணர்களும், அவர் கை ஆயுதமான சில, அதாவது தங்களையும் பிராமணர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும்தான் அதன் மாகாண நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். நிற்க, கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமான் நேரு அவர்கள் தங்கள் வாக்குத்தத்தத்திற்கு விரோதமாய் இந்திய சட்டசபையினரால் நியமிக்கப்பட்ட ஒரு கமிட்டியில் ஸ்தானம் ஒப்புக்கொண்டார் என்பதைப்பற்றி எழுதியிருந் தோம். இப்போது ஸ்ரீமான் படேல் அவர்கள் இந்திய சட்டசபை அக்கிராசனா திபதி உத்தியோகத்தை ஒப்புக்கொண்டார்கள். முன் சொல்லப்பட்ட கமிட்டி மெம்பர் உத்தியோகத்திற்குத் தினச் சம்பளம். இரண்டாவதான அக்கிராசனாதிபதி உத்தியோகத்திற்கு மாதச் சம்பளம். அதுவும் மாதம் 4000, 5000 கிடைக்கக்கூடியது.

வருஷம் ஒன்றுக்கு 50 அல்லது 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மூன்று வருஷத்திற்கு 1,50,000 அல்லது 2,00,000 ஓடு மீன் ஓடி உருமீன் வருமளவும் வாடி இருக்குமாங் கொக்கு என்கிறபடி ஜனங்கள் இவர்கள் வாக்குத்தத்தத்தை மறக்கிறவரையிலும், தக்க உத்தியோகம் கிடைக் கிற வரையிலும் காத்திருந்து சமயம் பார்த்து உத்தியோகத்தைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதிலும் ஸ்ரீமான் படேலின் உத்தியோகம் எவ்வளவு மானக் கேடானது? தமது மனசாட்சியையே விட்டுவிட்டுப் போய்விட வேண்டியது. உத்தியோகம் பெற்றதும் சுயராஜ்யக் கட்சியை ராஜினாமாச் செய்யவேண்டியது. தாம் பம்பாய் கார்ப்பரேஷன் பிரசிடெண்டாய் இருந்த காலத்தில் பஹிஷ்காரம் செய்த ஒரு கனவான் வீட்டுக்கு நாள் ஒன்றுக்குப் பத்து தடவையானாலும் நடக்கத் தயார் என்கிறார் . அதாவது, கூப்பிட்டபோதெல்லாம் ஓடுவது; ராஜப் பிரதிநிதியுடனும் மற்றும் ஐரோப்பியருடனும், உத்தியோகஸ்தருடனும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன் என்கிறார். தமக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்த சுயராஜ்யக் கட்சியார் தம்மை உடனே விடுதலை செய்துவிடவேண்டுமென்கிறார். அவர்களும் அவ்வாறே விடுதலை செய்தாகிவிட்டதென்கிறார்கள். இவ்வித நடவடிக்கை களை பத்திரிகைகள் சிலாகிக்கின்றன.

மகாத்மாவும் ஸ்ரீமான் படேலுக்கு ஆசி கூறுகிறார். அப்படியானால் மிதவாதக் கட்சியாரும், ஜஸ்டிஸ் கட்சியாரும், சுயேட் சைக் கட்சியாரும் இதைவிடக் கேவலமாய் எவ்விதத்தில் நடந்து கொள்ளு கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்றி இவ்வித நடவடிக்கைகளை பொதுஜனங்கள் அறிந்து கொள்ளாதபடி, வெற்றி என்கிற தலைப்பின்கீழ் பத்திரிகைகள் பிரசுரித்து தந்திரங்கள் செய்துவருகிறபடியால் ஜனங்கள் ஏமாந்து போகிறார்கள். இவற் றைத் தாராளமாய் வெறுப்பவர் யாரையும் காணோம். “நிர்வாண தேசத்தில் கோமணம் கட்டியவன் பயித்தியக்காரன் என்பது போல்” காங்கிரஸில் யாம் ஒரே ஒரு பயித்தியகாரர்தான் உண்டு போல் தோன்றுகிறது.

குடி அரசு தலையங்கம் - 30.08.1925

Read 23 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.