காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு. குடி அரசு சொற்பொழிவு - 31.5.1925

Rate this item
(0 votes)

சகோதரிகளே ! சகோதரர்களே !

காரைக்குடி ஜில்லா முதலாவது ராஜீய மகாநாட்டுக்கு அக்கிராசனம் வகிக்கும் கவுரவத்தை எனக்களித்ததற்கு உங்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன். அல்லாமலும் இந்த தனவைசிய நாட்டில் நடந்த - அதாவது பள்ளத்தூர் மகாநாட்டுக்கும், தேவகோட்டையில் நடந்த திருவாடானை தாலுகா மகாநாட்டிற்கும் அக்கிராசனம் வகிக்கும் கவுரவங்களையும் எனக்கே அளித்திருந்து, மறுபடியும் நடக்கும் இந்த மகாநாட்டு அக்கிராசன கவுரவத்தையும் எனக்கே அளித்திருப்பதைக் கொண்டு என்னிடம் தங்களுக்கு இருக்கும் அன்பைப்பற்றி நான் பெருமை பாராட்டிக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.

தேசத்தில் ஒற்றுமைக் கெட்டு, ஊக்கம் குன்றி, விடுதலை மறந்து, சுயநலம் மேலிட்டு தலைவிரித்தாடும் இந்தச் சந்தர்ப்பங்களில் மகாநாடுகள் நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். அதிலும் செல்வந்தர்களும், கஷ்டமென்பதே இன்னதென்றறியக்கூடாத சீமான்களும் நிறைந்துள்ள இப்பேர்ப்பட்ட குபேர பட்டணங்களில் மகாநாடுகள் நடத்த நண்பர்கள் ஏற்படுவதும், அப்படி ஏதாவது ஒன்று இரண்டு தேசபக்தர்கள் நடத்தினாலும் பொதுஜனங்கள் அதில் கலந்து மகாநாட்டைப் பலனுண்டாக்கும்படியாக்குவதும் மிகவும் துர்லபம்; அப்படியிருந்தும் இம்மகாநாடு இவ்வளவு சிறப்பாக நடக்கிறதோடு இவ்வளவு மகாஜனங்கள் வந்திருப்பதையும் பார்த்தால் யாரும் பாராட்டாமலிருக்க முடியாது.

கனவான்களே !

காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பானது நமது நாட்டில் வெகு காலமாக நம்மனோர் சம்பந்தப்படுவதற்கில்லாததாய், படித்த வகுப்பார் என்று சொல்லப்படுகிற வக்கீல்கள் முதலிய கூட்டத்தாருக்கு உரியதாய் இருந்து, அவர்களுக்கே பலனைக் கொடுத்துக் கொண்டு வந்தது. அவர்களோடு நில்லாமல் நாட்டின் இரத்தத்தையும் உரிஞ்சிக் கொண்டே வந்தது. ஏதோ நம் பாக்கிய வசத்தால் மகாத்மா காந்தி அரசியல் விஷயங்களில் தலையிட ஆரம்பித்தன் பலனாய் அரசியல் விஷயம் இந்திய மக்கள் யாவருக்கும் பொதுவாய் எல்லோருக்கும் விளங்கவும், எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ளவும், எல்லோரும் பலனடையக் கூடியதாயுமாகிவிட்டது. அதன் பலனாகத்தான் நீங்களும் நானும் இன்று இங்கு கூடியிருக்கிறோம்.

அரசியல் விஷயத்தைப்பற்றி உங்களுக்கு நான் இப்பொழுது அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். நாம் செய்யவேண்டிய அரசியல் திட்டங்களும் வெகு சுலபமானதும், யாவருக்கும் புரியக்கூடியதும், யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதும், எவரும் கஷ்டமின்றி எளிதில் செய்யக்கூடியதும், பெரும்பாலும் எதிர்வாதமற்றதுமானவைகள். அதாவது ஒற்றுமை - கதர் - தீண்டாமை - மதுவிலக்கு முதலியவைகளே. இவற்றைப்பற்றி உபசரணைக் கமிட்டியாரால் தயாரிக்கப்பட்டிருக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், என்னுடைய அபிப்பிராயத்தை முடிவு ரையில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இன்று இவ்வூரில் நடக்கப்போகும் உற்சவத்திற்கு நீங்கள் போக ஆசை கொண்டிருப்பீர்கள் ஆனதால் இத்துடன் மகாநாட்டின் இன்றைய நடவடிக்கைகளை முடித்துவிடுகிறேன்.

நாளை காலை 8 மணிக்கு மகாநாடு மறுபடியும் கூடும். ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்கள் கதர் காட்சியைத் திறந்து வைப்பார். அது முடிந்தவுடன் ஸ்ரீமான் சென்னை சுரேந்திரநாத் ஆரியா அவர்கள் அக்கிராசனத்தின் கீழ் தொண்டர் மகாநாடு நடக்கும். அது முடிந்தவுடன் மகாநாட்டுத் தீர்மானங்கள் உங்கள் அங்கீகாரத்திற்கு வரும். கோவை ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் அவர்கள் பெண்கள் கடமையைப் பற்றி பேசுவார்கள். இன்று இரவும் நாளை இரவும் நாகை ஸ்ரீமான் ராஜாராம் பாகவதர் அவர்களால் ‘மகாத்மா காந்தி’ காலnக்ஷபம் நடக்கும். கனவான்கள் இதுபோலவே வந்து இருந்து எல்லா விஷயங்களையும் கேட்டு மகாநாடு சிறப்பாய் நடப்பதற்கு எனக்கு வேண்டிய உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டு இப்பொழுது இக்கூட்டத்தைக் கலைக்கிறேன்.

குறிப்பு:- 23,24.05.1925 இரண்டு நாள்கள் பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - தலைமையுரை

குடி அரசு சொற்பொழிவு - 31. 05 .1925

 
Read 23 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.