தியாகிகளின் வீரச்செயல். குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1931 

Rate this item
(0 votes)

நமது நாட்டுத் “தேசீய வீரத் தியாகிகள்” ஆகிய காங்கிரஸ்காரர்கள் இதுவரையிலும், மற்றவர்களைப் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தது போக, இப்பொழுது அவர்களே பதவிகளுக்கு ஆசை கொண்டு நுனி நாக்கிலிருந்து தண்ணீர் சொட்டும்படி ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். இவ்விஷயத்தை, ஸ்தல ஸ்தாபனத் தேர்தலுக்குக் காங்கிரஸ் காரர்கள் பலர் ஆங்காங்கே போட்டி போடுவதைக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், இந்தத் “தியாகிகள்” எதற்காக ஸ்தல ஸ்தாபனங்களுக்குப் போகிறோம் என்று சொல்லுகிறார்கள் என்பதைக்கேட்டால் தான் இவர்களுடைய அரசியல் ஞானமும், தேசாபிமான மிகுதியும், ஸ்தல ஸ்தாபனங்களின் பிரயோசனத்தை இவர் எவ்வாறு அறிந்து கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தியும் விளங்கும். 

ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற முன் வருகின்றவர்கள், “நான் நகரின் சுகாதாரத்திற்காக உழைப்பேன். ஏழை ஜனங்களின் வரிகளைக் குறைக்கப்பாடுபடுவேன். நகரில் தண்ணீர் வசதியுண்டாக்கப் பாடுபடுவேன். விளக்கு வசதிகளை அதிகப்படுத்த முயலுவேன். ஏழை மக்களுக்கு குடியுருப்பு வசதிகளை உண்டாக்க முயலுவேன். நகரில் பள்ளிக்கூடங்களை மிகுதிப்படுத்தவும், கட்டாயக்கல்வியை உண்டாக்கவும் பாடுபடுவேன். பிச்சைக்காரர்களின் தொல்லைகளை ஒழிக்கவும், வேலையில்லாதவர் களுக்குத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தவும் உழைப்பேன். ரோடுகளையெல் லாம் கப்பி ரோடுகளாகச் செய்யவும் தார் போட்ட ரோட்டுகளாக்கவும் பாடு படுவேன்” என்று இம்மாதிரியான விஷயங்களைக் கூறி ஓட்டுக் கேட்பார்கள். இதுவே எந்த நாட்டிலும் நடைபெறும் வழக்கம். இவ்விஷயங்கள் ஒரு நகர சபை, ஒரு நகரத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களுமாகும். இவ் விஷயங்களை உணர்ந்து இவைகளுக்காக முயலும் குணமுடையவர்கள் தான் நகரசபைகளில் அங்கம் பெறுவதற்கும் தகுதி வாய்ந்தவர்களாவார்கள். 

ஆனால், நமது நாட்டுத் “தியாகிகள்” எதற்காக நகரசபைக்குச் செல்லுகிறார்களென்றால் நான்கே காரியங்களுக்காக செல்லுகின்றார்கள். அந்த நான்கு காரியங்களாவன:- நகரசபைக் கட்டிடங்களிலும், அதன் அதிகாரத்திற்குட்பட்ட மற்ற இடங்களிலும் தேசியக்கொடியை நட்டுப் பறக்க விடுவதாகிய பயனற்ற காரியம் ஒன்று. 

நகரசபையின் கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்கு அதிக நாள் உழைக்கக் கூடிய கெட்டியான துணியைக் குறைந்த தொகையில் வாங்கிக்கொடுப் பதை நிறுத்திவிட்டு, கொஞ்சநாளில் கிழிந்து தொலையக்கூடிய பயனற்ற கதர்த்துணியை அதிக விலைக்கு வாங்கிக் கொடுப்பதன் மூலம் எப்பொ ழுதும் இதற்காகும் செலவைக் காட்டிலும் அதிக செலவாகும்படி செய்வ தாகிய காரியம் ஒன்று. 

நகரசபையைச் சார்ந்த பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் சிறு பிள்ளைகளுக்கு, நாகரீக- விஞ்ஞான சாஸ்திர - யந்திர அறிவைத் தடைப்படுத்து வதும், மூளையை மழுக்கக் கூடியதுமாகிய தக்ளியிலும், ராட்டினத்திலும் நூல் நூற்கக் கற்றுக் கொடுப்பதாகிய காரியம் ஒன்று. 

பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்குப் பகுத்தறிவுக்கு இடமில்லாமல், மூட நம்பிக்கையை உண்டாக்கக் கூடிய புராணங்களும், கதைகளும், மத நூல்களும் மாத்திரம் உள்ள திருத்தப்பெறாத பயனற்ற பாஷையான ஹிந்தியைப் போதிக்கச் செய்வதாகிய காரியம் ஒன்று. 

ஆகிய இந்த நான்கு வீர சூர பராக்கிரமத்தனமான காரியங்களுக் காகத் தொண்டைத் தண்ணீர் வற்ற, உயிர் கொடுத்துப் போராடவே காங்கிரஸ் தேசீயப்புலிகள் ஸ்தல ஸ்தாபனங்களுக்குள் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் பிரசார மூலமாகவும், சில ஸ்தாபனங்களில் அவர்கள் கொண்டு வரும் தீர்மானங்களைக் கொண்டும் அறிந்திருக்கிறோம். 

சமீபத்தில் சென்னை நகர பரிபாலன சபையிலும், பள்ளிக்கூடங் களில் ஹிந்தி பாஷையும், சர்க்கா, தக்ளி இவைகளில் நூல் நூற்கக்கற்றுக் கொடுப்பதும் போதிக்கப்படவேண்டும் என்னும் தீர்மானம் காங்கிரஸ் காரர்களால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நம்பிக்கையில்லாத அங்கத்தினர்களும், மேற்படி தீர்மானத்திற்கு எதிராக இருந்தால் எங்கே அடுத்த தேர்தலில் சபையில் அங்கம் பெறாமல் போய் விடுவோமோ என்ற பயத்தினால் ஆதரித்து நிறைவேற்றி விட்டார்கள். 

அன்றியும் மற்றொரு நகரசபையில் தற்போதுள்ள தலைவருடன் காங்கிரஸ்காரர்கள் சமரசம் பேசும்போது கதர், ஹிந்தி முதலியவைகளுக்கு ஆதரவளித்தால் சேர்மன் ஸ்தானத்திற்குப் போட்டியிடுவதில்லை என்று ஒப்பந்தம் பேசினார்களாம். இன்னும் பல நகரசபைகளில், காங்கிரஸ்காரர்கள் என்று இருப்பவர்களும், அவர்களுடைய அனுதாபத்தைப் பெற ஆசைப் பட்டுக் கொண்டிருப்பவர்களும் இவ்விஷயங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அறிகின்றோம். 

 

ஆகவே காங்கிரஸ்காரர்களின் மதச்சின்னங்களாக இருக்கின்ற மேற் கூறிய நான்குமே நகர பரிபாலன சபைகள், தாலூகா போர்டுகள், ஜில்லா போர்டுகள், சட்டசபைகள், யூனிவர்சிட்டிகள் ஆகியவைகளின் முக்கிய மான வேலைகளாக ஆகிவிட்டால் நமது நாடு எப்பொழுது அந்நிய தேசங் களுக்குச் சமத்துவமான நிலையை அடைய முடியும் என்று யோசித்துப் பாருங்கள். 

அந்நிய தேசங்களில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்கள் போன்ற பொது நிலையங்கள் யாவும், நாட்டு மக்கள் அனைவரையும், திடகாத்திரமுடைய அறிவுடைய-சுதந்திரமுடைய - சகோதரத்துவமுடைய - துன்ப வாழ்க்கை நீங்கி இன்பவாழ்க்கையில் வாழக்கூடிய நல்ல நகர ஜனங்களாக்க முயன்று கொண்டிருக்கின்றன. ஆங்குள்ள தேச நன்மையைக் கருதும் அரசாங்கங் களும், கட்சிகளும் தன்னையே தமது கொள்கையாக வைத்துக் கொண்டு வேலை செய்கின்றன. 

ஆனால், நமது நாட்டில் உள்ள இந்த “தியாகிகள்” தேச மக்களை இன்னும் கோழைகளாகவும், அடிமைகளாகவும், சண்டிகளாகவும், மூட நம்பிக்கையுடைவர்களாகவும் இருக்கச் செய்யவே முயற்சி செய்கின்றார்கள். இம்முயற்சிக்கு ஒன்றுந்தெரியாத ஜனங்களில் சிலர் ஏமாந்து, காங்கிரஸ் தொண்டர் என்பவர்கள் தங்கள் மதச்சின்னங்களுடன், பிச்சைக்குவரும் போதும், ஓட்டுக்குவரும்போதும் உதவியும் செய்து விடுகின்றனர். ஒன்றுந் தடை செய்யாமலும், இம்முயற்சியினால் உண்டாகும் லாப நஷ்டங்களை உணராமலும் இருந்து வருகின்றார்கள். ஆகையால், நாம் இந்த நிலை ஒழிந்து ஜனங்கள் உண்மையான அறிவு பெறவும், நமது தேசம் உண்மை யான முன்னேற்றம் பெறவும், எத்தகைய வெற்றிக்கும், தோல்விக்கும், மதிப்புக்கும், அவமதிப்புக்கும் லட்சியம் பண்ணாமல் உழைக்க வேண்டி யதே கடமையாகும், தேசாபிமானமாகும், தேசத்திற்கு - தேசமக்களுக்குச் செய்யும் சிறந்த ஊழியமாகும் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொண்டு இப்பொழுது இவ்வளவோடு நிறுத்துகின்றோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1931

Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.