சென்னிமலையுவர் சங்க ஆண்டு விழா. குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931 

Rate this item
(0 votes)

"வாலிபர்களே ஜாக்கிரதை!" 

"எழுச்சியினால் கண்மூடித்தனமாய் குழியில் விழுந்து விடாதீர்கள் " 

சகோதரர்களே!

உங்கள் சங்க வருஷக் கொண்டாட்டத்தை முன்னிட்டு எனக்கு ஆடம்பரமான வரவேற்பளித்ததற்கும், என்னைத் தலைமை வகிக்கச் சொன்னதற்கும், எனக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்ததற்கும் நான் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டவனாவேன். எனது கொள்கைகளுக்கு ஆதரவு காட்டும் முறையில் அப்பத்திரமிருப்பது பற்றியும், அக்கொள்கையிலுங்களுக்குள்ள பற்றுதல் காரணமாய் எனக்குப் புகழ்ச்சியுரைகள் கூறுகிறீர்களென்று நான் கருதுவது பற்றியும் அப் பத்திரத்தை நான் பெற்றுக் கொள்ளுகிறேன். விழாவின் வரவேற்புக் கமிட்டித் தலைவர் நண்பர் பழனியப்பன் வாசித்த வரவேற்புப் பத்திரத் திலும், பின்பு சங்க அறிக்கைப் பத்திரம் வாசித்துக் கொடுத்த நண்பர் என்.வி. பழனியப்பன் உரையிலும் நமது கொள்கை மிகவும் மலிந்து கிடக்கின்றது. நமதியக்கத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நன்குணர்ந்து அதைச் செயலிலும் செய்து வருகிறீர்களென்பதற் கவைகளே தக்க சாட்சிகளாயிருக்கின்றது. வரவேற்புத் தலைவர் உபன்யாசத்திலுள்ள பெரும் பகுதி விஷயங்கள் யாவும் எனது இன்றைய கொள்கைகளின் தத்துவங்களேயாகும். அதை விட நான் ஒன்றும் புதிதாகச் சொல்லக் கூடுமென்று நீங்களெதிர் பார்க்கமுடியாது. எனினும் அக்கிராசனர் என்கின்ற முறையில் வாலிபர்களுக்குச் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். 

நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களாலேயே தான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவை இன்று உலகில் சகலருமபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெரும் வார்த்தைகளல்ல. இதில் உண்மையில்லா மலுமில்லை . 

ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது, உலகப்பற்று, சுய நலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். “இளங்கன்று பயமறியா” தென்ற பழமொழிக்கொப்ப அவர்களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடையானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்றுவதை பயமின்றி சடுதியில் பற்றுவதாகும். பற்றிவிட்டாலோ தங்கு தடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடிய வர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது. 

எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுயநலமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டிய தவசியமாகும். இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேயொழிய உலகவாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர் களிடத்தில் காணமுடியாது. 

ஏனெனில், பெரியவர்களென்பவர்களுக்குப் பல தடைகளுண்டு. அவரவர்கள் மனம் பழக்கமாகிய வாழ்க்கையிலீடுபட்டு, பணந்தேடவும், பெயர்களைக் காப்பாற்றவும், மேலும் மேலுமுயறவும் ஆசைவந்து படர்ந்து, தியாக எண்ணமே தோன்றுவதற்கில்லாமல் செய்து, சகலத் துறைகளிலும் பயத்தை யுண்டாக்கியிருப்பதாலவர்கள் சிறிதும் பொதுநலத்திற்கும், புதிய காரியங்களைச் சாதிப்பதற்கு முயலாமல் போய்விடுகின்றார்கள். நமது மக்களுக்கு அதாவது பெரியவர்கள், மனிதர்களானவர்களென்பவர்களுக்கு முதலாவது கெட்டகுணம், பயம், இரண்டாவது சுயநலமதிகமேற்படுகின்றது. எப்படியெனில், “நான் செத்துப் போனாலென் பெண்டு, பிள்ளைகளின் கதி என்னவாவது?" "எனது பொருள் தொழில் என்னவாவது?" "என் பெண் டாட்டி, பிள்ளை சொத்து முதலியவைகளைக் காப்பது யார்?” யென்பவைகளாகிய யெண்ணங்களே மனிதனை உலகத்தில் எப்படியாவது வாழ்ந்து கொண்டு வெகுநாட்களுக்கிருக்கவேண்டுமென்று கருதுவதற்காதார மாயிருந்து வருகின்றது. 

"நான் செத்தால் என் பெண்டு, பிள்ளைகளென்னவாவது?” என்கிற யெண்ணமாகிய ஒரு பெரும் விஷமே நமது மக்களின் பொதுநல உணர்ச் சியைக் கொன்றுகொண்டு வருகின்றது. பொதுநல எண்ணம் ஏற்படாமல் செய்து வருகின்றது. நமது பெண்களும், அவர்களது ஆடவர்களை எவ்வித பொதுநல வேலைக்கும் லாயக்கில்லாமல் செய்து விடுகின்றார்கள். எப்படி யென்றால் "ஐயோ! என்கணவ!! என் தெய்வமே!! நீ செத்துப்போனால் நான் எப்படிப் பிழைப்பேன்? இந்தப் பிள்ளை, குட்டிகளை எப்படிக் காப்பாற்று வேன்?” என்று சதா ஜபித்துவரும் மந்திரமே, ஆண் சமூகத்தைக் கோழைகளாக்கி, சுயநலப்பித்தர்களாக்கி, நாணையமும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையை யுடையவர்களாக ஆக்கி வருகின்றது. 

நமது பெண்களுக்குச் சுதந்திரமோ, அறிவோ மற்றவர்களுதவியின்றி தானாக வாழக்கூடிய சக்தியோ மற்றும் ஆண்கள் இந்தப் பெண்ஜாதி போனால், வேறு ஒருத்தியைக் கொண்டு வாழ்க்கையை நடாத்தலாம். இதற்காக அழவேண்டுமா?” என்று எண்ணுகின்றயெண்ணம் போல “இந்த புருஷன் போனால், வேறொரு புருஷனைக் கொண்டு வாழ்க்கை நடத்தலா" மென்கின்ற தன்நம்பிக்கையுமிருந்தால், கண்டிப்பாக இன்று நமது நாட்டிலுள்ள ஆண் மக்களெல்லாம் உண்மையான ஆண் மகனாயிருக்க முடியும். சுதந்திர புருஷனாக, மானமுள்ளவனாக இருக்க முடியும். ஆகவே இந்தப் படியில்லாமல் போனதற்குக் காரணம், ஆண்மக்கள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கைத் துணையானது பயங்காளியாகவும், மூடத்தனம் பொருந்தியதாகவும், தன்நம்பிக்கையற்றதாகவுமிருக்கும்படியான நிலையில் உள்ள பெண்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டதால் தானே தவிர வேறில்லை . 

ஆண், தனக்காக என்று கஷ்டப்படுவதுடன், தனக்காகவே தனது சாவுக்குப் பயப்படுவதோடு, தனது பெண்ஜாதிக்கும், பிள்ளைக்குமாகவும் சாவுக்கும், தீய சத்திற்கும் பயப்பட வேண்டியவனாயிருப்பதால் அவன் பயனற்றவனாகவும், சுயநலமும், பேராசையும், பயங்காளித்தனமுமே உருவ மாகத் தோன்றியவனாகவுமாகி விடுகின்றான். ஆதலால் தான் மனிதன் பொது நலத்திற்கருகதையற்றவனென்று சொல்லப்படுவதுடன் மேல் கண்ட இந்த குணங்களற்ற வாலிபர்களே பொதுநலத்திற்கருகர்களென்றும் சொல்லப்பட்டு வருகின்றது. 

ஆனால், வாலிபர்களெப்படிப் பொதுநலத்திற் கேற்றவர்களென்கின்ற மகிழ்ச்சியும், பெருமையும் மக்கள் அடைவதற்கு லாயக்குடையவர்களா யிருக்கின்றார்களோ, அதுபோலவே அதற்கு நேரிடையாக அவர்கள் விஷயத்தில் நாம் பயப்படும்படி அவர்கள் அந்த வாலிப்பருவ பயனை முன் பின் யோசியாமலெதிலும் செலுத்தி பொது நலத்திற்குக் கெடுதியை விளைவித்துவிடக்கூடிய அபாயகரமான வஸ்துவாக ஆகிவிடுவார்களென்றும் சில சமயங்களில் கருதவேண்டியதாகவும் இருக்கின்றது. 

ஏனெனில், அவர்களது பரிசுத்தமான உள்ளம் எதில் பற்றுகொண்டாலும் துணிந்து, நன்மை தீமையின்னதென்று கூட யோசியாமல் திடீரென்று பிரவேசித்து விடக்கூடிய சுபாவமுடையதாகி விடுகின்றது. 

எதுபோலவென்றால் நமது சிறுபிள்ளைகள் தங்கள் விளையாட்டுக்காக, எப்படி அவ்வப்போது காணப்படும் காரியங்களை யாதாரமாய்க் கொண்டு விளையாடுகின்றார்களோ, அதாவது ஒரு ஊரில் அல்லாசாமிப் பண்டிகை வந்தால் அந்தப்பண்டிகைத் தீர்ந்து பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதம் வரையிலும் எல்லாப் பையன்களும் புலிவேஷம் போல் சதா ஆடிக்கொண்டிருப்பதும், மாரியாய் பண்டிகை வந்தால், மாரியாய்ப் பண்டிகை தீர்ந்த ஒருமாதம் வரையிலும் ஆண்டியைப்போல் நெருப்பு ஓடு எடுத்து ஆடுவதுபோல் ஆடுவதும், புரட்டாசி மாதம், மார்கழி மாதம் பஜனை காலம் வந்தால் அம்மாதங்கள் தீர்ந்து ஒரு மாதம் வரையிலும் பஜனைப் பாடுவதுமாகிய காரியங்களையே தங்கள் விளையாடல் களாகக் கருதுகின்றார்களோ அதுபோலவும், நாடகக்காரன் வந்து ஒன்று, இரண்டு மாதங்கள் நாடகமாடிவிட்டு போனால், அந்நடிகர்கள் ஊரை விட்டுப்போய் ஒன்று அல்லது இரண்டுமாதங்கள் வரையிலும் அந்தப் பாடல்களையும் ஆட்டங்களையும் பையன்களாடிக் கொண்டிருப்பது போலவும், நமது வாலிபர்கள் அவர்களுக்குக் காணப்படும் காரியங்களிலும், ஸ்தாபனங்களிலும், இயக்கங்களிலும் வீழ்ந்து, அவற்றையே தங்களது வாலிபப் பருவத்தினாலேற்படும் பயமற்றதும், சுயநலமற்றதும், தியாகத்திற்கு தப்பாயிருப்பதுமான அரிய குணத்தைப் பயன்படுத்திவிடுகின்றார்கள். இந்த மாதிரி பயன்படுத்தப்பட்டக் காரியங்களின் பயன் தான் இன்று பல வாலிபர்கள் தாசி வீடுகளில் திரிந்துகொண்டு, தங்கள் நேரத்தையும், சரீரத்தையும், செல்வத்தையும் பாழாக்கிக் கொண்டு திரிவதும், அதுவே அந்த வாலிபன் ஜன்மமெடுத்ததின் பயனென்று கருதுவதும், அவர் சார்ந்திருக்கும் அந்த தாசிக் கூட்டங்கள் சொல்லுமுபதேசங்களும், நடவடிக்கைகளும் அவர்களுக்கு உண்மையாய்த் தோன்றுவதற்கும் காரணமாயிருந்து வருகின்றன. அதுபோலவே மற்றும் பல வாலிபர்கள் குடி, காலித்தனம், சீட்டாட்டம், குதிரைப்பந்தயம் முதலிய சூதாட்ட மென்பதும், தெய்வபக்தராவதும், மதபக்தராவதும், மதப்பூச்சுகள் பூசுவதென்பதும், படிப்பதென்பதுமாகிய அநேக காரியங்களிலீடுபடுவதுகளும் ஆகிவிடுகின்றன. வாலிப வயதிலுள்ள எழுர்சியும், வேகமும், பயமற்றத்தன்மையும் பொறுப்பெது வென்றுணர்வதற்குப் போதிய அவகாசமும், சௌகரியமும், அனுபவமுமில்லாத காலபலனும் அவர்களையேதாவது கண்மூடித்தன மானக் காரியங்களிலிழுத்து விட்டு, அருங்குணங்களை வீணாக்குவதோடு, பின்னாலும் அவர்களது வாழ்க்கையில் கஷ்டப்படவும் செய்து விடுகின்றன. ஆதலாலேயே சிற்சில சமயங்களில் நான் வாலிபர்கள் "ஜாக்கிர தையாகவே” யிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லுவதுடன், அவர்களது வேகம் பொருந்திய ஊக்கம் சிற்சில சமயங்களில் பாயகரமாய் நாட்டுக்குப் பயனற்றதாய் சில சமயங்களில் கெடுதியையும் ஆபத்தை யுமுண்டாக்கக் கூடியதா யேற்பட்டு விடக்கூடுமென்று சொல்லுவதுமுண்டு. அவர்களது எழுர்ச்சியின் வேகத்தினால் செய்யப்பட்டக் காரியங்கள் அவர்களுக்குப் பலன் கொடுக்காததாலோ அல்லது அக்கம் பக்கத்திய சார்பால் வேறுவித யெண்ணங்கள் தோன்றிவிடுவதாலோ, அதாவது தாங்கள் சகவாசம் செய்தவர்களுடைய சகவாச தோஷத்தால் மற்றும் சுயநலமோ, பெருமையோ யேற்படுத்திக் கொள்ள வேண்டுமென்கிற ஆசையேற்பட்டுவிடுகின்ற காரணத்தால், அவர்களது முன்னைய வேகத்தின் பலனானது கெடுதியை (Reaction) யும் சில சமயங்களில் உண்டாக்கி விடுகின்றது. அதாவது, வேகமாய் போகும் எழுர்ச்சியென்னும் வண்டியானது அனுபோகமின்மை அறியாமை சுயநலமென்னும் சுவற்றில் முட்டினால், வேகத்தின் மிகுதியினால் சுவரும் கெட்டு, வண்டியும் பழுதாகி, அக்கம்பக்கத்தவர்களுக்குத் தொல்லையையும் விளைவித்து விடுகின்றது. 

இத்தியாதி காரணங்களால் வாலிபர்கள் மிக்க ஜாக்கிரதையாக, பொறுமையாக யோசித்தே ஒவ்வொரு காரியத்திலும் தங்களருங்குணங்களைப் பயன்படுத்தவேண்டும். வாலிபர் உள்ளம் பெட்ரோலுக்குச் சமமானது. உலக இயக்கத்தோற்றங்கள் நெருப்புக்குச் சமமானது. வகையற்ற முறையில் பக்கத்தில் வந்தால் நெருப்புப் பிடித்து எண்ணையை வீணாக்கி மற்றவர்களுக்குத் தொல்லையை விளைவித்து விடும். ஆகவே "வாலிபர்களே! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! ” யென்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டியவனாக யிருக்கின்றேன். 

இன்று இங்கு கூடியிருக்கும் வாலிப சங்க ஆண்டு விழா வரவேற்புத் தலைவருரையும், காரியதரிசியவர்களறிக்கையுரையும் நான் கேட்ட வரையிலெனக்கு சரியென்று பட்டவிஷயங்கள், கொள்கைகள் முதலியவைகளையே அவர்களும் தங்களது கொள்கையாகவும், நோக்கமாகவும் கொண்டிருப்பதாகயுணர்கிறேன். ஒன்று அவை சிறிது அபிப்பிராய பேதத்திற்கிடமானதாகவிருக்கலாம். ஆனாலும் எல்லாவற்றையுமே இன்னமுமாராய்ந்து பார்க்கும்படியும், அவர்களுக்குத் தோன்றுமனு போகஸ்தர்களைக் கொண்டும் சுயநலமற்றவர்களைக் கொண்டும், முன்பின் நடவடிக்கையை யாராய்ச்சி செய்ய சௌகரியமுள்ள வழிகாட்டி மனிதர்களைக் கொண்டும் அக்கம் பக்க தேசநிகழ்சிகள் அவற்றின் அனுபவங்கள் ஆகியவைகளைக் கொண்டும் விஷயங்களை அறிந்து; தங்கள் கொள்கைகளையும், திட்டங்களையு முறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாய் விரும்புகின்றேன். இவைகளைத்தான் நான் என்னை மதிக்கும் வாலிபர்களுக்குச் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது. 

வாலிப பருவத்தின் கோலத்தையும், அதனது பலனையும் நான் சிறிது அறிந்தவனேயாவேன். வெகுகாலம் நான் வாலிபனாகவிருந்தவன். வாலிபனாகவேயிருந்து சாகவேண்டுமென்ற ஆசையை யுடையவன். அப்பருவத்தின் சக்தியையும் மேன்மையையுமனுபவித்தவன். அந்த அனுபவம் தப்பான வழியிலுமிருக்கலாம் சரியான வழியிலுமிருக்கலாம். ஆனால், நான் வாலிபப்பருவத்தை அனாவசியமாய் விட்டு விடாமல் அதைப்பல வழிகளில் கசக்கிப் பிழிந்தவன். இந்த உண்மை மற்றர்களைக் காட்டிலும் நீங்களும், உங்கள் பெரியோர்களும் நன்றாயுணர்ந்தவர்களா வீர்கள். ஏனெனில், நான் உங்களிலொருவனாகவும், உங்கள் குடும்பஸ்தர் களிலொருவனாகவுமிருந்து வந்தவன். ஆகவே, இங்கு , இவ்வளவு தைரியமாய் எனது சகோதரர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லுவது போல் இவ்விஷயத்திலுங்களுக்கு இவ்வளவு எச்சரிக்கை செய்கின்றேன். 

மேலும் சகோதரர்களே! நமது நாடு இன்று இருக்கும் நிலைமையிலிருந்து சிறிது மாற்றமடைய வேண்டுமானாலும் மதசம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இந்நாட்டில் சுயநலக்காரரும், சோம்பேரிகளும், மற்றவர்கள் உழைப்பில் வாழ முடிவு செய்து கொண்டு தங்கள் வாழக்கையை நடத்தி வருபவர்களும் இரண்டுவித உணர்ச்சியால் மக்களை கட்டுப்படுத்தி மூடர்களாக்கி, அடிமைகளாக்கி வைத்து பயன் பெற்று வருகின்றார்கள். அவை எவை எனில் மத இயல் அரசியல் என்பவை களாகும். மதத்தின் பெயரால் மோக்ஷலக்ஷியமும் அரசியலின் பெயரால் சுயராஜ்ஜிய லக்ஷியமுமே மனிதனின் வாழ்நாளில் முக்கியமானது என்று மக்களுக்குள் புகுத்தப்பட்டு விட்டது. இரண்டு விஷயத்திலும் பிரவேசித்து இருக்கும் மக்களில் 100க்கு 90பேர் இரண்டுக்கும் அருத்தம் தெரியாதவர்களாகவே அதில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். பொருள் தெரிந்த சில பெயர்கள் தங்கள் சுய நலத்தை உத்தேசித்து அவற்றை வியாபாரமாய் நடத்தி வருகின்றார்கள். 

மக்களின் சுபாவம் பொருள் தெரிந்த காரியத்திற்கு பயப்படுவதை விட பொருள் தெரியாத காரியத்திற்குத்தான் அதிகம் பயப்படும். ஏனெனில் பொருள் தெரிந்த காரியங்களுக்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடுமான தினால் அதற்குப் பயப்பட மாட்டான். பரிகாரம் செய்து கொள்ள முடியாத தற்கே அதிகம் பயப்படுவான். 

அதுபோலவே ஒரு வீட்டுக்குள் பிரவேசிப்பவனுக்கு அவனைப் பிரவேசிக்காமல் இருக்கச் செய்ய "அங்கு தேள் இருக்கும் பாம்பு இருக்கும்” என்று சொன்னால் அவன் அதற்குப் பயப்படாமல் கையில் தடியையும், காலில் பூட்சையும் போட்டுக்கொண்டு உள்ளே பிரவேசிக்கத் துணிந்து விடுவான். அல்லது கையில் நெருப்புப் பந்தத்தை எடுத்துக் கொண்டாவது பிரவேசிக்கத் துணிந்து விடுவான். ஏனெனில் தேளைப் பற்றியும், பாம்பைப் பற்றியும் அவனுக்குத் தெரியுமாதலால் அவைகளின் கஷ்டத்தில் இருந்து விலக ஏற்பாடு செய்து கொள்ளத் தெரியும். ஆனால் அதே வீட்டில் பிசாசோ, பூதமோ இருப்பதாகச் சொல்லிவிட்டால் அந்த வீதியில் நடக்கக்கூட பயந்து கொள்ளுவான். என்ன சொன்னாலும் அந்த வீட்டில் இருக்க சம்மதிக்கவே மாட்டான். காரணம் என்னவென்றால் பிசாசு, பூதம் என்பது இன்னது இன்ன மாதிரியாய் இருக்கும் என்கின்ற விபரம் அவனுக்குத் தெரியாது. ஆதலால் அதிலிருந்து தப்ப உபாயம் செய்துகொள்ள அவனுக்கு முடிவதில்லை. அதுபோலவேதான் மனிதனுக்கு மோட்சம் என்பது என்ன? சுயராஜியம் என்பது என்ன? என்று தெரிந்திருந் தால் அவற்றின் பேரால் இவ்வளவு மக்கள் ஏமாந்திருக்க முடியாது. அருத்தம் தெரியாததையும் மனதில் பட முடியாததையும் பிரசாரம் செய்வ தால் மக்கள் ஏமாந்து விடுகின்றார்கள். ஏதோ தனக்கு பெரிய லாபம் வருகின்றது என்று கருதுகின்றான். வியாக்கியானம் செய்து பார்க்கும்படி சொன்னால் மோக்ஷத்தையும் சுயராஜியத் தையும் பற்றி அனேக "பெரியார்கள்” ஏற்கனவே சொல்லி இருப்பதால் அதைப்பற்றி சந்தேகப் படுவதோ அல்லது விளக்கிக்கொள்ள ஆசைப்படுவதோ குற்றமானது என்று கருதுகின்றான். 

இந்த மனப்பான்மையிலேயே தான் மனிதன் வாழ்க்கையை நடத்து கின்றான். இதனாலேயே தான் பாமர மக்கள் சிறிதும் தலைதூக்க முடியாமல் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றார்கள். "பகுத்தறிவைப் பயன்படுத்து வதே பாவம்'' என்று சொல்லப்பட்ட ஒரு ஆயுதமே மக்களை அழுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமற்ற உண்மையற்ற சொற்களுக்கு நடுங்கச்செய்கிறது. உதாரணமாகப் பாருங்கள். மனிதனுடைய மூடத் தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன். 

மனிதன் திருடுவான், நம்பிக்கை துரோகம் செய்வான், மோசம் செய் வான், கொலையும் செய்வான். ஆனால் ஒரு பறையன் கொண்டுவந்த தண்ணீரை தொட்டு குடி என்றால் நடுங்குவான். 

பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கை துரோகம் செய்வதைவிட, பதரப்பதர கொலை செய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது. ஆனால் இவற்றையெல்லாம் பஞ்சாமிருதம் சாப்பிடுவதுபோல் செய்து விட்டு பறையனை திண்ணையில் உட்கார வைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள்தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள் மதமுறைகள் மோட்ச நரக முறைகள் அமைக்கப் பட்டிருக்கின்றது என்று பாருங்கள். இதுபோலவே அரசியலிலும் அரசாங் கத்தாருக்கு அனுகூலமாக இருக்கின்றவர்கள் யார்? யாருடைய துரோகத் தால், சுயநலத்தால் இந்நாட்டில் அக்கிரமமான அரசாங்கம் இருந்து வரு கின்றது? என்பவைகளை முக்கிய காரணமாய் உணர்ந்து அந்ததுறையில் ஒரு சிறு வேலையும் செய்யாமல் பாமர மக்களிடம் சுயராஜிய வியாபாரம் நடத்துவது என்பதை மக்கள் உணர முடியாமல் இருப்பதோடு உணர்ந்து சொல்லுகிறவர் களையும் மக்கள் வெறுக்கும்படி செய்யப்பட்டிருக்கின்ற தென்றால் அரசியலின் பேரால் மக்கள் எவ்வளவு முட்டாள்கள் ஆக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். உங்கள் அறிக்கையில் கண்ட விஷயங்களைப்பற்றியே எடுத்துச்சொல்லி வருவதில் மேலும் கிராம புனருத்தாரணம் என்பதைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். 

கிராம புனருத்தாரணம் 

கிராம புனருத்தாரணம் என்பது கிராமங்களின் பழைய நிலைமைகளை மறுபடியும் புதுப்பிப்பது என்கின்ற அருத்தத்தில் வேலை செய்வதானால் இனி இந்த தேசத்தில் கிராமம் என்பதே இல்லாமல் போய்விடும். 

அந்தப் படி இல்லாமற்போவதே மேல். இருக்கும்படி செய்யவேண்டு மானால் கிராமத்திற்குள் புதிய தன்மைகளை புகுத்தவேண்டும். நமது கிராமங்களைப்பற்றி மேயோ சொல்லி இருக்கும் முறைகள் தான் நமது பழைய கிராம நிலையாகும். நமது அரசியல் துறையில் பாடுபடும் பெரியார் ஒருவர் சமீபத்தில் ஒரு கிராமத்தைப்பார்த்து “ இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்குப் பழைய கால கிராம காக்ஷி தென்படுகின்றது. நானும் ஒரு கிராம வாசியானதால் பழைய கிராமக்காக்ஷியைக் கண்டு மகிழ்ச்சி அடை கின்றேன் என்பதாகப் பேசினாராம். 

பழைய மாதிரி கிராமம் இருப்பதனால் கிராமங்கள் ஒழிந்தே போய் விடும். யாரும் கிராமத்தில் இல்லாமல் எல்லோரும் பட்டணங்களுக்கே குடியோடிப் போவார்கள். 

கிராமங்களை பட்டணமாக்க வேண்டும். பட்டணவாசிகளின் வாழ்வு முழுவதும் கிராமவாசிகளின் உழைப்பேயானதால் கிராமவாசிகளே தான் உலகபோக போக்கியங்களை அடைய உரியவர்களாவார்கள். 

கிராம வாழ்க்கை ஒரு விதம் நகர வாழ்க்கை ஒரு விதம் என்பது பித்தலாட்டக்காரியமேயாகும். கிராமவாசிகளைப்பார்த்து கண்ணீர் வடிக்கும் பட்டணவாசியான முதலாளியும், வக்கீலும், உத்தியோகஸ்தனும், பார்ப்பனனும் பித்தலாட்டக்காரர்களேயாவார்கள். அவர்களது வஞ்சகமும், கெட்ட எண்ணமும்தான் கிராம வாசிகளான பெரும்பான்மை மக்களை கால்நடைகளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு விஷயத் திலும் கவலை கொண்டு பகுத்தறிவைப் பயன்படுத்தி தக்க முறையில் சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறேன். 

குறிப்பு: 28.06.1931 ஆம் நாள் சென்னிமலைநகர் போர்டு பள்ளியில் நடைபெற்ற சென்னிமலை யுவர் சங்க ஆண்டு விழாவில் தலைமையேற்று ஆற்றிஉரை 

குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931

Read 129 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.