பல்லாவரப் பொது நிலைக்கழகக் கூட்டம். குடி அரசு - தலையங்கம் - 15.021931 

Rate this item
(0 votes)

சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அவை ஒரு அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக் கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக்கூடியதாக வுமிருப்பதால் அதைப்பற்றி சில குறிப்பிடுகின்றோம். 

இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக் கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம் கொடுக்கின்றன. 

பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை 

திருவாடுதுரை திருபனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் தீர்மானங் களும், தமிழுக்கும், சைவத்திற்கும், மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டு மென்னும் வேண்டுகோள் தீர்மானமும். மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்மந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும். அவை கோவிலுக்குள் யெல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்கவேண்டும்,.

ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும், கோவில்களில் தேவதாசி முறை கூடாது.

அனாவசியமானதும் அதிக செலவானதும் சமயக் கொள்கைக்கும் அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்திவிட வேண்டும். 

சாரதா சட்டத்தை உடனே அமுலில் கொண்டுவர வேண்டும்.

பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை வழங்க வேண்டும்.

சாதி வித்தியாசம் பாராமல் கலப்பு மணம் செய்து கொள்ளலாம். 

விதவா விவாகம் செய்யப்படவேண்டும். இவைகளுக்குச் சமய ஆதாரங்களில் இடமிருக்கிறது. 

அன்றியும் இக்காரியங்கள் அறிவுக்கும். ஒழுக்கத்திற்கும் ஏற்றவை யாகும். 

என்பதாகத் தீர்மானித்திருப்பதோடு மற்ற காரியங்களிலும், அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதது எதுவாயினும் அது முதநூவாயிருந்தாலும் (அதாவது கடவுள் வாக்காகவோ வேத கட்டளை யாகவோ இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ளமுடியாது என்பதாகவும் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது அதாவது பகுத்தறிவையும் நியாயமாகிய ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்டதோடு அக்கொள்கைகள் அவர்கள் கருதும் கடவுள் வாக்குக்கும் வேத மறைக் கட்டளைக்கும் விரோத மானாலும் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை என்பதாகத் தீர்மானித்திருப் பதிலிருந்து மாறுதல் வேண்டுபவர்களுக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இனி சைவம் என்பது எது அதன் கொள்கை அல்லது தத்துவம் என்பவை எவை என்பதைப் பற்றி நமக்கு இப்போது அதிகக் கவலையில்லை. ஏனெ னில் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் பொருத்தமானவைகளை ஒப்புக்கொள்வ தும், பொருத்தமற்றவைகள் எதுவானாலும் தள்ளிவிடுவதும் என்கின்ற தன்மை ஏற்பட்டுவிட்டால் அந்தக் கொள்கைகள் கொண்ட எந்தச் சமயத்தினி டமும், எந்தக் கூட்டத்தினிடமும் நமக்கு தகராரில்லை. மற்றபடி இனிமேல் அறிவு எது? ஒழுக்கம் எது நியாயம் எது? என்பது போன்ற சில விஷயங்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். இவைகள் மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம், நிலைமைக்கு நிலைமை வேறுபடத் தோன்றலாம். வேறுபடலாம். ஆனபோதிலும் இந்த வேறுபாடு மனிதசமூக மொத்தத்திற்கும் பொருத்தமானதே ஒழிய சைவத்திற்கு மாத்திரமோ, ஒரு தனிக்கூட்டத்திற்கு மாத்திரமோ ஏற்படக்கூடியதல்லவானதால் அதைப் பொது அபிப்பிராய வேறுபாடாகக்கருதி அவர்களுடைய ஒத்துழைப்பை ஏற்றுக் கொண்டு நடுநிலையில் இருந்து விவாதிக்கத் தாராள உரிமையும், சௌகரி யமும் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றோம். 

முடிவில் பல்லாவரத் தீர்மானங்கள் சைவர்கள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் வேறு தத்துவார்த்தமில்லாமல் ஒப்புக்கொள் ளும் தீர்மானங்களானால் அவர்களைப் பொருத்தவரையில் பொருத்தமான விஷயங்களில் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித் துக்கொள்ளுகிறோம். 

பல்லாவரம் அடிகளை நாம் ஆதியிலேயே முரட்டுச் சைவர்களோடும், புராணப்பிழைப்புப் பண்டிதர்களோடும் சேர்த்ததேயில்லை. 

அடிகளுடைய பழைய ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும் முற்கூறிய கொள்கை களை அடிப்படையாகக்கொண்டது என்பதும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலருக்காவது சீர்திருத்த உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும் ஏற்பட்டிருக்குமானால் - பண்டிதக் கூட்டத்தார் களில் எவருக் காவது பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருக்குமானால் அது பெரிதும் திரு. மறைமலை அடிகள் சாரலாகத்தானிருக்குமென்றும் கருதியிருந்ததோடு நாம் எவ்வெத்துறையில் எவ்வித மாறுதல்கள் விரும்பு கின்றோமோ அத்தனைக் கும் அடிகள் ஆதரவளிப்பார் என்று நம்பியும் இருந்தோம். எரிதல் காரண மாய் சிலர் பல காரணங்களால் - பல சூட்சிகளால் அடிகளை சறுக்கலில் இழுத்து விட்டார்கள். எனினும் அடிகள் முற்றிலும் சறுக்கி விடாமல் தன் ஆற்றலையே பிடித்துச் சமாளித்துக் கொண்டார். இதற்கு உதாரணம் வேண்டி யவர்கள் திருநெல்வேலி சைவப் பெரியார் மகாநாட்டிற்கும் திருப்பாதிரிப் புலியூர் மகாநாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் திருபாதிரிப் புலியூரில் அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவையும் நோக்கினால் உண்மையுணரலாம். எனவே இவை நமக்கறிவிக்கப்பட்ட பல்லாவரப் பொது நிலைக்கழகத் தீர்மானங்கள் என்பவைகளைக்கொண்ட அபிப்பிராயமேயாகும். மற்றவை முழு நிகழ்ச்சிகளையும் அறிந்த பின்னர் விபரமாய் தெரிவித்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளோம். 

குடி அரசு - தலையங்கம் - 15.021931

Read 35 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.