வைதீகர்களின் முட்டுக்கட்டை. குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.06.1932 

Rate this item
(0 votes)

உலகமெங்கும், 'சுதந்திரம்' 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', 'விடுதலை' என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சி யினால், மதக் கோட்டைகளும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணாசிரம தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவுக் குண்டுகளால் அடியோடு பெயர்த் தெறியப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதீகப் பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழய பஞ்சாங்கக் கட்டுகளையும், சாத்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக்கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதீகப்பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-6-32 ல் தஞ்சை ஜில்லா திருவிடமருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங் களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதீக மக்களின் போக்கையும் கவனிப்போம். 

பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளையெல்லாம் கண்டித்தும், பெண்கள் மகாநாடுகளெல்லாம் மேல் நாட்டுக் கல்வி கற்ற பெண்களால் கூட்டப் படுகின்றதென்றும், அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமூகப் பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களுடைய அபிப்பிராயங்கள் இந்தியப் பெண்களின் அபிப்பிராயம் அல்ல வென்றும். ஜன சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதீகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந்திரமும், 

 

சொத்துரிமையும், கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்த பின் தங்கள் விருப்பப்படி மணஞ் செய்து கொள்ளும் உரிமையும். விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனு டைய கொடுமையையோ நடத்தையையோ சகிக்கமுடியாத போது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்தரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைகளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல் பெண்களை மணம் செய்வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள் தங்கள் இயற்கை உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத் தனமாக அன்னிய புருஷருடன் இன்பம் அனுபவித்துக் கற்பமாகிக் குழந்தை பிறந்த பின் அதைக் கழுத்தை முறித்துக்கள்ளிக் காட்டிலோ, சாக்கடையிலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரி மையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாபகரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ் செய்யும் காரியந்தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? 'மதம்' பழக்கவழக்கம்' என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக்கும் அறிவாலிகளால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிறதென்பதை பகுத்தறிவாளர் மறுக்க முடியுமா? இவற்றை யுணராத வைதீகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங்களும் போய்விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்து கிறார்கள்? 

அடுத்தபடியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர்மானத்தில் குருவாயூர் முதலிய இடங்க ளில் நடைபெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் சனாதன தர்மமும் இந்து மத சம்பிர தாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமூகத்தில் கலகமும் வேற்றுமைகளும் உண்டாகுமென்றும் ஆகையால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதென்று எச்சரிக்கை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள் கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள்தனத்தைப் போக்க பாடுபட வேண்டிய கஷ்டத்தையும் ஆலோசித்துப்பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுவதை விட கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும் எடுத்துக் கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காகச் செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன் தரக்கூடியதென்பதே நமது அபிப்பிராயமாகும். ஜனங்கள் கோயில்களுக்குப் போவதையும், அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப் பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில் களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதீகர் களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார் கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத்திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டி ருக்கும் வரையிலும் கோயில்களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங் களுக்குக் கேடும். சோம்பேறி வைதீகர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும். ஆகையால் கோயில்களை ஒழிப் பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், கோயில்களாகட்டும். குளங்க ளாகட்டும், மற்ற எந்த பொது ஸ்தலங்களாகட்டும். அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனதுடன் ஆதரிக்கின்றோம். பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற்றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக்கின்றோம். 

அடுத்தபடியாக, 'மத உரிமை' பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்தக் கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும் மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும், சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதீகர்களின் மனப்போக்கின் படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங் களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங் கத்தின் முக்கிய கடமையாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம் இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அன்னிய மதத்தினரை யெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒரு மத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவியையும் காஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களைப் பொட்டுக்கட்டி விட்டு விபசாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும், நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கும் சோம்பேரிகள் ஆதிக்கம் செலுத்தும் மதவுரிமைக்கு. (அக்கிரமத்திற்கு அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? ஆகையால் தேசம் நன்மை யடைய வேண்டுமானால், மதவுரிமை, சாதி உரிமை, பழக்க வழக்கம் என்ப வற்றையெல்லாம் மூட்டைக்கட்டி "அட்லாண்டிக்” பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத் தகைய அரசியல் சீர்திருத்தம் வருவதாயிருந்தால்தான் சுயமரியாதைக் காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதீகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ்காரர்கள் கேட்கின்றபடியும், மதப் பாதுகாப்புள்ள சீர்திருத்தம் எது வந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும். மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமூக சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆதலால், வைதீகர் கள் வேண்டும் மதப்பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச் சரிக்கை செய்கின்றோம். 

அடுத்தபடியாக, சாரதா சட்டத்தைக் கண்டித்தும் இச்சட்டத்தை இந்து சமூகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோத மென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய்யவோ அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத்திலேயே, சாரதா சட்டத்தை இந்து சமூகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதீகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச்சட்டம் உண்மையிலேயே ஜனசமூகத்திற்கு நன்மை யளிக்கக் கூடியதென்பதை அறிந்து தானே பலரும் ஆதரிக்கின்றார்கள். அப்படி யிருக்க ஏன் இவ் வைதீகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? 'மதம்' என்ற குருட்டுத்தனம் தானே இவர்களுடைய அறிவை நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர்களுடைய தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம். 

கடைசியாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதாவது "வேதம் ஆகமம் முதலியவைகளை பிரசாரம் பண்ணுவதற்கும். புரோகிதர், கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதீக காரியங்களுக்கு அழிவு வராமல் காப்பாற்றுவதற்கும், வருணாச்சிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும், இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும், மாணாக்கர்களிடம் வைதீக ஒழுக்கங்கள் உண்டாவதற்காகச் சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் “தர்ம ஊழியர் சங்கம்” என்னும் ஒரு ஸ்தா பனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுகளையும். அர்ச்சகர்களின் அயோக்கியத்தனங்களையும், வருணாச்சிரம தர்ம அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில், நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டு கிறோம். உண்மையில் இவர்களுக்கு தேசத்தின் மீது கவனமோ, ஏழை களின்மேல் னுதாபமோ மற்ற தேசங்களைப் போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டும் என்னும் ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டிப்பிற்போக்கான தீர்மானங்களைச் செல்வார்களா? என்று தான் கேட்கி றோம். பணபலமும். பத்திரிகை பலமும் செல்வாக்குப் பலமும் படைத்த வைதீகப் பார்ப்பனர்கள் இப்பொழுது தீர்மானித்திருக்கிறபடி, பலதுறை களிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும், பார்ப்பனர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும் கூடும். ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்நிலையில் பார்ப்பனர்களின் வைதீகப்பிரசாரம், ஒரே முறையில் செய்யப் படும் சுயமரியாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம். ஆகையால் எங்கும் பகுத்தறிவும். விடுதலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்க நினைப்பதும், அதற்காக மகாநாடு கூட்டுவதும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத்தகைய அழுக்குமூட்டை வைதீகர்களைக் கண்டிக்காத தேசீயப்புலிகள் நம்மைத் தேசீயத்துரோகிகள்” என்றும் "சுயராஜ்ய விரோதி கள்” என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா? இனியேனும் யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர்க ளென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.06.1932

 
Read 95 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.