வாக்குரிமை. குடி அரசு - தலையங்கம் - 20.03.1932 

Rate this item
(0 votes)

சுதந்தரம் பெற்ற ஒரு தேசத்தின் அரசாங்கம் நன்றாய் நடைபெறுவ தற்கு முதன்மையான காரணமாயிருப்பவர்கள் வாக்காளர்களே யாவார்கள். உள்நாட்டுக் கலகங்கள் ஒன்றும் இல்லாமலும், வெளி நாடுகளுடன் சண்டைச் ச்சரவுகளில்லாமலும் நடைபெறுவதாக மாத்திரம் இருக்கின்ற அரசியலை நல்ல அரசியல் என்று கூறிவிட முடியாது. நியாயமாக ஆளுகின்ற அரசாங் கத்தாலும் அமைதியோடு ஆட்சி புரிய முடியும். கொடுங்கோல் ஆட்சி புரிகின்ற அரசாங்கத்தாலும் அமைதியோடு ஆளமுடியும். கொடுங்கோல் அரசாங்கம் பணக்காரர்களையாதரித்து அவர்களுக்குப் பட்டம் பதவிகளை யளித்து ஏழை மக்களையடக்கி யாண்டால் நாட்டில் எந்தக் கலகமும் உண்டா காமல் தடுக்க முடியும். ஆதலால் நல்ல அரசாங்கமென்பது ஏழை பணக்காரர் என்ற வேறு பாடில்லாமல் எல்லா மக்களும் சம சுதந்தரமுடையவர்களாக வாழும் படியும். தேசத்தில் உள்ள வறுமை, பிணி முதலியவைகளைப் போக்கியும் நன்மை செய்கின்ற அரசாங்கமேயாகும். 

இம்மாதிரியான நல்ல அரசாங்கம் என்பது ஒன்று நடைபெற வேண்டு மானால், அதன் நிர்வாகிகள் சமதர்ம நோக்கமுடையவர்களாகவும், காலதேச வர்த்தமானங்களையறிந்து ஆட்சி புரியக் கூடியவர்களாகவும், மாறாத, உறுதி யான, நன்மையான கொள்கையுடையவர்களாகவும், எவ்வளவு கஷ்டமான காலத்திலும் மனத்தளர்ச்சியும், அச்சமும் இல்லாமல் தமது பொறுப்பையு ணர்ந்து நடக்கின்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய சமதர்ம நோக்கமுடையவர்களை அரசாங்க நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பது வாக்கா ளர்களின் கடமையாகும். ஆகையால் தான் நல்ல அரசாங்கம் ஏற்படுவது வாக்காளர்களைப் பொறுத்த விஷயமாகும் என்று கூறினோம். 

ஆகவே ஒரு நாடு சுதந்தரம் பெறுவதற்கு முன்பே அந்நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு அரசியல் விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் வாக்கின் பெருமையை உணரமுடியும். வாக்காளர்கள் தங்கள் வாக்கை அலட்சியமாகக் கருதக் கூடாது. அதனுடைய உண்மையான பெருமையை உணர்ந்திருத்தல் வேண்டும். இத்தகைய அறிவு பெற்ற வாக்காளர்கள்தான் மேற்கூறிய சிறந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களாயிருப்பார்கள்.

மேல் நாடுகளில், சுதந்தரம் பெற்ற நாடுகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்கின் பெருமையை உணர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு அரசியலின் பெருமையையும், அதனால் உண்டாகும் பலா பலன்களும் தெரியும். ஆகையால் அவர்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை யறிந்து, தங்களுக்குப் பிடித்த கொள்கைகளையுடைய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் வாக்களிக்கின்றனர். 

ஆனால் தற்சமயம் நமது நாட்டில் சிறுபான்மையோராக இருக்கின்ற வாக்காளர்களில் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளவில்லையென்றே கூறலாம். நகர சபைத் தேர்தல் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் வாக்கின் மதிப்பு 5 ரூபாய்க்கு மேற்பட்டதென்றும், தாலுகா போர்டுத் தேர்தல் வாக்காளர்கள் தங்கள் வாக்கின் மதிப்பு 1 ரூபாய்க்கு மேற்பட்டதென்றும், சட்டசபைத் தேர்தல் வாக்காளர்கள் தங்கள் வாக்கின் மதிப்பு 8 அணாவுக்கு மேற்பட்ட தென்றும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்களே யொழிய வேறுவகையில் அதன் உண்மையான மதிப்பை உணரவில்லை. ஜில்லா போர்டுத் தேர்தல் வாக்காளர் கள் தங்கள் வாக்கை எவ்வளவு மதிப்புள்ளதாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். 

இவ்வாறு வாக்காளர்கள் தவறான உணர்ச்சியுடையவர்களாயிருப் பதற்குக் காரணம் நமது நாட்டு அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களுமே யாவார்கள். வாக்காளர்களை அறிவுடையவர்களாகச் செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளுடையவும், அவைகளின் தலைவர்களுடையவும் கடமை யேயாகும். ஆனால் நமது நாட்டு அரசியல் கட்சிகள் யாவும் இதுவரையிலும் தமது உறுப்பினர்களுக்குத் தேசீயத்தின் பெயரால் பட்டம் பதவி உத்தியோகம் செல்வாக்கு முதலியவைகளைத் தேடிக் கொடுப்பதில் முதன்மையான கவனத்தைச் செலுத்தி வந்து கொண்டிருக்கின்றவே யொழிய வாக்காளர் களைச் சீர்திருத்துவதில் எந்தக் கட்சியும் கவனஞ் செலுத்தவே யில்லை யென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமேயாகும். 

நாகரீகம் பெற்ற மேல் நாடுகளில், தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் அபேட்சகரை நிறுத்துகின்றனர். ஒரு கட்சியின் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுகின்ற வர்களும், அக்கொள்கைகளில் ஆட்சேபமற்ற நம்பிக்கையும் உள்ளவர் களுமே கட்சியின் பேரால் அபேட்சகராக முன்வருகின்றனர். அவர்கள் தங்கள் கட்சியின் நோக்கங்களையும், திட்டங்களையும் வாக்காளர்களுக்குப் பிரசங்கங்களின் மூலமாகவும், துண்டு விளம்பரங்களின் மூலமாகவும், பத்திரிகைகளின் மூலமாகவும், பலவகையாக எடுத்துக்கூறி வாக்குக் கொடுக்கும்படி பிரசாரம் பண்ணுகின்றனர். 

 

இவ்வாறு ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்களுடைய நோக்கங்களையும், திட்டங்களையும் எடுத்துரைப்பதனால் வாக்காளர்கள் எந்தக் கட்சியின் கொள்கை தங்களுக்கு நன்மையளிக்கக் கூடியது என்று தீர்மானிக்க முடிகிறது. அபேட்சகர்களும், தங்கள் கட்சிகளின் நோக்கங்களையும், திட்டங்களையும் பிரசாரம் பண்ணும் வகையிலேயே பொருளைச் செலவு செய்கின்றனர். தேர்தலில் செலவாகின்ற பணம் இவ்வகையில் செலவாகின்றதேயொழிய நமது நாட்டைப் போல வாக்காளர்களுக்கு "லஞ்சம்” கொடுக்கும் வகையில் ஒரு காசு கூடச் செலவழிவதில்லை . 

ஆனால் நமது நாட்டு வாக்காளர்களுக்கோ எந்த அரசியல் கட்சிகளின் உண்மையான கொள்கைகளைப் பற்றியும் தெரியாது. அவர்கள் தங்கள் விருப்பப்படிவாக்களிக்க முடியாத நிலைமையில் கூட இருக்கின்றனர் என்று கூறுவதும் தவறாகாது. ஒவ்வொரு ஏழை வாக்காளர்களும், தங்களுக்கு மேலாக இருக்கின்ற பணக்காரர்களின் செல்வாக்கிற்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்பட்டவர்களாகவே யிருக்கின்றனர். தேர்தலில் அபேட்சகராக முன் வருகின்றவர்களும் பணக்காரர்களாகவேயிருக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த கௌரவம், பட்டம், பதவிகளின் செல்வாக்கைக் கூறிப்பணத்தைச் செலவிட்டு வாக்குப் பெறுகிறார்களேயொழிய வேறுவழியில் தாங்கள் கொள்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி அதன்மூலம் வாக்குப் பெற முன் வருவதில்லை. அபேட்சகர்கள் பெரும்பாலும் வாக்காளர்களிடம் தாங்கள் இன்ன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூடத் தெரிவித்துக் கொள்வதே கிடையாது. 

பணக்கார அபேட்சகர்கள், தாங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் ஏஜண்டுகளை வாக்குக் கொடுக்கும் இடங்களுக்கு அனுப்பிப் பணத்தினா லும், தங்கள் பெயருக்குள்ள செல்வாக்கினாலும் வாக்குப் பெற்று வெற்றி யடைகின்றனர். இதுதான் நமது நாட்டில் தேர்தல் நாடகமாக இருந்து வருகிறது. 

பொதுவாக மேல் நாடுகளில், கட்சியின் பெயரால் ஒரு தலைவனுக்குச் செல்வாக்கும், வெற்றியும் ஏற்படுகின்றது. ஆகவே கட்சிதான் அங்கு தலைவர்களையும், தேர்தல் அபேட்சகர்களையும் சிருஷ்டிக்கின்றது. நமது நாட்டிலோ ஒரு தலைவன் பேரினாலேயே ஒரு கட்சிக்குச் செல்வாக்கு ஏற்படுகின்றது. தலைவர்கள்தான் கட்சிகளைச் சிருஷ்டிக்கிறவர்களாக இருக்கின்றார்கள். இம்முறை மாறி ஒரு கொள்கையைப் பொறுத்து மதிப்பும், இழிவும் ஏற்படக் கூடியநிலை வர வேண்டும். 

உதாரணமாக இன்று காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்கு முன்வருகிறார் கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது அவர்கள் வாக்காளர் களுக்கு எதைக் கூறுவார்கள். “காந்திக்கு ஜே! மகாத்மாவுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று பிரசாரம் பண்ணுவதைத் தவிர வேறு ஒன்றையும் சொல்ல மாட்டார்கள். இதற்கு முன் காங்கிரஸ்காரர்கள் அபேட்சகர்களாக முன் வந்த காலங்களில் இவ்வாறு பிரசாரம் பண்ணித்தான். பணத்தையும் செலவு செய்து ஓட்டு வாங்கினார்கள் என்பது நமக்குத் தெரியாத செய்தி அல்ல. ஆகையால் இந்த முறை மாறுவதற்கு வழியென்ன என்பதைப் பற்றிச் சிறிது ஆலோசிப்போம். 

ஓட்டர்களின் தொகை குறைந்திருப்பது தான் இத்தகைய ஊழல்கள் ஏற்படுவதற்கே காரணமாகுமென்றே நாம் நினைக்கின்றோம். ஒருஜில்லாவில் 60 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்களாயின், அவர்களில் அநேகமாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கும் குறைந்தவர்கள் தான் தங்கள் வாக்கை உபயோகப்படுத்த முன் வருவார்கள். ஆகவே 25 ஆயிரம் வாக்குகளைப் பெறுகின்ற ஒருவன் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவான். ஒரு வாக்குக்கு ஒரு ரூபாய் வீதம் கணக்கு வைத்துக் கொண்டாலும், 25 ஆயிரம் ரூபாய் போதுமானதாகும். மேற்கொண்ட செலவுக்கு ஒரு5ஆயிரம் வைத்துக் கொண்டாலும் 30 ஆயிரம் செலவு செய்கின்ற ஒருவன் சந்தேகமில்லாமல் தேர்தலில் வெற்றி பெறமுடியும். ஒரு பணக்காரன் சட்ட சபைத் தேர்தலில் 30 ஆயிரம் செலவு செய்வது ஒரு பெரிய காரியமல்ல. இவ்வாறு செலவு செய்துதான் இப்பொழுது பெரும்பாலான பணக்காரர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர். 

ஆகையினால் வாக்காளர்களின் தொகை ஒரு ஜில்லாவுக்கு 50 ஆயிரம் 60 ஆயிரம் என்று குறைந்த தொகையில் இல்லாமல், இரண்டு லட்சம் மூன்று லட்சம் என லட்சக்கணக்கிலாகி விட்டால் அனேகமாகப் பணங் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற தைரியம் பணக்காரர்களிடத்திலிருந்து ஒழிந்து போய்விடும். லெட்சக்கணக்காகத் தேர்தலில் செலவு செய்ய முன்வரவும் மாட்டார்கள். அப்படிச் செலவு செய்ய முன் வந்தாலும், எத்தனை தேர்தலில் இவர்களால் போட்டி போட முடியும்? போட்டி போடுவார் களானால் இரண்டொரு தேர்தல்களுக்குள்ளேயே அவர்களுடைய பணத் திமிர் ஒழிந்து மூலையில் உட்கார்ந்து விடுவார்களென்பதில் ஐயமில்லை. 

இந்த நிலையில் சட்டசபை ஸ்தாபனங்களுக்கு அபேட்சகர்களாக முன் வருகின்றவர்கள், தங்கள் நோக்கங்களையும், சட்டசபையில் போய் தாங்கள் செய்ய உத்தேசித்திருக்கும் வேலைத்திட்டங்களையும் வாக்காளர் களிடம் சொல்லிக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் வந்துவிடும். வாக்காளர்களும், அபேட்சகர்களின் சொந்தத் தொகுதிகளைக் கவனிக்காமல், அவர்களுடைய நோக்கங்களையும், கொள்கைகளையும் உணர்ந்து - வாக்குக் கொடுக்கக் கூடிய நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

ஆனால் இவ்வாறு வாக்காளர்களை அதிகப்படுத்தும் விஷயத்தில் நமது நாட்டினர் எந்த வகையான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதை இப்பொழுது வாக்குரிமையைப் பற்றி விசாரணை செய்து கொண்டி ருக்கும் திரு. லோதியன் கமிட்டிமுன் நமது நாட்டுப் பொது ஜனப் பிரதிநிதிகளில் பலர் கொடுத்த சாட்சியங்களைக் கொண்டு ஒருவாறு யூகித்து உணரலாம். 

சில பிரமுகர்கள் ஜனத்தொகையில் நூற்றுக்குப் பத்து வீதம் வாக்காளர் களை அதிகரிப்பது போதுமென்றும் சிலர் 20 வீதம் அதிகரிப்பது போது மென்றும், சிலர் 25 வீதம் அதிகரிப்பது போதுமென்றும், சிலர் முப்பது வீதம் அதிகரிப்பது போதுமென்றும் கூறிவருகின்றனர். ஒரு சிலரே வயது வந்தவர் களுக்கெல்லாம் ஓட்டுரிமையளிக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். காங்கிரஸ்காரர்களும் இந்த அபிப்பிராயத்தையே கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூடிய ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டத்திலும் இதை ஆதரித்து முடிவு செய்திருக்கின்றனர் 

இன்னும் சிலர், சொத்துரிமையின் மீது வாக்குரிமை கொடுக்க வேண்டுமென்றும். ஆங்கிலப் படிப்பின்மீது வாக்குரிமை வழங்க வேண்டு மென்றும், எந்தப் பாஷையை யேனும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையின் மேல் வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகின்றனர். இவைகளெல்லாம் வாக்காளர்களின் தொகையைக் குறைப் பதற்குக் கூறும் யோசனையே யன்றி வேறாகாது. 

ஒரு தேசத்தின் அரசாங்கத்தினால் வரும் நன்மை தீமைகளை, அந்த நாட்டில் உள்ள ஏழைகள், பணக்காரர்கள். முதலாளிகள், தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள், படிப்புள்ளவர்கள், படிப்பில்லாதவர்கள் ஆகிய எல்லா மக்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகவேயிருக்கின்றார்கள். ஆகையி னால் அரசியல் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டியதே நியாயமாகும். 

வயது வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமையளிக்கப்பட்டு விட்டால் கூடிய வரையிலும் மக்களின் சமதர்மத்திற்குப் பாடுபடக் கூடியவர்களும் அரசியல் நிர்வாகத்தில் திறமையுடைவர்களும், சட்ட சபைகளுக்கும் மற்ற பொது ஸ்தாபனங்களுக்கும் தெரிந்தெடுக்கப் படமுடியும் என்றே நாம் நினைக்கிறோம். ஏனென்றால் பணக்காரர்கள் லட்சக்கணக்கான வாக்காளர் களைப் பணத்தினால் வசப்படுத்தவோ, அல்லது அதிகாரத்தினாலும். செல்வாக்கினாலும் பயமுறுத்தவோ முடியாது. 

எந்த அபேட்சகர்களும் தங்கள் நோக்கங்களையும் வேலைத் திட்டங் களையும் வாக்காளர்களிடம் கூறித்தான் ஆகவேண்டும். கல்வியறி வில்லாத வாக்காளர்களும் ஒவ்வொரு அபேட்சகர்களின் கட்சிக் கொள்கை களையும் திட்டங்களையும் அறிந்து கொள்வது கஷ்டமான காரியமல்ல. இவ் விஷயத்தைப் பற்றி சென்னையில் ஆகாயவசனி மூலம் பிரசங்கம் செய்த திரு. லோதியன் அவர்கள் கூறிய அபிப்பிராயம் கவனிக்கத்தக்க தொன் றாகும். “கல்வியில்லாத காரணத்தால் ஒருவரை அறிவு, திறமைகள் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கல்வி கற்றவர்களைக் காட்டி லும் கல்வி அறிவில்லாத கற்றவர்களில் பலர்உலக விஷயங்களில் தேர்ச்சிய டைந்தவர்களாயிருக்கக் காணலாம். ஆதலால் கல்வியறிவில்லாதவர் களுக்கும் ஆகாசவசனிகள் போன்ற சாதனங்களின் மூலம் அவர்களுடைய தாய் பாஷைகளில் அரசியல் விஷயங்களைக் கூறி அவர்களை அரசியல் அறிவுடையவர்களாக்கலாம்” என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். 

ஆகையால் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளிப்பதன் மூலம் தான், நமது நாட்டு ஓட்டர்களைச் சிறிதளவாவது தங்கள் வாக்கின் மதிப்பை உணரச் செய்ய முடியுமென்றும் லஞ்சங் கொடுத்தோ, பயமுறுத் தியோ ஓட்டு வாங்கும் முறையை ஒழிக்க முடியுமென்றும், சமதர்மத்திற்குப் பாடுபடும் உண்மையான உழைப்பாளர்கள் சிலராவது தேர்தலில் வெற்றி பெற முடியுமென்றும் நாம் கருதுகின்றோம். 

குடி அரசு - தலையங்கம் - 20.03.1932

Read 67 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.