தோழர் கேசவ பிள்ளையை சென்னை மாகாண அரசியல் உலகம் நன்றாய் அறியும்.
அவர் பழயகாலத் தலைவர் கோஷ்டியில் சேர்ந்தவர். பழய சட்ட சபைகளில் அவர் அதிகம் காரியங்கள் செய்தவர். ஆனால் அவர் பார்ப்பனராய் இல்லாததால் அவரைப்போல வேலை செய்த பார்ப்பனர்களுக்கு கிடைத்த பெருமையும் பயனும் இவருக்கு கிடைக்காமல் போனதில் அதிசயமில்லை. பொதுவாழ்வில் சுமார் 40 வருஷகாலம் கலந்திருந்தும் அவரது வாழ்க்கை ஒரு சாதாரண நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற தலைவர்களைப் போல ஆடம்பரமும் பண வருவாயும் பிரதானமாக அவர் எதிர்பார்க்கவுமில்லை, அவர் எந்த விஷயத்தில் கவலை எடுத்து உழைத்தாலும் அதை மனப்பூர்வமாக உணர்ந்து மனப்பூர்வமான அக்கரையுடனும், உண்மையான கவலையுடனுமே உழைத்து வந்திருக்கிறாரே ஒழிய பொய் யாகவோ, கூலிக்காகவோ அல்லது ஏதாவது ஒரு சுயநல பலனை உத்தே சித்தோ உழைத்தவர் என்று சொல்லுவதென்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும். விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்குப்பிரியம் கிடையாது.
அவருக்கு 'சர்' பட்டம் கிடைத்திருக்கலாம். ஆனால் அதை பார்ப்பனப் பத்திரிக்கைகள் கெடுத்துவிட்டன. ஆனாலும் அவரைப்பற்றிய அபிப்பிராயம் பொதுமக்களுக்கு ஒரே விதத்தில்தான் உண்டு. அதாவது நன்மையான விஷயங்கள் தவிர இன்ன தீமை செய்தவரென்றோ தீமையில் கலந்திருந்தாரென்றோ யாவரும் சொல்லுவதற்கில்லை. இப்படியே இவர் 70வருஷகாலம் ஜீவித்து காலமாயிருக்கிறாரென்றால் இந்தியாவின் நிலைக்கு இதை அர்ப்ப ஆயுள் அல்லது போறாத ஆயுள் என்று சொல்லிவிடமுடியாது. அவருடைய குடும்பத்தாரும் போதிய அளவுக்கு திருப்திகரமாகவே இருக்கிறதாக அறிகிறதுடன் விவேகிகளானதால், பிரரது அனுதாபம் கூட தேவை இருக்காதென்றே கருதுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 02.04.1933