வருந்துகிறோம். குடி அரசு - இரங்கலுரை - 05.02.1933

Rate this item
(0 votes)

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு சதா உழைத்துவரும் மாயவரம் தோழர் சி. நடராஜன் அவர்களது அருமைத் தாயாரும் நாளது 1-2-33 தேதி காலை மரணமடைந்த சேதி கேட்டு வருந்துகிறோம். சென்ற 7, 8 மாதங்க ளுக்கு முன்புதான் தோழர் நடராஜனது தந்தையாரும், அவரது சகோதரியும் காலஞ்சென்றார்கள். அம்மையாரவர்கள் அன்று முதல் தனது கணவன் இறந்த துக்கத்தாலும், குமாரத்தி இறந்த துக்கத்தாலும் ஆழ்ந்தவராகி அதே கவலையாய் இருந்து இம்மாதம் முதல் தேதி காலமாகி விட்டார். இதெல்லாம் அதிசயமற்ற காரியமாயினும், இயற்கையேயாயினும் தந்தையையும். தாயையும் 8 மாத காலத்தில் பரி கொடுக்க நேர்ந்த தோழர் நடராஜனவர்களைப் பற்றியும், அவரது இளைய சகோதரரான சப்ரிஜிஸ்டரார் தோழர். சி. சுப்பையா பி. ஏ. அவர்களைப் பற்றியும் அனுதாபப்படாமல் எவரும் இரா. அம்மையாரவர்கள் கடைசிவரையிலும் மாயவரம் செல்லும் சுயமரியாதைத் தொண்டர்களுக்கும், அன்பர்களுக்கும் பொங்கிப் பொங்கிப் போடுவதில் சிறிதும் சலிப்பில்லாமல் சந்தோஷத்துடனேயே உபசரிப்பார்கள். பெரும்பான்மையான தொண்டர்களுக்கு மாதக்கணக்காய் இளைப்பாருவதற்கு மாயவரம் தோழர் நடராஜன் அவர்கள் வீடு ஏற்றதாய் இருந்துவந்ததற்கும் காரணம் இந்த அம்மையாரின் அன்பு நிறைந்த உபசாரமேயாகும். அப்படிப்பட்ட அம்மையார் காலமானதானது மிகவும் விசனிக்கத்தக்கதாகும். 

தோழர்கள் நடராஜனும், சுப்பையாவும், அவர்களது சிறிய தந்தையார் முத்தையாவும் இயற்கையை செவ்வனே உணர்ந்த ஞானவான்களானதால் அவர்களுக்கு உலக வழக்கப்படியான ஆறுதல் தேவையில்லை என்றே கருதுகிறோம். 

குடி அரசு - இரங்கலுரை - 05.02.1933

 
Read 41 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.