எலெக்ஷன் கூத்து - சித்திரபுத்தன். குடி அரசு - கட்டுரை - 22.1.1933 

Rate this item
(0 votes)

தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாபனங்களில் புதிய சீர்திருத்தத்தின்படி என்று நடைபெறும் எலக்ஷன்கள் (தேர்தல்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எல்லாம் ஏதாவது குழப்பமும், சண்டையும், கலகமும், அடிதடியும். கொலைகளுமான காரியங்கள் அவ்வளவுமோ அல்லது ஏதாவது ஒன்றோ நடந்த வண்ண மாகவே இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக் கைகளும் மிக மிக மோசமாகவே இருக்கின்றன. 

இனிமேல் தேர்தல்கள்-எலக்ஷன்கள் ஏற்பட்டவுடன் அதன் அபேக்ஷ கர்களை காவலில் வைத்து விட்டு எலக்ஷன்கள் நடத்தப்பட்டால் ஒழிய கலக மும், கொலையும் நடக்காமல் இருக்குமா என்கின்ற விஷயம் சந்தேகமாகவே இருந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலையோ மிக மிக மோசமாயிருக்கின்றது. பெரிய பொறுப்புள்ள அதிகாரிகள் முதல் சாதாரண போலிங் ஆபீஸர்கள் என்பவர்கள் வரை மோசமாகவே நடந்துகொள்ளு கின்றார்கள். 

ஒரு சிறு கதை சொல்லுகின்றோம். ஒரே ஒரு ஊரில் ஒரு எலக்ஷன் நடந்தது அதற்கு நின்ற இரண்டு அபேட்சகர்களும் "எலக்ஷன் அதிகாரி யிடம் சென்று எலக்ஷன் எப்படி இருந்தாலும் தங்களுக்கே அனுகூலமாய் இருக்க வேண்டுமென்று தனித்தனியே கேட்டுக் கொண்டு ஆளுக்கு 100 ரூ. வீதம் இரண்டுபேரும் இரகசியமாய்” கொடுத்து விட்டுவந்து விட்டார்கள். அதற்கு ஏற்றாப் போல் எலக்ஷனிலும் போலிங் ஆபீசர்களது "தவறுதல்” களால் சில தப்பிதங்கள் நடந்தது. இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு தான் தோல்வி அடைந்து விடக் கூடும் என்று கருதிய ஒரு அபேக்ஷகர் முடிவு சொல்லும் (டிக்ளேர் செய்யும் அதிகாரிக்கு மறுபடியும் கொஞ்சம் பணம் கொடுத்து தன்னையே டிக்ளேர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகேட்ட மற்ற அபேட்சகரும் ஓடி மறுபடியும் கொஞ்சம் பணம் கொடுத்தார். இரண்டையும் வாங்கிக் கொண்டார். அதிகாரி யோசித்தார் யாருக்கு அனு கூலம் செய்தால் தனக்கு நல்லது என்று பார்த்தார். மற்றும் பல சங்கதிகளைப் பார்த்து ஒரு கட்சிக்கு அனுகூலமாக தீர்ப்பு கூறி கொஞ்ச ஓட்டு பெற்ற "கவைனையே” டிக்ளேர் செய்தார். வெற்றிபெற்றதாக முடிவு கூறினார். 

அதற்கு ஏதோ காரணமும் குறிப்பிட்டு விட்டார். ஆகவே மறுபடியும் பணம் கொடுத்த எதிர் அபேட்சகர் தைரியமாய் அதிகாரி வீட்டுக்குப் போய் “இது தானா யோக்கியதை” என்றார். அதிகாரி ரகசியமாய் வீட்டுக்குள் அழைத்து வாங்கின பணத்தை கையில் கொடுத்து “சந்தர்ப்பம் வேறு விதமாய் போய் விட்டதால் இப்படிச் செய்ய நேர்ந்தது. ஆனால் வருத்தப்படாதே கோர்ட்டுக் குப் போனால் உனக்கு தான் அனுகூலமாகும். மன்னித்துக் கொள் என்று கேட்டுக் கொண்டார். அபேட்சகனோ ஓட்டர் வீட்டுக்கு அலைந்தது போறாமல் எலக்ஷன் ஆபிஸ் வீட்டுக்கு அலைந்தது போறாமல் இனி கோர்ட்டுக்கும், வக்கீல் வீட்டுக்கும் நீதிபதி வீட்டுக்கும் அலையும்படியா செய்கிறாய்? என்று ஏதோ தனக்கு மிக புத்தி வந்துவிட்டது போல் பேசியது மல்லாமல் அப்படித் தான் கோர்ட்டில் அனுகூலமானால் எனக்கு என்ன பிரயோஜனம்? இப்பொழுது நீ அனுகூலம் செய்திருந்தால் எனக்கு சமீபத்தில் நடக்கும் தலைவர் தேர்தலில் 1000மோ, 2000மோ கிடைத்திருக்கும். அதெல்லாம் பாழாய் போனது மல்லாமல் இன்னமும் 500ரோ 1000மோ செலவு அல்லவா செய்ய வேண்டி இருக்கிறது. 

அதற்கும் இனி அப்பீல் செய்தால் அப்புறம் வேறே செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இவ்வளவும் செய்து அனுகூலம் ஆகாமல் போய் விட்டால் என்ன பண்ணுவது? அல்லது நமக்கு அனுகூலம் ஆச்சுதென்றே வைத்துக் கொண்டாலும் மந்திகளோடு மந்தியாய் நாற்காலியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவதைவிட வேறு என்ன செய்ய இடமுண்டாகும்? ஆதலால் இனி மேல் இந்த கிரகத்தைப்பற்றி நினைப்பதே இல்லை. நீ மாத்திரம் நல்லா இருந்தால் சரி, கடவுள் தான் உன்னைக் கேட்கவேண்டும். என்று சொல்லிக்கொண்டு வெளியில் வந்து விட்டார். அதிகாரி உடனே கதவை மூடித் தாழ்போட்டுக் கொண்டார். என்பதாக ஒரு கதை தேசீய மதத் தைச் சேர்ந்த சுயராஜ்ய புராணத்தில் எலக்ஷன் அத்தியாயத்தில் காணப் பட்டது. 

இது நிற்க இன்னும் சிலர் தங்கள் எலக்ஷனில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும். சிபார்சு பிடித்தாலும் ஓட்டர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், வெற்றிபெற முடியாது என்று கருதினால் எதிர் அபேட்சகரை அடிப்பதாக, உதைப்பதாக மிரட்டுவதும், அடிக்க ஏற்பாடு செய்வதும், கொலை செய்யவே ஏற்பாடு செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன. இதற்கும் இரண் பொரு கதைகள் தேசீய புராணத்தில் இருக்கின்றன. 

ஆனால் அவற்றை சிறிது நாள் பொறுத்து வெளியிடுவேன். இந்த மாதிரி அதிகாரிகளை பணம் கொடுத்து "தொந்திவு” செய்வதும் அபேட்சகர் களை அடிதடி கலகம், வசவு, கொலை முதலியவைகள் செய்து தொந்திரவு செய்வதுமான காரியங்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள இரண்டு முக்கிய மான குற்றங்களினாலேயேதான் நடைபெறுகின்றன. அவை என்னவெனில், 

1 ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் வசம் கண்ட்ராக்டுகள் கொடுக்கும் அதிகாரம் இருப்பது. 

2 ஸ்தல ஸ்தாபனத்திற்கு உத்தியோகஸ்தர்கள் - சிப்பந்திகள் நியமிக்கும் அதிகாரம் இருப்பது. 

ஆகிய இந்த இரண்டு காரியங்களையும், ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களிடம் இருந்து எடுத்து விட்டால் அதாவது கண்ட்ராக்ட் கொடுப்ப தும், சிப்பந்திகளை நியமிப்பதும் இவர்களிடம் வேலை வாங்குவதுமான இரண்டு காரியங்களையும் பிரசிடெண்ட் - சேர்மென் என்பவர்களிடம் இருந்து எடுத்துவிட்டால் கண்டிப்பாய் மேலே குறிப்பிட்ட மாதிரியான குற்றங் கள் நடக்கவே நடக்காது. அன்றியும் தலைவர் ஸ்தானங்களுக்கு வருகின்றவர் களும், யோக்கியமாய் இருக்க முடியும். 

அப்படிக்கில்லாவிட்டால் எவ்வளவு யோக்கியமும், நாணயமுமான தலைவர்கள் தலைமை ஸ்தாபனத்துக்கு வந்தாலும் தங்களைத் தலைவர் களாக்குவதற்கு உதவி செய்ததாகச் சொல்லிக்கொள்ளப்படும் கருதப்படும் நபர்களுக்கு எல்லாம் உதவி செய்து தீர வேண்டியதாய் அவரவர்கள் "மனசாட்சி” வற்புறுபுறுத்தியேயிருக்கிறது. 

இதை உத்தேசித்தே அனேகம் பேர் ஒவ்வொரு கட்சியில் சேர்ந்து கொண்டு "மகா அக்கரை” யுடன் பாடுபடவேண்டியதாய் இருக்கிறது, (குறைந்த அளவு) பாடுபட்டதாகவாவது காட்டிக் கொள்ள வேண்டி இருக் கிறது. சிலர் இருவரிடமும் யோக்கியர்போல் வெகு அக்கரைக்காரர்கள் போல் நடந்துகொள்ளவோ அல்லது குறைந்த அளவு கோள் சொல்லியாவது நம்பிக்கைப் பாத்திரர்களாய் நடந்துகொண்டதாகக் காட்டிக் கொள்ளவாவது வேண்டியதாய் இருக்கின்றது. ஆகவே மத ஸ்தாபன இலாக்கா புதிய மந்திரி யாகிய தோழர். பொப்பிலிராஜா சாய்டாவது இதைக்கவனித்து தனது காலத் தில் இதே காரியத்தை சாதித்துவிட்டுப்போனால் நாட்டுக்கு ஒரு வழியா வது நன்மை செய்தவர் என்று சொல்லிக் கொள்ள அருகதை உடையவராவார். டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஸ்தல ஸ்தாபன இலாக்காவிலும் மற்றும் சிலதிலும் செய்த பல நன்மைகள் அவர் இன்னமும் எந்தக்கட்சியில் சேர்ந்து மக்களை எவ்வளவு ஏமாற்றினாலும், மறக்கக்கூடியதல்ல. அது போலவே தோழர் முத்தையா முதலியார் அவர்களும் உத்தியோக வினியோக விஷயத் தில் செய்த காரியம் என்றும் மறக்கக்கூடியதல்ல. அதுபோல் ஏதாவது ஒருகாரியம் பொப்பிலி ராஜாவும் செய்தால் நன்மையாய் இருக்கும். 

குடி அரசு - கட்டுரை - 22.1.1933

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.