கடவுள், மதம், சாதி - இவை சம்பந்தமான ஆதாரம். விடுதலை தலையங்கம் - 2.2.1959

Rate this item
(0 votes)

தென்னாட்டில் வாழும் திராவிட மக்களாகிய - தமிழர்களாகிய நமக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, இவை சம்பந்தமான ஆதாரம் இல்லை. ஆனால், கடவுள் விஷயத்தில் "அன்பே கடவுள்'' என்று 'ஏ'காரம் கொடுத்துக் கூறுகிறோம். மத விஷயத்தில் சைவம் - சைணவம் ஆகிய இரண்டு மதங்களைக் கூறிக் கொள்ளு கிறோம். இம்மதங்களுக்கு மூலக்கருத்து சிவன், விஷ்ணு என்கிற இரண்டு கடவுள்களைக் குறிப்பாய் வைத்து இம்மதங்களைக் கருதிக் கொண்டு இருக்கிறோம்.

நமக்கு பிறவியினால் ஜாதிப் பிரிவு, ஜாதி பேதம் இல்லை என்கின்றோம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஜாதியில் பட்டவர்களாகவே இருக்கிறோம். நமக்கு உண்மையில் கடவுள், மதம், ஜாதி, சம்பந்தமான ஆதாரங்கள் எதுவும் இல்லை . ஆனால், தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தம் முதலிய வைகளை ஆதாரமாக - தமிழர்களின் வேதங்களாக - மறைகளாகக் கொள்ளுகிறோம். இந்த ஆதாரங்கள் சிவனையம் விஷ்ணு வையும் கடவுள்களாகக் கற்பித்த புராணங்களில் உள்ள வெறும் புளுகு, மூடநம்பிக்கை, அதாவது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அணுபவதத்திற்கும் ஒத்துவர முடியாத, கண்மூடித்தனமாக நம்பியே தீர வேண்டியதான, குழந்தைகளுக்கு பாட்டிமார் சொல்லும் பூச்சாண்டிக் கதைகள் போன்ற கற்பனைகளை நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நம்மில் பாமர மக்கள் மாத்திரம் அல்லாமல், விஞ்ஞானப் பயிற்சிபெற்ற புலவர்கள், ஆராய்ச்சி அறிவு பெற்ற புலவர்கள், இலக்கிய அறிவு பெற்ற புலவர்கள், பொதுவாகக் கல்வி அறிவு, உலக ஞான அறிவு பெற்ற புலவர்கள் வரையிலுங்கூட இந்த தரம் உள்ள "அறிஞர்'களாகவே இருக்கிறார்கள். கடவுளை ஒப்புக்கொண்டால் மதத்தை ஒப்புக் கொண்டாக வேண்டும்; மதத்தை ஒப்புக்கொண்டால் ஜாதியை ஒப்புக் கொண்டாக வேண்டும்; இவைகளை ஒப்புக்கொண்டால் இவைகளுக்கு ஏற்ற ஆதாரங்களை ஒப்புக்கொண்டாக வேண்டும். என்கிற நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம்.

"பொல்லாத வாய்ப்பின் மேல் வாய்ப்பு ஏற்பட்டது" போல நமக்கு ஏற்பட்ட ஆட்சி முறையும் இவைகளைப் பாதுகாத்து வலியுறுத்தி நம் பிடரியின் மேல் ஏற்றும் தன்மையதாகவே இருந்து வருகிறது. இதற்கு ஏற்றவண்ணமே நம் நாட்டில் இருக்கிற ஏற்படுகிற சமய, சமுதாய, அரசியல் துறை பொதுநலத் தொண்டர்கள்" என்பவர்களும் இவைகளை எதிர்க்கவோ, விலக்கவோகூடத் துணிவற்று வாழ வேண்டியவர்களாகவே இருக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்.

திராவிடர் கழகத்தார்கள் இத்துறைகளில் எதிர்ப்புக் காட்டியும், விளக்கம் சொல்லியும் தொண்டு ஆற்றி வருகிறார்கள் என்றாலும், அவர்களுக்குப் போதிய ஆதரவளிக்க நாட்டில் மக்கள் தகுதி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. திராவிடர் கழகக் கொள்கைகளை ஆதரிக்க பாமர மக்கள் ஏராளமாக இருந்தபோதி லும் அவர்களது ஆதரவு முருங்கைமரம் போன்றதாகவே பயன்படும் தன்மையதாக இருந்து வருகின்றது. பாமர மக்கள் நம்பமுடியாதவர்கள். அவர்கள் உள்ளத்தில் நம் கொள்கைக ளைப் புகுத்த மாத்திரம் நாம் முயற்சிப்பது பொருத்தமாகுமே தவிர, அவர்களுடைய ஆதரவைப் பெறுவது என்பது அசாத்தி யமான காரியம் என்றே கருத வேண்டியிருக்கிறது. 

உதாரணம் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நம் பிறவி எதிரி பார்ப்பனர் பத்திரிகைகள் இந்த நாட்டில் நடமாடுகிற அளவில் 10-ல் ஒரு பாகமாவது அந்த பாமர மக்களுக்கும், படித்த மக்களுக்குமாக பெரும் கஷ்ட நஷ்டத்தோடு நடந்து வரும் பத்திரிகை மக்களிடத்தில் பரவ வேண்டாமோ, இல்லையோ! அதன் காரணம் என்னவென்றால் பாமரமக்களின் தன்மை அவ்வளவுதான் என்பதேயாகும். படித்தவர்கள் என்றால் பாமரமக்கள் அல்லாதவர்கள் என்பது அல்ல அதன் கருத்து. படித்தும் அறிவில்லாத பாமரர் என்றுதான் கருத்து.

நாம் "படித்தவர்கள்தான்'; "படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள்" என்று கருதிவிட்டால் அந்தக் கருத்து, படியாத மக்கள் என்பவர்களுக்கு பெரும் கேடு செய்ததாகவே முடிந்து விடும். நம் மக்கள் பெரிதும் அறிவு, இன நலம்பெற முடியாமல் செய்யப்பட்ட பரம்பரையாக ஆனவர்கள் ஆனதால் இன்றைய நிலைக்கு இனியும் இரண்டொரு தலைமுறை ஆகித் தீர வேண்டிய நிலையில் பெரிதும் இருக்கிறார்கள். அதனால்தான் நம் படித்த மக்கள் என்பவர்களுக்கும் முக்கியமாய் இருக்க வேண்டிய அறிவு இல்லாமல் அவர்களையும் பாமர மக்கள் குறிப்பிலேயே சேர்க்க வேண்டி இருக்கிறது. (ஏனென்றால், இவர்களது தாய் தந்தையர்களைக் கவனித் தால் சிறிது விளங்கும்).

எனக்கு "முன் ஜென்மம், முற்பிறப்பு, அவற்றின் விதி" என்பனவற்றில் சிறிதும் நம் பிக்கை இல்லை ; ஆனால், பரம்பரையில் - அதற்கேற்ற உடல் - உள் உறுப்பு இவற்றின் தன்மை ஆகியவற்றின் அமைப் பில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. என் தகப்பனாரின் குணம் என்னிடம் இருக்கக் காண்கின்றேன். என் தகப்பனாரின் அங்க அடையாளம் ஒன்று இரண்டு என்னிடம் இருக்கக் காண்கின்றேன். இந்தப்படி பலரிடம் காண்கின்றேன். ஏன், ஆடு, மாடு நாய் முதலியவற்றிடமும் காண்கின்றேன்.

மாம்பழக்கொட்டை போட்டால் மாமரம் முளைக்கிறது மாத்தி ரமல்லாமல் அதன் புளிப்பு இனிப்பு நிறம்கூட மூலமரத்தின் தன்மையை ஒத்தே இருக்கின்றன. இரண்டு தலைமுறைக்கு முந்திய பெற்றோர் குணமும் உருவச் சாயலும் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் தொடர்கின்றன. ஆதலால் பரம்பரை மறைந்து விடுவது எளிதில் முடியாது. வள்ளுவர் "ஊழ் முந்துறும்" என்று சொன்ன ஊழின் கருத்து இதுவேதான். ஆதலால் நமக்கு ஊழ்மறை பெரும்பாலோருக்கு 2,3 தலைமுறைகளாவது தேவை இருக்கிறது.

மற்றும், அறிவில்லாதவர்களுக்கு அவர்கள் எவ்வளவு படித்தாலும், எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவர்களுக்கு சுயந லமே முந்துறும், பிறநலம், இனநலம் என்பவற்றை சுயநலமாகக் கருதும் தன்மை உள்ளவர்களைத்தான் அறிவாளிகள் என்றும், நல்வழி கண்டுபிடித்தவர்கள் என்றும் சொல்லத்தகும். ஆதலால் தான் நமக்கு கற்றவர்கள், செல்வர்கள், செல்வாக்குள் ளவர்கள் ஆதரவு இல்லை என்பது மாத்திரமல்லாமல் கல்லாத பாமரமக்கள் ஆதரவும் இல்லை என்றாலும் நம் கருத்து, முயற்சி வெற்றி பெறவில்லை என்று சொல்லிவிட முடியாது. அதற்கு உதாரணம் நாம், நம் கழகம், நம் பத்திரிகைப் பிரசுரங்கள் ஆகியவைகள் இன்னும் உயிரோடிருப்பதேயாகும். இவற் றோடு நமது முயற்சிகள் சிறிதும் தளராதிருப்பதேயாகும்.

மற்றும், நமது சமுதாய வாழ்வில் சுற்றுச் சார்பில் கல்வியில் இனநலமோ பிறநலமோ பெறத்தக்க வாய்ப்பு இல்லை. நமக் குள் இனப்பிரிவு வெட்கப்படத்தக்க தன்மையில் இருந்தாலும் அதன் பேராலும் சுயநலமடையும் அள வுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளுகி றோம். இதற்கு இப்படிப்பட்ட மக்கள் மீதே குற்றம் சொல்ல முடியாதபடி இன உணர்ச்சி நம்மில் இருப்பதால் மக்கள் இந்த இன உணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் சொல்லலாம். நிற்க; எடுத்துக்கொண்ட விஷயமாகிய கடவுள், மதம், ஜாதி ஆதாரம் ஆகிய விஷயங்களுக்குச் செல்லுகிறேன்.

“கடவுள் என்றாலே அறிவை பயன்படுத்தக்கூடாதது'' என்றுதான் பொருள். ஆனால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "கடவுள் என்றாலே காரணாகாரி யம், ஆதி அந்தம், இறப்பு பிறப்பு கூற முடியாதது மாத்திரமல் லாமல், கேட்கவே முடியாதது என்று தத்துவமுடையது. ஆதலால் கடவுளுக்கு இவற்றை கேட்பது நாத்திகமாகும்'' என்று சொல்லிவிடுவார்கள். 

ஆனால், கடவுளைக் கற்பிப்பவர்கள் ''உலகத் தோற்றத்திற்கு காரணகாரியம் வேண்டாமா? அதுதான், உலகுக்கு காரண காரியமாய் இருப்பது கடவுள்'' என்று சொல்கிறார்கள். எது எப்படியோ போகட்டும் என்றாலும், தமிழர்களாகிய நமக்கு கடவுள் உண்டா? கடவுள் "இலட்சணத்திற்கு உட்பட்ட கடவுளையாவது நாம் கொண்டு இருக்கிறோமா?

சிவனும் - விஷ்ணுவும் கடவுள் ஆனவர்களாவது கடவுள் தன்மை அல்லது கடவுள் இலட்சணம் கொண்டவர்களா என்ப தைக்கூட 'இயற்கையை வணங்கினார்'' என்கின்ற தமிழன் சிந்திப்பதில்லை என்றால் தமிழன் இன்னமும் பகுத்தறிவு பெற்ற மனிதப் பரம்பரைக்கு வரவில்லை என்றுதானே அர்த்தம்? சிவனையும், விஷ்ணுவையும் உருவகப்படுத்தி இருக்கும் தன்மை கடுகளவாவது மனிதத் தன்மைக்கு ஏற்றதா என்று - தமிழர்களில் யார் சிந்திக்கிறார்கள்?

அதுபோலவே மத விஷயத்திலும் எதற்கு ஆக மதம் என்பதை தமிழர்களில் தெரிந்து கொண்டவர்கள் யாரும் எனக் குத் தென்படவில்லை . உலகில் மதங்கள் பல இருந்தாலும் அவைகள் அந்தந்த மத மக்களை ஈடேற்றவும் ஒழுங்குபடுத்தவும், ஒற்றுமை கட்டுப்பாடு, சகோதர உணர்ச்சி ஏற்படவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்காகவே இருந்தும் வருகிறது. இக்கருத்துக்களில் சிறதாவது வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், நம் மதம்?

விடுதலை தலையங்கம் - 2.2.1959 

Read 19 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.