பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும் (குடி அரசு - கட்டுரை - 26.05.1929)

Rate this item
(0 votes)

திரு.எஸ். சீனிவாசையங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும் விட தீவிரமாய் இருக்க வேண்டும் என்கின்ற ஆத்திரத்தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப்படுத்திக் கொண்டார். கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபாஷ் சந்திரபோசும் சமீபத்தில் ருஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவாரிலால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள்.

ஆனால் திரு.சீனிவாசையங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்குமுறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்து விட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.

 

இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை ஏமாற்ற ஏதாவது ஒரு புரட்டு வேண்டியிருப்பதால் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு கொள்கையை வெளிப்படுத்துவார். ஏனென்றால் சீனிவாசையங்கார் கூப்பிட்டபோது ஓடவும் வேண்டுமென்று கூப்பிட்டவுடன் ஓடி வரவும் அய்யங்கார் வார்த்தையை “வேதவாக்காக”க் கொண்டு பிரசாரம் செய்யவும் தமிழ்நாட்டில் இந்த இரண்டு கனவான்கள்தான் உண்டு.

மற்றபடி, இப்போது அய்யங்கார்கூட இருக்கும் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் அய்யங்காரை விட்டு பிரிந்து மறுபடியும் அவருடன் சேருவதானால், மானம் ஈனம் சுயமரியாதை என்பவைகளைப் பற்றி சற்றாவது யோசித்துப் பார்ப்பார்கள். ஆனால், மேல்கண்ட இரண்டு கனவான்களுக்கும் இந்த விஷயங்களில் சிறிது கூட கவலை கிடையாது. ஏனென்றால் முற்றத்துறந்த ஞானியிடம் மானம் ஈனம் இருக்க இடமேது?

(குடி அரசு - கட்டுரை - 26.05.1929)

 
Read 52 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.