யோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்பது நாஸ்திகமாயின், பின் ஆஸ்திகம் தான் என்ன?

Rate this item
(0 votes)

சகோதரர்களே!

நான் இன்றைய தினம் போல் என்றைக்கும் சந்தோஷமாயிருந்ததில்லை. இன்றைய தினம் தான் என் வாழ்நாளில் ஓர் சுபதினமாகும். நான் உழைத்த உழைப்பின் பலனாக இன்று நடந்த இந்த ஒரு காரியமே என்னைச் சந்தோஷத்தில் அமிழ்த்திவிட்டது. இந்த மாதிரி ஒருவராவது நான் சொல்வது சரியென்று பட்டு தமது வாழ்க்கையை சுயமரியாதையில் திருப்பி, அந்திய காலத்திலாவது பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்து நல்ல விஷயத்தைச் செய்ததை நோக்க, நான் செய்து வரும் எல்லா ஊழியத்திற்கும் இந்த ஒரே கைமாறு போதுமென நினைக்கிறேன். இந்த மாதிரி அனுபவத்தில் காட்டக்கூடிய உணர்ச்சி அன்பர்கள் அவரவர்கட்கே உண்டாகி விட்டால் என் போன்றோர் உழைப்பில்லாமலேயே நம் மக்கள் சுயமரியாதையைப் பெற்றுவிடுவார்கள்.

எனக்குப் பல வேலைகளும் உடல் நலிவும் இருந்தபோதிலும் உங்கள் அழைப்பிற்கு நான் மிகவும் சந்தோஷத்தோடு இங்கு வந்திருக்கிறேன். இவ்வளவு பெரிய விசேஷக் கூட்டங்களுடனும் உணர்ச்சியுடனும் இக் காரியம் நடைபெறுமென்று நான் நினைக்கவேயில்லை. நான் 50 கிராமங்களுக்குச் சென்று செய்ய வேண்டிய 50 நாள் வேலையை எல்லோரும் இங்கு வந்திருக்கிறபடியால் ஒரு நாளில் ஒரே மணியில் செய்து முடிக்க நேர்ந்ததே என்றும் திருப்தியடைகிறேன்.

 துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் நுழையக் கூடாத இம்மலையடர்ந்த காட்டிற்குள்ளும் நான் சொல்லும் சிறு மொழியும் ‘குடி அரசு’ உபதேசமும் நுழைந்து இவ்வளவு மாறுதலையுண்டு பண்ணியிருக்கின்றதென்றால் இதன் கொள்கைகளின் உண்மைகள் எவ்வளவு மேலானதென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை பல பேர் கேட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறபடியாலும், நானே வந்து அவ்விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்று கேட்கின்றபடியாலும், என்னால் சொல்லப்படுகின்ற உண்மை ஜனங்களின் உண்மையான உணர்ச்சியில் தோன்றக் கூடியதுதான் என்றும், அதுதான் சுயமரியாதையுள்ள மக்களுக்குள்ள உயர்ந்த அபிப்பிராயமென்றும், அதையேதான் நான் சொல்கின்றேன் என்றும் உணர்கின்றேன். ஆனால் நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்டதன்படி நடக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் நரக தண்டனையென்று நான் மேற்கோளும் காட்ட வரவில்லை.
 
 சங்கராச்சாரி, மடாதிபதிகள், குருக்கள், புரோகிதர்களுடைய ஊழல்களைச் சொல்லுவதனால் நான் மடாதிபதியாக வருவதற்கல்ல. நான் நாயனாராகவோ ஆழ்வாராகவோ ஆவதற்கல்ல. ஆனால் என் அனுபோகத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உண்மையென்று பட்டதை, நான் உள்ளபடி உணர்வதை உங்களுக்கும் சொல்லுகின்றேன். உங்கள் அறிவிற்கு அது சரியென்று பட்டால் கொள்ளுங்கள். அல்லவென்று பட்டால் தள்ளுங்கள்; சரியென்று பட்டபின் அதைக் கொள்ள தைரியமில்லாமல் ஊரை ஏமாற்ற ‘நாய்க்கர் நாஸ்திகம் பேசுகிறார்’ என்று சொல்லி வீண் பழி பாவத்திற்கு உள்ளாக்காதீர்கள். நமது சமூகத்திற்கு எதிரிகளாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைக்கும் கோடாலிக் காம்புகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள்.
 கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள் பேரால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு, கடவுள் பேரால் விபசாரம் செய்து கொண்டு, கடவுள் பேரால் தீண்டாமையை உற்பத்தி செய்து கொண்டிருப்பதை யெல்லாம் தான் நான் கண்டிக்கிறேன். கடவுளை நம்புகிறவன் யோக்கியமாய் இருக்க வேண்டியது அவசியம். கடவுளை நம்பி யோக்கியமாய் இருக்க முடியவில்லையானால் கடவுளைப் பற்றி கவலைப்படாமலாவது நீங்கள் யோக்கியர்களாய் இருக்க வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை.

எல்லாரையும் சமமாயும் சகோதரராயும் பாவிக்க வேண்டும். எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும். தாசித் தொழில் ஒழிய வேண்டும். பாலிய விவாகம் ஒழிந்து நமது பெண்கள் எப்பொழுதும் சுகமாயிருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. திருடக் கூடாது. யோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இது போல் சொல்லி வருகின்றேன். இதைச் சில அயோக்கியர்களும் அவர் தம் பத்திரிகைகளும் பொறாமை, சுயநலம், அற்ப புத்தி காரணமாக நாஸ்திகம் என்று பேசியும் எழுதியும் வருகின்றன. இவையெல்லாம் நாஸ்திகமாயின் பின் ஆஸ்திகம் தான் என்ன?

 கடவுள் பேரால் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுதலும், கடவுள் பேரால் தீண்டாதார்களைக் கோயிலுக்குள் கும்பிட விடாமலும், கடவுள் பேரால் இளங்கன்னிகளைக் கல்யாணம் செய்து அறுதலியாக்குவதும், கடவுள் பேரால் 100க்கு 96% பேர் முட்டாளாகவும் 3% பேர் படிக்கவும், கடவுள் பேரால் ஒரு வகுப்பார் உட்கார்ந்து சாப்பிடவும், மற்றொரு வகுப்பார் உப்பில்லாமல் ஓடியுழைக்கவும், கடவுள் பேரால் பொய் சொல்லவும், திருடவும், பலியிடவும், யாகங்கள் செய்யவும், ஏமாற்றவும் செய்தால் இது தானா ஆஸ்திகம் என்று கேட்கின்றேன். அப்படியானால் இந்த ஆஸ்திகத்தை ஒழிப்பதே உலகுக்கு நன்மை பயக்குமல்லவா.

உங்கள் அறிவை விளக்கி, இம்மாதிரி ஆஸ்திகப் பேச்சை விட நான் சொல்லும் பேச்சில் ஆஸ்திகம் அதிகமிருக்கிறதா நாஸ்திகம் இருக்கிறதா என்று பகுத்தறிந்து பின்பற்றுங்கள். அயோக்கியர்கள் உங்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது. இம்மாதிரி குக்கிராமத்திலேயே ஒரு வயது சென்ற பெரியார் அந்தக் காலத்தில் சுயமரியாதை உணர்ச்சி பெற்று பார்ப்பனீயத்தை ஒழிக்க முற்பட்டதும் அதையும் பக்தியுடன் நிறைவேற்றிய அவர்தம் புதல்வரையும் நோக்க இந்த சுயமரியாதைக் கிளர்ச்சியின் பலம் எதிரிகளுக்கு விளங்காமற்போகாது. இதற்காக அப்பெரியாரையும் போற்றி அவர் தம் குமாரனையும் ஆசீர்வதிக்கிறேன்.

 மதத்தின் பேரால் பார்ப்பனர்களின் பொய் புரட்டு, வேதம், புராணம், சாஸ்திரம் முதலியவைகளில் நம்மக்கள் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்பட்டு விட்டனர். சுயமரியாதையே இல்லாது போய்விட்டது. சுயமரியாதை இல்லாது போனால் சுயராஜ்யம் எங்கே இருக்கும்?

கிறிஸ்துவ மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. புத்த மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. முகமதிய மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. அந்தந்த ராஜ்யம் அந்தந்த மதத்தார்களால் ஆளப்படுகிறது. ஆனால் பழைய தொன்மையான ஹிந்து மதத்திற்கு அநாதி காலந்தொட்டு ராஜ்யமுமில்லை, இருக்கிற ராஜ்யத்தையும் ஹிந்துக்கள் ஆளாமல் அன்னியர் ஆளுகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் ஜனத்தொகை பெருகுகின்றது. நம் பழமையான ஹிந்து மதத்திற்கு ஜனத் தொகை குறைகின்றது. இந்தியாவில் உள்ள இந்து மத சம்பிரதாயப்படியுள்ள தீண்டாமையென்னும் கொடிய வழக்கத்தால் சுமார் 7, 8 கோடி முகமதியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிட்டனர். இன்னும் தீண்டாமை ஒழியாவிட்டால் முகமதியராகவும் கிறிஸ்தவராகவும் ஆவதற்காக 6 கோடி பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்துவாக இருந்து முகமதியராக மாறினவர்களுக்கும் துருக்கி சுல்தானுடனும் ஆப்கன் அமீருடனும் சமத்துவமாக நின்று தொழவும் ‘குரான்’ படிக்கவும் உணவு அருந்தவும் சமத்துவமான சுதந்திரம் உண்டு. இது போல் கிறிஸ்துவ மதத்திலும் புத்த மதத்திலும் உண்டு. ஆனால் பழைய ஹிந்து மதத்தில் கடவுளைப் பார்க்கக் கூடாத ஒரு சாதி, கிட்டே போகாத சாதி, இந்து வேதத்தைப் படிக்கக்கூடாத ஒரு சாதி உண்டு. ஆனால் அதை ஒப்புக் கொள்ளுகிறவன் தான் ஹிந்து, இதெல்லாம் வெறும் புரட்டும், மக்களை ஏமாற்ற எழுதி வைத்ததும் தற்கால வாழ்விற்கு வேண்டாததும் ஆகியவைகளா இல்லையா என்று தான் கேட்கின்றேன்.

ஆதலால் இந்தப் புரட்டையெல்லாம் உதறித் தள்ளி நல்ல சமயத்தில் பற்றிக்கொண்டு நல்ல காரியத்தைச் செய்யுங்கள் என்றால் நாஸ்திகம் என்று குறுக்கே சொல்ல வந்து விடுகிறார்கள். பிறகு கடவுள், மதம், சடங்குகள் முதலியவற்றால் சுயநலம் கொண்ட ஒரு சாதியார் எப்படி மக்களை ஏமாற்றி பிழைத்து வந்தார்கள் என்பதை சாங்கோ பாங்கமாக எடுத்து உரைத்து தமது ஆசனத்தமர்ந்தார்.

(குறிப்பு: 20.03.1928 இல் அலசந்தாபுரத்தில் சொற்பொழிவு, குடி அரசு - சொற்பொழிவு - 15.04.1928)

Read 78 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.