கமிஷன் பகிஷ்காரம் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.02.1928)

Rate this item
(0 votes)

இதுவரை நடந்த சம்பவங்களால் கமிஷன் பகிஷ்காரமென்பது அர்த்தமற்றதாய் விளங்குகின்றது என்பதும், சென்னை பம்பாய் முதலிய மாகாண பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் முழுதும் கமிஷனிடம் ஒத்து ழைக்க தயாராயிருக்கின்றன என்பதும் விளங்கிவிட்டது. அதாவது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கிருஷ்ணநாயர் அவர்கள் ஸ்டேட்மெண்டும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் தீர்மானமும் பார்த்தவர்களுக்கு இனிது விளங்கும். மற்றபடி மகமதியத் தலைவர்களின் பெரும்பான்மை அபிப்பி ராயமும் பத்திரிகைகளின் அபிப்பிராயமும் முழு ஒத்துழைப்பில் இருக் கின்றது. ஆதி இந்துக்களின் அபிப்பிராயமும் அதைவிட மீறி நிற்கின்றது. மற்றபடி பார்ப்பனர்களின் இயக்கம் என்று கருதப்பட்ட காங்கிரசின் பேரால் மாத்திரம் சிலர் பகிஷ்காரப் பேச்சு பேசினாலும் காரியத்தில் கமிஷனுக்கு அனுகூலமாய் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தவிர, பார்ப்பனர்களின் முக்கியமான பகிஷ்கார எண்ணமெல்லாம் இந்தியாவிலிருக்கும் ஜாதித் திமிரும் பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளைக்காரருக்குத் தெரியக் கூடாது என்பது ஒன்று மாத்திரமேயல்லாமல் வேறு கவலை ஒன்றும் பார்ப்பனர்க ளுக்கு இல்லை என்பது உறுதியாய் விட்டது. இனி யாரும் அதைக் கேட்ப தில்லை என்பது மாத்திரம் உறுதி.

தவிர இங்கிலாந்திலும் உள்ள வெள்ளைக்காரர்களுக்கு மிகுதியும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தத்தான் இந்த பகிஷ்காரப் புரட்டு ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதும் விளங்கி விட்டது. இதை அறிந்தே நமது பார்ப்பனர்கள் வெளிநாட்டுப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் சுயநிர்ணயத்தை நிர்ணயிப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு பாத்தியமில்லை என்றும் அப்படி பாத்தியமிருப்பதாய்ச் சொல்லுவது நமது சுயமரியாதைக்கு குறைவு என்றும் சொல்லிக் கொண்டு திரியும் பார்ப்பனர்கள் இப்போது வெள்ளைக்காரர் நாட்டில் நமது பிரசாரம் செய்ய வேண்டுமென்பதின் இரகசியம் என்ன என்பதை கவனித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டுகிறோம்.

 

எது எப்படியானாலும், மகமதியர்கள் இப்போதுள்ள தங்கள் தனித்தொகுதி பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாமல் தாலூக்கா போர்டு ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி பஞ்சாயத்து முதலியவைகளிலும் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் பெற இந்த சமயத்தை உபயோகித்துக் கொள்ளும்படி உஷாராயிருக்க வேண்டும் என்று சொல்லுவதோடு ஆதிதிராவிடர்கள் என்பவர்களுக்கும் இந்த சமயம் தவறினால் மற்றபடி அவர்களுக்கு இனி வெகு நாளைக்கு விமோசனமில்லையென்றும் உறுதியாய்ச் சொல்லுகின்றோம். இந்த கமிஷனால் ஏதாவது வேண்டுமா என்று கேட்கப்படுமானால் முதலாவது தீண்டாதார் எனப்படுவோர்க்கு மனிதத் தன்மை உண்டாக்கினால் அதுவே நமக்கு போதுமானது என்று சொல்லுவோம். ஆதலால் அவர்கள் இந்த சமயத்தில் கொஞ்சமும் ஏமாந்து விடாமல் உஷாராயிருக்க வேண்டும். பார்ப்பனரல்லாதாரும் தலைவர்களை நம்பிக் கொண்டு ஏமாந்து விடாமல் தாராளமாய் தங்கள் குறைகளை கமிஷனுக்கு எட்டும்படி நடந்து கொள்ள வேண்டும். இதனால் அதிகமான லாபம் கிடைத்துவிடாது என்று நாம் நம்பினாலும் பின்னால் நாம் செய்யப்போகும் கிளர்ச்சிக்கு நமது குறைகளை நாம் சர்க்காருக்கு தெரிவித்து விட்டுத்தான் கடைசி ஆயுதத்தை எடுக்க நேர்ந்தது என்பதையாவது உலகம் அறிய இது ஒரு சந்தர்ப்பமாகும். தவிரவும் நமது நிலை சில வெள்ளைக்காரருக்குத் தெரியாது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளவும் வேண்டும், உதாரணமாக கல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் தலைவரான கோஸ்வாமி என்பவரிடம் சென்ற மாதம் நமது நிலையைச் சொன்ன காலத்தில் “அப்படியா” “வாஸ்தவமா” என்று இரண்டு மூன்று முறை கேட்டார். பக்கத்து மாகாணத்துக்காரருக்கு தெரியாத விஷயம் சீமையில் இருப்பவனுக்கு தெரியும் என்று சொல்லுவது சரியாகாது.

 

டாக்டர். நாயர் சீமையில் இருக்கும் பொழுது பார்ப்பனரல்லாதாருக்கு பெரிய உத்தியோகங்கள் இல்லையென்று ஒரு வெள்ளைக்கார பார்லிமெண்ட் மெம்பரிடம் நாயர் சொன்னபோது, மிஸ்டர் க்ஷ.சூ. சர்மா “இந்தியா நிர்வாக சபையில் இருக்கிறாரே அது போதாதா” என்று கேட்டா ராம். எனவே ஸ்ரீமான் க்ஷ.சூ. சர்மா பார்ப்பனரா அல்லவா என்பது அவர் களுக்குத் தெரியவில்லை என்றாவது அல்லது நமது நாட்டு பார்ப்பனர்கள் அவரைப் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லி வைத்து ஏமாற்றி இருக்க வேண்டுமென்றாவதுதான் நாம் நினைத்தாக வேண்டும். ஆதலால் பார்ப்பனர் களின் அக்கிரமங்களை தாராளமாய் இந்த சமயம் சொல்லி விடுவதோடு மனுதர்ம சாஸ்திரத்தையும் சமர்ப்பித்து விட வேண்டும்.

 

இதனால் நமது சுயமரியாதைக்கு யாதொரு கெடுதியும் வந்துவிடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைக்கத்தக்கது.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.02.1928)

 
Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.