ராயல் கமிஷனை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்கின்ற கூச்சல் பத்திரிகைகளில் வரவர பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகின்றதே தவிர காரியத்தில் குறைந்து கொண்டே போகின்றது. பொதுவாக கூறுமிடத்து மகமதிய பொது ஜனங்கள் சற்றேறக்குறைய யாவரும் பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே இருக்கின்றார்கள்.
உத்தியோகப் பேய் பிடித்தவர்களும் அரசியல் வாழ்வுக்காரர்களுமான ஒரு கை விரலுக்குள் அடங்கின சில பேர்கள் மாத்திரம் தான் பகிஷ்காரப் புரட்டில் சேர்ந்திருக்கிறார்கள். மற்ற மகமதிய தலைவர்கள் எல்லோரும் பகிஷ்காரத்தை வெறுக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் மேல் கண்ட கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பு தவிர வேறு பெயர்கள் பகிஷ்கரிக்க காணப்படுவதாய் சொல்வதற்கில்லை.
இப்படியிருக்க அரசியலின் பேரால் பிழைக்கும் தலைவர்கள் என்போரும் பத்திரிகைகளும் உலகமே பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றது என்று மனதறிந்த பொய்யை பரப்புகின்றார்கள். இவர்களில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகளைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. பார்ப்பனரல்லாத பத்திரிகைகளிலும் சில இக்கூட்டத்தில் கோவிந்தாப் போட்டு வருவது மிகவும் பரிகசிக்கத் தகுந்த காரியமாகும். உதாரணமாக ‘தமிழ்நாடு’ பத்திரிகை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது.
மகமதிய சமூகம் இவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றது என்பதும் இவர்களது அபிப்பிராயத்திற்கு எவ்வளவு தூரம் மகமதிய சமூகம் மதிப்பு கொடுத்து வந்திருக்கின்றது என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.
இப்படியிருக்க சென்னையில் நடைபெறும் ‘லோகோபகாரி’ என்னும் ஒரு வாரப்பத்திரிகை இந்த புரட்டுக் கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொண்டதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. இவ்வளவு மோசமான நிலைமைக்கு அப்பத்திரிகை இதுவரை வந்ததாக நமக்கு ஞாபகமில்லை. அது சோதனை என்ற தலைப்பின் கீழ் எழுதுவதாவது:-
“மிதவாதிகளும் அமிதவாதிகளும், இந்துக்களும், முஸ்லீம்களும் பகிஷ்காரத்தில் ஒன்றுபட்டு வருகிறார்கள். ஒரு சில சுயநலவாதிகளும் உத்தியோக வேட்டைக்காரர்களும் மட்டும் இதில் வேறுபட்டிருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றது.
இது யார் யாரை மிதவாதி, அமிதவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் யார் யாரை சுயநலவாதி உத்தியோக வேட்டைவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் நமக்கு விளங்கவில்லை.
லோகோபகாரிக்கு ஸ்ரீசீனிவாச அய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சிவசாமி அய்யர், சிந்தாமணி அய்யர் முதலானவர்கள் சுயநலமற்றவர்களாகவும் உத்தியோக வேட்டைக்காரர்கள் அல்லாதவர்களாகவும் ஆகி விட்டதோடு பகிஷ்கரிக்கக்கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரு சிலராகவும் சுயநலவாதிகளாகவும், உத்தியோக வேட்டைக்காரர்களாகவும் ஆகிவிடும்படியான அவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்ட ரகசியம் நமக்கு தெரியவில்லை. ‘லோகோபகாரி’ யோக்கியப் பொறுப்புள்ள பத்திரிகையாயிருக்குமானால் பகிஷ்கரிக்கக் கூடாது என்கின்றவர்களை உத்தியோக வேட்டையும் சுயநலமும் உள்ள ஒரு சிலரின் பெயரைக் குறிக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.
இந்த நிலைக்கு ‘லோகோபகாரி’ வர நேர்த்ததற்கு நாம் மிகுதியும் இரங்குகின்றோம். ‘லோகோபகாரி’யின் தற்கால நிலை ‘தமிழ்நாடு’ பத்திரிகையை எவ்வளவு நல்லதாக்கி விட்டது.
‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கும் ஒரு சகோதரன் இருக்கின்றது என்பதை காட்டிவிட்டது. பெசண்டம்மையார் ஆதிக்கம் வலுக்க வலுக்க இன்னமும் யார் யார் நிலைமை எப்படி ஆகும் என்பது முடிவுகட்ட முடியாததுதான்.
நமது நாடு எவ்வளவு பைத்தியகாரத்தனத்தில் இருக்கின்றது என்பதும், யார் வேண்டுமானாலும் பாமர மக்களை ஏமாற்றக்கூடும் என்ற நிலையில் இருக்கின்றது என்பதையும் அறிய இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்று கேட்கின்றோம்.
ஒத்துழையாமையை வஞ்சித்த ஆள்களிடம், அதை ஒழித்த ஆள்களிடம், நல்ல சமயத்தில் மோசம் செய்த ஆள்களிடம், ஒரு சமூகத்தாரின் ஆதிக்கத்தை அழித்து அடிமைப்படுத்துவது தான் எங்கள் கொள்கை என்று சொல்லுகின்ற ஆள்களிடம், அதையே காங்கிரஸ் கொள்கை என்கின்ற ஆள்களிடம் அபிமானம் ஏற்பட்டு அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வருமானால் அவர்களைப் பின்பற்றி நாடு வர வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம்.
இப்போதைய பகிஷ்கார இயக்கம் மகமதியர்களுக்கும் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விரோதமான பலனை தரத்தக்கது என்று அந்த கருத்தைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். இந்த கமிஷனால் மேல்கண்ட கூட்டத்தாரின் சுயமரியாதைக்கு ஏதாவது அனுகூலம் ஏற்படுமானால் அந்த சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக்கூடாது. அரசியல் சம்பந்தமான உரிமைகள் என்பது நமக்கு வருவதைவிட வராதொழிவதே மேலானதாகும். ஏனெனில் எது வந்தாலும் அது உத்தியோகமாகத்தான் இருக்கும். பார்ப்பனர்களுக்கும் ஆங்கிலம் படித்த கூட்டத்தார் என்கின்ற சிலரின் சுயநலத்திற்குந்தான் உதவும். பாமர மக்களுக்கு யாதொரு பலனும் கண்டிப்பாய் உண்டாகாது என்பது உறுதி. நரகம் வரினும் சரி, தேசத்துரோக பாவம் சுற்றினாலும் சரி, சுயநலப்பழி வரினும் சரி ஒன்றுக்கும் அஞ்சாமல் சுயமரியாதை அடைய முயல்வதே முக்கிய கடமையாகும்.
(குடி அரசு - தலையங்கம் - 04.12.1927)