கோவை மகாநாட்டின் முடிவு (குடி அரசு - தலையங்கம் - 10.07.1927)

Rate this item
(0 votes)

தீர்மானத்தின் வாசகங்கள் சர்வ ஜாக்கிரதையாக அமைக்கப்பட்டிருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எவ்வளவு சாமார்த்தியமுள்ளதாயிருந்தாலும் தீர்மானத்தின் பலன் நமது முன்னேற்றத்தை தடுத்து விட்டதென்றே சொல்லுவேன். தீர்மானத்திற்குப் பிறகு இந்த ஒரு வாரத்திற்குள் மக்கள் நிலைமையும் மனப்பான்மையையும் பார்க்கும்போது பொது ஜனங்களுக்குள்ளாக ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள் என்கிற உணர்ச்சி பரவுவதற்கு ஆதாரங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த உணர்ச்சிக்கு நமது பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரம் ஒரு புறமிருந்தாலும், இப்போது நம்முடன் வந்து புதிதாக சேர்ந்தவர்கள் தங்களது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள இம்மாதிரி திரித்து கூற வேண்டியதவசியமாயிருந்தாலும், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ளவர்களின் மனப்பான்மையும் நடத்தையுமே முக்கிய காரணமாயிருக்கிறது என்பதையும் நான் ஒளிக்க முடியவில்லை.

 

இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு நான் தடையாய் இல்லாமல் இருந்ததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சிலருக்கு காங்கிரசின் மூலம் பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளியாக்க தங்கள் பிரசாரங்களைச் செய்யலாம் என்கிற ஆசை உண்டாய்விட்டது என்பது எனக்கு நன்றாய்த் தெரிந்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்காக ஆதியில் நான் எவ்வித உதவியும் செய்தவனுமல்ல. அது மாத்திரமல்லாமல் அதற்கு ஒரு சிறு கெடுதியாவது செய்யாமல் இருந்தவனுமல்ல. இப்படிப்பட்ட ஒருவன் அக்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் விருப்பத்திற்கு ஏன் முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டும் என்பதும், அவர்கள் என்னைவிட பொறுப்பும் எல்லா விஷயங்களும் நன்கு அறிந்தவர்கள் என்பதும், இக்கட்சியை எதிர்த்து வந்த சில கனவான்கள் கூட ஜஸ்டிஸ் கட்சியின் நேர்மையை உணர்ந்தோ அல்லது அதனுடைய தற்கால நிலையைக் கருதியோ அதனுடன் சேர்ந்து அதற்கு உதவி செய்வதாய் சொல்லுவதையும் நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதும், இப்படி எதிர்ப்பதின் மூலமாய் ஏற்படும் பலனை நானே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்துவிட்டால் முழுப் பொறுப்பும் எனது தலையில் விழுவதானால் அதைச் சுமக்க எனக்கு அது சமயம் தைரியம் இல்லை என்பதும், முக்கியமாக எனது பலவீனத்தின் தன்மையான தாக்ஷண்ணியமுமே அத்தீர்மானம் நிறைவேற்ற உதவியாயிருந்ததே அல்லாமல் பல தலைவர்களும் சில பத்திரிகைகளும் கூறுவது போல் பெருந்தன்மையை உத்தேசித்தோ ஒற்றுமையை உத்தேசித்தோ நான் விட்டுக் கொடுக்கவில்லையாதலால் அவர்களது பாராட்டுதலுக்கும் புகழுரைகளுக்கும் நான் ஒரு சிறிதும் அருகனல்ல.

 

காங்கிரசைப் பற்றிய எனது அபிப்பிராயம் ஏற்கனவே நான் தெரிவித்து வந்திருக்கிறேன். அதாவது அது திருத்த முடியாததும் பாமர மக்களை பலி கொடுத்து வாழவேண்டிய படித்த வகுப்பினர்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்திய இயக்கம் என்பதுதான். ஆனால் கோவை மகாநாட்டுத் தீர்மானத்திற்கு மூல புருஷர்களாயுள்ளவர்கள் காங்கிரசை அப்படிப்பட்ட சுயநலக்காரர்கள் கைவசமிருந்து கைப்பற்றி திருத்தி பாமர மக்களுக்கு உபயோகப்படும்படி செய்யலாம் என்கிறார்கள். இந்தக்காரியம் மகாத்மா காந்தி செய்து பார்த்து தனது தோல்வியை கண்ணியமாய் ஒப்புக்கொண்டு அதாவது “படித்த வகுப்பாரை என் வழிக்குக் கொண்டுவரக்கூடிய சக்தி கடவுள் எனக்கு கொடுக்கவில்லை. எனது தோல்வியை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று சொல்லியிருப்பதுடன் தனக்கு தோன்றிய முறையில் தேசத்தொண்டு செய்ய தன்னிஷ்டப்படி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டார். அந்த இயக்கமும் படித்த வகுப்பார் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து விட்டதால் “புளிப்புக்கு நீளம் உருண்டைக்கு அதனப்பன்” என்பதுபோல் அவரது அகில இந்திய சர்க்கா சங்கமும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாத வகுப்பை நசுக்க பார்ப்பன சூழ்ச்சிக்கும் ஆளாகி விட்டது. இனி அதன் கொடுமையில் இருந்து தப்புவதற்காகவும் பாடுபட வேண்டிய பளுவும் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.

 

எனினும் இப்போது நம்முடன் வந்து சேர்ந்து ஜஸ்டிஸ் கட்சியாரையும் காங்கிரசுக்கு அழைக்கிறவர்கள் ஒரு சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, “காங்கிரசானது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு விரோதமாயிருப்பது உண்மைதான். அதற்கு காரணம் உண்மையான பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் இல்லாத காரணத்தாலேயல்லாமல் வேறல்ல. அந்தப்படி காங்கிரசில் மற்றும் சிலர் சேர்ந்து உழைத்துப் பார்த்து முடியாவிட்டால் அதை விட்டுவிட்டு வந்து நீங்கள் சொல்வது போல செய்கிறோம்” என்கிறார்கள். அவர்கள் சொல்லுவது ஒப்புக் கொள்ளக்கூடியதல்ல என்பதும் இதற்காக செலவிடுங்காலம் வீண் என்பதும் எனக்கு நன்றாய்த் தெரியும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு போக அனுமதி கேள்க்கும் சில கனவான்கள் இந்த காரணம் சொல்லுவதில்லை. மற்றபடி அவர்கள் சொல்லுவதென்னவென்றால் “பார்ப்பனரல்லாதார்களை நசுக்குவதற்காகவும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் பார்ப்பனர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அநேக ஆயுதங்களில் இந்தக் காங்கிரசும் ஒரு ஆயுதமாயிருக்கிறது. அதை எப்படியாவது அவர்கள் கையிலிருந்து பிடுங்கி விட வேண்டும். அதாவது, அதன் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதி ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காகவே அங்கு போக இஷ்டப்பட்டவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்கிறார்கள். இவையெல்லாம் ஸ்ரீமான் .சி.ஆர். தாசைக் கொண்டு பார்ப்பனர்கள் சட்டசபைக்குப் போக காங்கிரசை அனுமதி கேட்டதற்கு சமானமாயிருந்தாலும் இந்த வாதங்கள் பாமர மக்களில் பலரை ஏமாற்றி அவர்களுக்கு இவைகளில் ஒரு மோகம் உண்டாகச் செய்துவிட்டதால் நமது முன்னேற்றத்திற்கு நமது தனி இயக்கத்தை விட வேறு கதி இல்லை என்று எண்ணி இருந்த மக்களின் கருத்து இப்போது இரண்டு காரியங்களில் பிரவேசிக்க நேர்ந்துவிட்டதானது நமக்கு பலக் குறைவேயாகும்.

 

ஆனாலும் ஒன்றும் விசேஷமாய் முழுகிப் போய்விடவில்லை. ஆயிரக்கணக்கான வருஷங்களாய் ஏமாற்றப்பட்டு அழுத்தப்பட்டு கிடக்கிற மக்களுக்கு இந்த ஒரு சிறுதடையானது பிரமாதமான கெடுதி ஒன்றும் செய்துவிடாது. ஆனாலும் இவைகளுக்கு எல்லாம் காரணமாய் தேசத்தின் நிலை மிகுதியும் நாணயக் குறைவுள்ளதாகவும் பிறரை ஏமாற்றுவதன் மூலமே மற்றொருவர் வாழக்கூடியதாகவும் பொது வாழ்க்கை ஏற்பட்டுவிட்டது. பொய்யும் ஏமாற்றலுமே மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்களாயிருக்கும்போது யார்தான் என்ன செய்ய முடியும். உண்மை பேசுகிறவன் வாழ முடிவதில்லை. வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாராயிருந்து உண்மை பேசத் துணிகிறவர்கள் வெகு வெகு சொற்பமாயிருக்கிறார்கள். இவ்வியற்கைக்கு மகாத்மா காந்தி கூட சிற்சில சமயங்களில் தப்ப முடியாமல் திக்குமுக்காடி வருகிறார் என்றால் மற்றவர்களைச் சொல்லுவதில் பயனில்லை. எனவே பொறுமையையும் நம்பிக்கையையும் கைவிடாமல் 3,4 மாதங்களுக்கு விட்டுப் பார்ப்பதற்கு வேண்டிய தைரியத்தை ஆண்டவன் நமக்கு அருளட்டும். தலைவர்கள் என்போர்கள் தங்கள் சுயநலத்திற்காக நம்மை ஏமாற்றி இத்தீர்மானங்கள் செய்து கொண்டார்கள் என்று நினைக்கும்படி நடந்து கொண்டார்களானால் பின்னால் என்ன செய்வது என்பது எமக்குத் தெரியும். பின்னால் இன்னும் பலமாய் வேலை செய்ய இப்பொறுமை எமக்கு உதவும் என்றே நம்பி இருக்கிறேன். ஆதலால் காங்கிரசில் ஈடுபட்ட ஈடுபடுகிற மக்கள் நீங்கலாக ஆங்காங்குள்ள மற்றவர்கள் அவ்வவ் விடங்களில் உள்ள சுயமரியாதைச் சங்கங்களையும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கங்களையும் பலப்படுத்தி வைப்பதுடன் அவை இல்லாத இடங்களில் உடனே இவைகளை ஸ்தாபிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். இதற்காக இரண்டு மூன்று உழைப்பாளிகளையும் நியமித்து வெளியில் அனுப்பிக் கொடுக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். எனது கூட்டு உழைப்பாளிகள் நம்பிக்கை இழந்துவிடாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு சோதனை காலம் என்பதில் சந்தேகமில்லை. இச்சோதனைக்கு நாம் தப்பிப் பிழைக்க வேண்டுமே அல்லாமல் அதைரியம் கொள்ளக் கூடாது. உண்மைக்கு யோக்கியதை உண்டு என்பதை நம்ப வேண்டும். இன்னமும் எனது உடல் நலிவு முழுவதும் குணப்படவில்லை. ஆதலால் விரிவாய் எழுத இயலாததற்கு வருந்தி இதை முடிக்கிறேன்.

(குடி அரசு - தலையங்கம் - 10.07.1927)

Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.