மந்திரிகளின் நியமனம் (குடி அரசு - கட்டுரை - 19.06.1927)

Rate this item
(0 votes)

ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரி பதவியில் இருந்த காலத்தில் யாருக்காவது ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் செய்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நமது பார்ப்பனர்கள் ஒவ்வொரு பொய்க் கதையைக் கட்டி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தூஷித்துக் கொண்டு பாமர மக்களுக்கு அவ்வியக்கத்தினிடம் அருவருப்புண்டாகும்படி எவ்வளவோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து கொண்டு வந்தது பொது ஜனங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அம்மாதிரி நியமனங்கள் பார்ப்பனர்களுக்காவது அக்கோஷ்டியைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதாருக்காவது கிடைத்துவிட்டால் அதைப்பற்றி வெளியிலே பேசாமல் ரகசியமாக அனுபவித்துக் கொண்டு வந்ததும் யாவரும் அறிந்தது. உதாரணமாக ஸ்ரீமான் ஸி.வி. வெங்கட்டரமண ஐயங்காருக்கு கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு நியமனம் செய்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையாவது பேசவே இல்லை. அதே சமயத்தில் சென்னை முனிசிபாலிடிக்கு ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரை அதே மந்திரிகள் நியமனம் செய்த காலத்தில் கொல்லை வழிப் பிரவேசமென்று எழுதியிருந்தார்கள். அதற்குச் சமாதானமாகத் தேர்தலில் தோற்றவர்களை நியமனம் செய்வதுதான் கொல்லை வழிப் பிரவேசமேயொழிய தேர்தலுக்கு நின்று வெற்றி பெறத்தக்க யோக்கியதை இல்லாதவர்களை நியமிப்பது கொல்லை வழிப் பிரவேசமல்லவென்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே குறிப்பிடப்போகும் சம்பவத்தை நமது பார்ப்பனர்கள் என்னவென்று சொல்லுவார்களோ, தெரியவில்லை.

கோயமுத்தூர் ஜில்லா கல்விச் சபைக்கு சமீபத்தில் நியமனம் செய்யப் பெற்றிருக்கும் மாதிரியும் அப்பொழுது சத்தம் போட்ட பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு இப்பொழுது கண்ணே இல்லையா? புத்திதான் இல்லையா? என்பதும் வாசகர்களால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது சபைக்கு சமீபத்தில் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட ஸ்ரீமான் டி.எம். ராமச்சந்திரன் செட்டியார் என்பவர் ஜில்லா ஸ்தல ஸ்தாபன மூலியமாய் செனட்டிற்கு நின்று வெகு வித்தியாசமான ஓட்டுகளால் தோல்வியுற்றவர். அதாவது இவர் பட்டதாரி என்கிற பெருமையுடையவராக இருந்து கோயமுத்தூர் டவுன் முனிசிபல் கவுன்ஸிலிலேயே 30 ஓட்டுக்களுக்கு மேல் இருந்தும், இவருக்குப் போட்டியாக நின்றவர் பட்டதாரி அல்லாதவராக இருந்தும் வெளியூர்க்காரராக இருந்தும் அவருக்கு சுமார் 60 ஓட்டுக்கள் கிடைத்ததுமல்லாமல் திரு செட்டியார் 10 ஓட்டுக்கள்தான் பெற்று தோல்வியடைந்தார். எஜுகேஷன் கவுன்சிலுக்கும் கோயமுத்தூர் முனிசிபாலிடி மூலியமாக நின்று வேறொரு பட்டதாரி அல்லாதவர் இவருக்குப் போட்டியாக நிற்க இவர் வெற்றிபெற முடியாமல் பின் வாங்கிக் கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. தவிர திரு செட்டியார் அவர்களுடைய வகுப்பில் யாருக்கும் அந்த ஸ்தானமில்லை. ஆதலால் அவ்வகுப்பாருக்காக செட்டியாருக்குக் கொடுக்கப்பட்டதென்று சொல்லுவதாக இருந்தாலோ அதுவும் இல்லை. ஏனெனில் அதே வகுப்பில் ஸ்ரீமான் செட்டியார் குடும்பத்திலேயே ஸ்ரீமான் செட்டியாரின் தமயனாருடைய குமாரரின் மனைவியாரும் தமது சின்ன மாமனாரின் குமாரத்தியும் ஆகிய ஸ்ரீமதி லலிதாம்பாள் அவர்கள் ஏற்கெனவே அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

 

அப்படியிருக்க தோல்வியுற்றவரும், அதே வகுப்பில் மற்ற ஒரு நியமனம் பெற்ற வகுப்பினரும் ஆகிய கனவானை எதற்காக மந்திரி நியமித்தார். அந்த சபைக்கு லாயக்குள்ள வேறு கனவான்களாவது அல்லது அச்சபையில் பிரதிநிதித்துவமடையாத வேறு வகுப்பாராவது இல்லை என்கிற காரணத்தினாலா? அல்லது மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கட்கு நியமனம் பெற்ற ஸ்ரீமான் செட்டியார் விருந்து முதலானது செய்து மரியாதை செய்தார் என்பதற்காகவா? இதைப்பற்றி எந்தப் பார்ப்பன பத்திரிகையாவது இதை அவர்களது நிருபர்களாவது பிரஸ்தாபித்தார்களா? எந்த சட்டசபை வாயாடிகளாவது வெளிப்படுத்தினார்களா என்று கேழ்க்கின்றோம். இது எப்படியோ இருக்கட்டும். இந்த நியமனத்தினால் பெரிய தீமையோ நன்மையோ ஏற்பட்டதாக நாம் சிறிதும் கவலைப்படவில்லை. அல்லது ஸ்ரீமான் செட்டியார் அந்த ஸ்தானத்திற்கு லாயக்கில்லாதவர் என்றும் சொல்வதற்கு வரவில்லை. நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளின் பேரில் சொல்லிக் கொண்டு வந்த குற்றங்களும் அவர்களுக்கு விரோதமாகச் செய்து கொண்டுவந்த பிரசுரங்களும் யோக்கியமானதா? அயோக்கியமானதா? என்பதையும் இவைகள் தேசத்திற்காகச் செய்யப்பட்டனவா? அல்லது பார்ப்பனர் ஆதிக்கத்திற்காகச் செய்யப்பட்டனவா? என்பதைப் பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 19.06.1927)

 
Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.