தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஒரு வேண்டுகோள். குடி அரசு - கட்டுரை - 17.10.1926

Rate this item
(0 votes)

சென்னை மாகாண வட மத்தியபாக ஜமீன் தொகுதியான சித்தூர், செங்கல்பட்டு, சென்னை, கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் ஆகிய ஜில்லாக்களின் ஜமீன்தாரர்கள் பிரதிநிதியாக சென்னை சட்டசபைக்கு வரப்போகும் தேர்தலுக்கு கனம் பனகால் ராஜா அவர்களுக்குப் போட்டியாக சென்னை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் என்கிற ஒரு பார்ப்பனர், ஜமீன்தார் என்கிற பேரால் நிற்கிற விஷயம் எல்லோரும் அறிந்ததே. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நாம் இதைப் பற்றி எழுதியிருந்தோம். ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் சட்டசபைக்கு நிற்கும் நோக்கமெல்லாம் எவ்வகையிலாவது பனகால் ராஜாவை சட்டசபையிலிருந்து துரத்திவிட்டுப் பார்ப்பன ஆதிக்கத்தைச் சட்டசபையில் நிலை நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமே. ஆதலால் பார்ப்பனரல்லாத ஜமீன்தார்கள் ஓட்டுகளே 100க்கு 75 பேராக இருந்தும் பனகால் ராஜாவின் விரோதிகளான இரண்டொரு ஜமீன்தாரர்களின் ஆதரவையும் ஸ்ரீமான் அல்லாடி ஐயரின் வக்கீல் உத்தியோகத்தின் பலனாய் அடிமை கொண்ட சில ஜமீன்தாரர்களுடைய உதவியையும், மற்றும் கடனில் சிக்கி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் சில ஜமீன்தாரர்களுடைய நிலைமையையும் ஆதரவாய்க் கொண்டு நிற்கத் துணிந்திருக்கிறார். ஆனால் இம்மூவித ஜமீன்தாரர்களை அதாவது ஜமீனுக்கு ஜமீன் விரோதமும், ஜமீன்தாரர்களுக்கு கோர்ட்களில் விவகாரமும், ஜமீன்தாரர்களுக்குக் கடனும் ஆகிய இக்கஷ்டங்கள் ஜமீன்தாரர்களுக்கு மாத்திரமே அல்லாமல் மற்றும் இந் நாட்டிலுள்ள பெருங்குடி மக்களுக்கும் உண்டாவதற்கே காரண பூதர்களாயிருப்பவர்கள் நம்நாட்டுப் பார்ப்பனரும் பெரும்பாலும் பார்ப்பன வக்கீல்களுமேயாவார்கள் என்பது ஜமீன் சமூகம் அறியாததல்ல.

அன்றி இனியும் நம்நாட்டில் நமது பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்குள் இம் மாதிரியான கலகத்தையும் விவகாரத்தையும் அநாவசியச் செலவையும் ஏற்படுத்தி வைத்து அதன் மூலம் அவர்களை பல விதத்திலும் தங்களுக்கு அடிமைப்படுத்தி வைத்துத்தான் வாழ வேண்டியிருக்கிறார்களே அல்லாமல் வேறு மார்க்கம் அவர்களுக்கு இல்லையென்பதும் உலகமறிந்த விஷயம். அப்படியிருக்க நம் நாட்டின் பழம் பெருங்குடி மக்களும் ராஜவம்சத்தினருமான ஜமீன்தார் தொகுதிக்கு ஒரு பார்ப்பனர் அபேக்ஷகராக நிற்க நேர்ந்திருக்கிறதென்றால் அத்தொகுதியின் பிற்கால நிலைமையைப் பற்றி யாரும் கவலைப்படாமலிருக்க முடியாது. புதிய சீர்திருத்த சந்தர்ப்பத்தில் ஜமீன்தார்களுக்கென்று தொகுதிகளை வகுத்து அவைகளுக்கென்று சில ஸ்தானங்களையும் ஒதுக்கி வைத்தது இவ்வித வக்கீல் பார்ப்பனர்கள் கைப்பற்றுவதற்காகத்தானா? என்பதை ஒவ்வொரு ஜமீன்தாரரும் நடுநிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்பார்களேயானால் அதன் உண்மை விளங்காமல் போகாது.

 

ஜமீன்தாரர்களின் நன்மையை ஒரு வக்கீல் - அதிலும் ஜமீன்தாரர்களின் ரத்தத்தை உறிஞ்சிப் பிழைக்கும் பார்ப்பனராயிருக்கிற ஒரு வக்கீல் எவ்வழியில் பாதுகாக்க முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை. தவிரவும், ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஜமீன் தொகுதியின் மூலம் நிற்பதினுடையவும் அதிலும் பனகால் ராஜாவுக்குப் போட்டியாயிருப்பதினுடையவும் ரகஸ்யம் தான் என்ன? ஜமீன்தார் தொகுதியின் நன்மையை உத்தேசித்தா? அல்லது பனகால் ராஜா பேரில் உள்ள மனஸ்தாபத்தை உத்தேசித்தா? என்று பார்ப்போமானால் இவ்விரண்டும் அல்லவென்பது நன்றாய் விளங்கும். எப்படியெனில் ஜமீன்தார் நன்மையிலோ வக்கீல் அய்யருக்கு கவலை இருக்க நியாயமே இல்லை. பனகால் ராஜாவுக்கும் ஸ்ரீமான் ஐயருக்கும் நேரிட்டு விரோதம் இருப்பதாயும் சொல்லுவதற்கில்லை. ஆனால் வேறு காரணமொன்றிருக்க வேண்டும். அதென்னவென்றால், தற்காலம் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கென்று ஏற்பட்டிருக்கும் ஸ்தாபனத்திற்கு பனகால் ராஜா தலைமை வகித்திருப்பதும் அத்தலைமையின் பலனாய் பார்ப்பன ஆதிக்கம் தடைபட நேர்வதுமாயிருக்கிற ஒரே எண்ணத்தாலேயே அவரை எப்படியாவது தலைமை ஸ்தானத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்கிற பெருங் கவலையோடு நமது நாட்டுப் பார்ப்பனர்களெல்லாம் ஒன்றுகூடி சதியாலோசனை செய்து, ஸ்ரீமான் அல்லாடி அய்யரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் நிற்கிறார். இதற்கு ஸ்ரீமான்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், டி.வி. வெங்கட்டராம அய்யர், சி.பி.ராமசாமி அய்யர் முதலிய பார்ப்பனர்கள் உள் உளவாக இருந்து கொண்டு ஜமீன்தாரர்களைப் பல வழிகளிலும் வேட்டையாடுகிறார்கள். அதன் ரகஸ்யத்தை இதில் எழுதவே முடியாத மாதிரியில் இருப்பதோடு மற்றும் பலர் பணத்தை மூட்டை மூட்டையாக வைத்துக் கொண்டு ஜமீன்தாரர்களின் வீடு வீடாய் அலைகிறார்களெனவும் தெரிய வருகிறது.

 

இப்பொழுது ஸ்ரீமான் அல்லாடி ஐயரின் வெற்றி ஜமீன்தாரர்களின் வெற்றியா? அல்லது பார்ப்பனர்களின் வெற்றியா? என்பதும் பனகால் ராஜாவின் தோல்வி தனிப்பட்ட அவருடைய சொந்த தோல்வியா? அல்லது பார்ப்பனரல்லாத சமூகத்தினுடையவும் ஜமீன்தார் தத்துவத்தினுடையவும் தோல்வியா? என்பதையும் இந்நாட்டுப் பெருங்குடி மக்களின் பொறுப்புள்ள தலைவர்களாகிய ஜமீன்தார் சமூகத்தார் உணர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறோம். தேர்தல் தீருகிற வரையிலும் நமது பார்ப்பனர்கள் ஜமீன்தாரர்களை எஜமானரென்றும், ராஜாவென்றும், மஹாராஜாவென்றும், தலைவரென்றும் சொல்லி ஏமாற்றுவார்கள். தேர்தல் தீர்ந்த உடனே அவர்களுடைய வாசலில் போய் நின்றால் கூட நீ யார்? எந்த ஊர்? என்றுதான் கேட்பார்கள். இந்த ஒரு முக்கியமான தென்னாட்டின் சோதனை காலத்தில், ஜமீன்தார்,  பிரபுக்கள் தங்களுடைய பொறுப்புகளை பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு விற்று விடுவார்களேயானால் தங்கள் ஜமீன்தார் சமூகத்தை தாங்களே கெடுத்துக் கொள்வதோடல்லாமல், பார்ப்பனரல்லாதாரின் உயிர் நாடியைப் பார்ப்பனர் கையில் கொடுத்து நசுக்கிக் கொல்லச் செய்தவர்களே ஆவார்கள். ஆதலால் ஜமீன் பிரபுக்களே இத்தேர்தலில் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாத உங்கள் பிரதிநிதியையே ஆதரித்துப் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 17.10.1926)

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.