Print this page

ஜாதிக் கட்சி என்றால் என்ன? விடுதலை - 09.05.1953

Rate this item
(0 votes)

இன்று நாட்டில், அரசியலில் அல்லது கொள்கை இயலில், கட்சி என்பதே மறைந்து போய்விட்டது. பஞ்சாயத்து போர்டு முதல் பார்லிமெண்டு (நாடாளுமன்றம்) வரை ஜாதிகளின் பேரால்தான் அதுவும் கொள்கை, நாணயம் இல்லாமல் ஜாதிக் கட்சிகள் வளர்ந்து வருகின்றன.

இவற்றுள் பார்ப்பன ஜாதிக் கட்சி மாத்திரம் அந்த அந்த ஜாதிக்கு ஏற்ப நேர்மையாய் நடந்து கொள்ளுகின்றது.

மற்ற ஜாதிக் கட்சிகள் ஓட்டுக்கு ஜாதிபேர் சொல்லுவதைத் தவிர காரியத்தில் என்ன செய்தாவது, எதை விட்டுக் கொடுத்தாவது தனது சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளுவது என்பதைத் தான் கொள்கையாகக் கொண்டு இருந்து வருகிறது.

ஜாதிக் கட்சி என்பது மற்ற ஜாதி மக்களை ஏய்க்கவும் பதவிபெற்றால் தங்கள் ஜாதி நலம் கூட கவனிக்காமல் ஜாதியின் பேரால் ஜாதி உட்பட பொதுநலத்தை விட்டுக் கொடுத்து பணம், பதவி, சலுகை சம்பாதிப்பதும் மாத்திரமே லட்சியமாகக் கொண்டு இருக்கிறது.

கல்வி விஷயத்தில் ஆச்சாரியார் செய்திருக்கும் அக்கிரமத் திட்டம் எல்லா ஜாதிககுமே கேடான பலன் தரும் காரியமாகும். இதைப்பற்றி எந்தக் கட்சியாரும் கவலைப்படவே இல்லை. ஒரு பேச்சம் பேசவே இல்லை.

ஆனால் லைசென்சு, பர்மிட், பதவி முதலிய சலுகைகளில் ஒரு கோஷ்டி கொள்ளையடிக்க அதற்கு ஆக பரிசு பெற மாத்திரமே பயன்படுத்துகிறது.

ஆனதால் இனி ஒவ்வொரு ஜாதியிலும் ஜாதி பேரால் போட்டி கட்சி ஏற்பட வேண்டியது அவசியமாகிவிட்டது. இன்று பதவியிலிருப்பவர் எவரும் ஜாதிப்பேரால் பதவிக்கு வராமல் அந்தந்த ஜாதியார் செய்ய வேண்டும். படையாட்சி ஜாதியார் இதை அடுத்த தேர்தலில் பெரும் அளவுக்குச் செய்து காட்டுவார்கள் என்றே கருதுகிறோம்.

மற்ற ஜாதிக்கும் இயல்பாகவே முயற்சி ஏற்படலாம் என்று கருதுகிறோம்; இந்தப்படி ஒரு நிலை ஏற்பட்ட பின்பு தான் ஜாதி ஒழிய முடியும்.

இதற்குள் ஏராளமான 'வண்ணார்', 'நாவிதர்' முதலிய ஜாதிகள் விழித்துக் கொள்ளலாம் என்றும் கருதுகிறோம்.

 

பெரியார் ஈ.வெ.ரா. கட்டுரை.

விடுதலை - 09.05.1953

Read 76 times