Print this page

தமிழருக்கு மதம் கிடையாது-விடுதலை- 10.7.1961

Rate this item
(0 votes)

எங்கள் கவலையெல்லாம் மக்களிடத்தில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்படவேண்டும். மாறுதல் வேண்டும். மக்களிடத்தில் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றில் காட்டுமிராண்டித்தனமான புத்தி இருக்கிறது. இது மாற வேண்டும் என்று கருதி அதற்காகப் பாடுபடுகிறோம். எங்கள் கட்சிக்குப் பெயர் தமிழர் கட்சியாகும். தமிழர் கட்சியின் லட்சியம் தமிழர் நலன் பற்றியதேதான். மற்ற எந்தக் கட்சிக்கும் தமிழர் நலன் பற்றிக் கவலையில்லை.

காங்கிரஸ்காரர்களைக் கேட்டால் தமிழ் -தமிழ்நாடு - தமிழர்கள் என்று பிரித்துப் பேசாதே. எல்லோரும் அண்ணன் தம்பிகள் -_- எல்லோரும் சமம் - பிரிக்கக்கூடாது என்பான். இங்குள்ள காங்கிரஸ்காரர் அல்ல,- காங்கிரசை ஏற்படுத்தியவனே செய்த ஏற்பாடு எல்லோரும் பாரதமாதா புத்திரர்கள் என்று. பாரதமாதாவுக்கு எத்தனை புருஷர்கள்? துலுக்கன், கிறிஸ்துவன்,  தமிழன் என்று கூறிக்கொண்டேதான் போக வேண்டும். பாரதமாதா என்று மகாத்மாகாந்தி ஆரம்பித்ததே பித்தலாட்டம். மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு தங்களை முன்னேற்றிக்கொள்ள இருப்பதைத் தடுக்கவே பாரதமாதா ஏற்பட்டது. இந்தக் கருத்தை நான் 30 ஆண்டுகளாகக் கூறிவந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கும் பாரதத்திற்கும் சம்பந்தம் என்ன என்று கேட்டால் இதை ஒரு பத்திரிகைக்காரன்கூட எழுதமாட்டான். எல்லா பத்திரிகைக்காரர்களும் வயிற்றுப் பிழைப்பைக் கருதி பித்தலாட்டம் அயோக்கியத்தனம் செய்பவர்கள்தான். ஒருவனுக்குக் கூட, நாம் தமிழர்கள் நலன்பற்றி பாடுபடணும், எழுதணும் என்ற கவலையே சிறிதுகூட இல்லை. அம்மாதிரி கருதி எழுதக்கூடிய பத்திரிகையே கிடையாது.

நாங்கள் கடவுள் இல்லை என்று கூற உங்களிடையே வரவில்லை. கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவனால்தான் முடியும். அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ கடவுளை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது தமிழன் கடவுளாக இருக்கட்டும். பார்ப்பான் கடவுள் வேண்டாம். இப்போதிருக்கிற கடவுள்களில் ஏதாவது தமிழன் கடவுள் உண்டா என்றால் இல்லை, எல்லாம் பார்ப்பனக் கடவுள்களேயாகும்.

அதுபோலவேதான் மதமும். தமிழனுக்கு தமிழன் மதமும் கிடையாது.  மற்ற நாட்டில் எல்லாம் அந்தந்த நாட்டின் பெயர் அந்நாட்டின் மொழியின் அடிப்படையில் இருக்கிறது. ஜப்பான் மொழியைக்கொண்ட நாடு ஜப்பான் என்று உள்ளது. ஃபிரான்சு மொழியைக் கொண்ட நாடு ஃபிரான்சு நாடு என வழங்குகிறது. இப்படியே எல்லாமும். ஆனால் தமிழ்மொழியைக்கொண்ட நம் நாட்டிற்கு என்ன பெயர் - இந்தியநாடு. இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அப்படித்தான் இதற்கும். இந்த எண்ணம் எங்களைத்தவிர வேறு யாருக்காவது ஏற்பட்டு உண்மையில் பாடுபடுகிறார்களா என்றால் கிடையாது.

சேத்தியாதோப்பில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு

விடுதலை- 10.7.1961

 

Read 63 times