Print this page

பார்ப்பான் பணக்காரனானால்? குடிஅரசு - 9.11.1946

Rate this item
(0 votes)

இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்து வரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராள மான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல்வந்தர்களாகவும், இலட்சாதிபதியாகளாகவும், ஆகிவிட்டார்கள்.

இதுதான் துவேஷப் பிரச் சாரத்தால் ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகிறார்கள். இது உண்மையானால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகதானே தவிர, பார்ப்பான் பணக்கார னாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் இராஜா சர். அண்ணாமலை செட்டியார், பொப்ளி ராஜா, சர்.ஷண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோட்டீஸ்வரனாகவும், இலட்சாதி பதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே, எனக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும் சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.

பணக்காரத் தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லையை கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக் கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல் ஜாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத் துக்கு மிக மிகக் கேடானதும், மகா குற்றமுடை யதாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மை யையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும். பெரிய மோசடியும் கிரிமினலுமாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது பதிலாகும்.

தந்தை பெரியார்.

குடிஅரசு - 9.11.1946

 
Read 28 times