Print this page

ஊரார் பேசிக் கொள்வது பற்றி...விடுதலை - 26.3.1969

Rate this item
(0 votes)

சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு.பா.வெ.மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ்டெண்ட் இன்ஜினியராக நியமிக்கப்பட்டபோது, ஒரு ஓவர்ஸீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார். பிறகு அவர் அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் வேலை ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த ஓவர்ஸீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார்.

இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும் போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தில் கண்டித்தார். இது அந்த ஓவர்ஸீயருக்குப் பிடிக்கவில்லை. நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே! என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி,

நீங்கள் சிறுவயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர், என் பெயர் ஏன் கெடும்? என்று கேட்டார்.

உங்களைப் பற்றி மக்கள் கண்டபடி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஓவர்ஸீயர் சொன்னார்.

என்ன பேசுகிறார்கள்? சொல்லுங்கள் என்று மாணிக்க நாயக்கர் கேட்டார்.

நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பேசுகிறார்கள் என்றார் ஓவர்ஸீயர்.

அந்தப்படி யார் சொன்னார்? சொல்லுங்கள் என்று சற்றே கோபமாகக் கேட்டார் மாணிக்க நாயக்கர். அதற்கு ஓவர்ஸீயர், ஜனங்கள் அப்படி பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொன்னார்.

உடனே மாணிக்க நாயக்கர், வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயணசாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்ளுகிறார்களே? அப்படி நீ வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். உடனே அந்த ஓவர்ஸீயர் கோபப்பட்டு, எந்த அயோக்கியப் பயல் அப்படி சொன்னான்? சொல்லு; முட்டாள்தனமாகப் பேசாதே என்றார்.

உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்ஸீயல் தலையில் இரண்டு, மூன்று போட்டார்; பக்கத்திலிருந்தவர்கள் தடுத்து ஓவர்ஸீயரைப் பார்த்து, நீங்களும் ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று சொன்னீர்கள்; அவரும் ஊரில் பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொன்னார். இதில் தப்பென்ன? உங்களைச் சொன்னதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் அவரைச் சொன்னது அவர் வேலைக்கே ஆபத்தாய் முடியுமே என்று சொல்லி ஓவர்ஸீயரை மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்படி செய்தார்கள். இது கரூரில் அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சி.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அரசியலில் எதிர்க்கட்சி மீது எதிரிகள் மீது குறை கூறுவதற்காகச் சிலர் எதையும் சொல்லிவிட்டு, அழுத்திக் கேட்டால், மக்கள் அப்படிப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குப் புத்தி வருவதற்காக உண்மையாய் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டேன்.

ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும்.

தந்தை பெரியார் அறிக்கை.

விடுதலை - 26.3.1969

Read 46 times