Print this page

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம். குடி அரசு துணைத் தலையங்கம் - 18.07.1926

Rate this item
(0 votes)

ஜுலை “மித்திர”ன் “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள் சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டுமென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று எழுதியிருக்கிறான். மதவிஷயத்தில் அரசாங்கத்தார் பிரவேசிக்கக் கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதாவது சர்க்காரால் சட்டம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்படியான புத்தி வந்ததற்கு நாம் மகிழ்கிறோம். ஆனால் இந்தப்புத்தி தானாகத் தோன்றவில்லை. ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகாரும், ஈ.வெ.இராமசாமி நாயக்கரும் தேவஸ்தானச் சட்டத்தை ஆதரித்தும் அதை எதிற்கும் பார்ப்பனர்களின் சூழ்க்ஷியைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ததின் பலனாகவும் இதை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஓட்டுக்கிடைக்காமல் போகுமோ என்கிற பயமும் பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர”னை “இந்துமத ஸ்தாபனம் சரியாக நடக்க ஒரு சட்டம் அவசியம்” என்று சொல்லும்படி செய்துவிட்டது.

ஆனால் “மித்திரன்” அதின் கீழாகவே “இந்த சட்டமானது தர்மங்கள் சரியாக நடைபெறும்படி செய்வதற்கு மாத்திரம் உத்தேசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்” என்கிறான். அப்படியானால் இப்போதிருக்கும் சட்டம் கோயில்களில் இருக்கும் “கல்லுசாமி”களை யெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, அந்த ஸ்தானத்தில் ஸ்ரீமான்கள் பனக்கால் ராஜாவும் வரதராஜுலு நாயுடுகாரும், இராமசாமி நாயக்கரும் உட்கார்ந்து கொண்டு இந்தப் பார்ப்பனர்களைக் கொண்டு அபிஷேகமும் பூஜையும் செய்யும்படி கேட்பார்கள் என்று “மித்திரன்” உண்மையிலேயே பயப்படுகிறானா அல்லது இந்த முகாந்திரத்தைச் சொல்லி அதை ஒழிக்க சூழ்க்ஷி செய்கிறானா என்பதை வாசகர்கள் உணர்வார்களாக.

குடி அரசு  துணைத் தலையங்கம் - 18.07.1926

 
Read 48 times