Print this page

பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே! விடுதலை - 3.11.1967

Rate this item
(0 votes)

திருக்குறளில் காணப்படும் மூடச் சொற்கள்

1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. இறைவன், 5. அய்ந்தவித்தான், 6. அறவாழியந்தணன், 7. எண்குணத்தான், 8. தாள் தொழல், 9. அடி சேர்தல், 10. நிலமிசை நீடு வாழ்தல்.

11. இருவினை, 12. பிறவாழி, 13. தாளை வணங்காத் தலை, 14. அமிழ்தம், 15. பூசனை, 16. வானோர், 17, நீத்தார், 18. துறந்தார், 19. இருமை, 20. வரன் என்னும் வைப்பு.

21. இந்திரன், 22. நிறைமொழி, 23. மறைமொழி, 24. அந்தணர், 25. சிவிகை பொறுத்தானோடூர்ந்தா னிடை அறமறிதல், 26. இயல்புடை மூவர், 27. இறந்தார், 28. தென்புலத்தார், 29. தெய்வம், 30. வானுறையும் தெய்வம்.

31. புத்தேளிர்வாழு முலகு, 32. புதல்வர், 33. ஏழு பிறப்பு, 34. சாவா மருந்து, 35. அமரர், 36. ஆரிருள், 37. அளறு, 38. ஒத்து, 39. பார்ப்பான், 40. செய்யவள்.

41. தவ்வை, 42. திரு, 43. மேலுலகம், 44. இன்னா உலகம், 45. அவ்வுலகம், 46. இலர் பலர், 47. அவிர் சொரிதல், 48. வேட்டல், 49. உயர்ந்த உலகம், 50. வையத்தின் வானம் நணிய துடைத்து.

51. ஈண்டு வாரா நெறி, 52. எழுமையும் ஏமாப் புடைத்து, 53. குடம்பை, 54. புக்கில், 55. பற்றற்றான், 56. ஊழ், 57. ஆ கூழ், 58. போ கூழ், 59. இழ ஊழ், 60. வகுத்த வகை.

61. மேற் பிறந்தார், 62. கீழ்ப் பிறந்தார், 63. அவி யுணவு, 64. குலம், 65. குடி, 66. குடும்பம், 67. எச்சம், 68. அந்தணர் நூல், 69. அறு தொழிலோர், 70. நூல் மறுப்பர்.

71. துறந்தார் படிவம், 72. அடியளந்தான், 73. மாமுகடி, 74. தாமரையினாள், 75. மந்திரி, 76. அலகை, 77. பேய், 78. உலகியற்றியான், 79. தேவர், 80. இமை யார், 81. அணங்கு, 82. தாமரைக் கண்ணானுலகு.

இவற்றில் சிலவற்றிற்கு பகுத்தறிவுப்படி பொருள் கூறுவதானாலும் அதற்கு எவ்வகையிலும் இடம் இல்லாத இன்றைய அனுபவத்திற்கும், காட்சிக்கும் ஒத்து வராத பல சொற்களுக்கு பகுத்தறிவாளர் என்ன சமாதானம் சொல்லக் கூடும்? வள்ளுவர் மாத்திரமல்ல; தொல்காப்பியர் மாத்திரமல்ல மற்றும் அக்காலத்திய எல்லா மக்களிடையேயும் மூட நம்பிக்கையும், காட்டு மிராண்டித் தன்மை கொண்ட கருத்துகளும், உணர்வு களும் இருந்தே வந்திருக்கின்றன.

ஆகவே, காட்டுமிராண்டித் தன்மை, மூட நம்பிக்கை பகுத்தறிவற்றத் தன்மை என்பவை பழங்காலத்தில் ஏதோ ஒருவர், இருவர் நீங்கலாக எல்லா மக்களிடத் திலும் இயற்கையாய் இருந்து வந்த தன்மைகளே ஆகும். இன்றைக்கு தமிழரிலேயே 100-க்கு 90 பேர் படித்த புலவர் மேதாவிகள் உட்பட காட்டுமிராண்டி களாய் காட்டுமிராண்டிக் கொள்கைக்கும், நடப்புக்கும் ஆட்பட்டவர்களாய் சமாதானம் சொல்ல முடியா விட்டால், சுத்த காலிகள் போன்ற முரட்டு சுபாவ முடையவர் களாயிருந்து குடிபோதையில் ஆழ்ந்த வர்கள் போல பேசுகிறார்கள் என்றால், நடிக்கிறார்கள் என்றால், இன்றைய நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியாத காட்டு மிராண்டிக் காலத்தில் மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை எவ்வளவு குறைந்த அறிவுள்ளவர்களும் நினைத்துப் பார்த்தால் நன்கு விளங்கும்.

இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்ன வென்றால், தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழ் இலக்கியங்கள் சமய நூல்கள் காட்டுமிராண்டிகளால் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப்பட் டவை என்றும், நான் சொல்லுவதை மறுக்கிறவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்ள என்னை வைபவர்கள், மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களில் ஒரு நபர் கூட எதனால் இந்தப்படி 40 - 50 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் என்று நான் ஆதாரங்களோடு சொல்கிறேனோ அவற்றிற்கு ஒன்றுக்குக் கூட, ஒருவர் கூட சமாதானம் சொல்லி என்னை வையாமல் போதையில் ஆழ்ந்தவர்கள் போல வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

நமது சமயம், நமது கடவுள்கள், அவற்றின் நடப்புகள், அவற்றிற்குண்டான கதைகள் அதை ஆதாரமாக வைத்துக் கொண்டாடும் பண்டிகைகள், பிரார்த் தனைகள், பூசைகள் வேண்டுதல்கள் இவற்றிற்காக செய்யும் செலவுகள் முதலியவை எல்லாம் காட்டு மிராண்டிக் காலத்து காட்டுமிராண்டிகள் செய்கை என்று சொல்லி வருகிறேனே. என்னை வைபவர்களில் யார் இதற்கு சமாதானம் சொல்லி என்னை வைதார்கள்? வைகிறார்கள்?

எனவே, முதலாவது காட்டுமிராண்டி என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமானால், காரணம் சொல்லாமல், சமாதானம் சொல்லாமல் என்னை வைகிறவர்கள். அதனால் பலனடையலாம் என்று கருதுபவர்கள் ஆகியவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையே முதலில் காட்டுமிராண்டி என்று நான் சொல்லுகிறேன்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன் பகுத்தறிவில்லாதவன் இரண்டும். இருந்தும் சிந்திக்காதவன் சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகிய வர்கள் காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் பொருள்.

மனிதனுக்கு வெட்கம், மானம் ஏற்படும்படி கண்டித்து வலியுறுத்திக் கூறத் தகுதியுள்ள மக்கள் போதியவர்கள். இல்லாததனாலேயே நம் மனித சமுதாயத்தில் 100-க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மேதாவிகள், புலவர்கள், பெரிய வர்கள், மதவாதிகள், பக்தர்கள் என்பவர்களில் இவ்வளவு காட்டுமிராண்டிகள் இருக்க நேர்ந்தது. அது மாத்திரமல்லாமல், சிலர் தங்கள் பிழைப்புக்காகவும், சுயநலத்துக்காகவும் நம்மை வைவதன் மூலம் கண்டுபிடிப்பதன் மூலம் தாங்கள் காட்டு மிராண்டிகளாகத் துணியவும் நேர்ந்தது.

மனிதன் என்றால் பகுத்தறிவுவாதிதான். அதில்லாத மற்றவன் எவனானாலும் காட்டுமிராண்டிதான். பொதுவான முன்னேற்ற வளர்ச்சி காரணமாகவே இவ்வளவு துணிவோடு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. மறுப்புக்களை புனித தன்மையோடு யார் எழுதி அனுப்பினாலும் அவற்றை வெளியிட்டு எனக்குத் தெரிந்த சமாதானம் சொல்ல ஆயத்தமாய் இருந்து கொண்டு தான் என் கருத்தை வெளியிட்டு வருகிறேன்.

பெரியார் எழுதிய தலையங்கம்.

விடுதலை - 3.11.1967

 
Read 108 times