Print this page

பகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்! விடுதலை - 23.9.1965

Rate this item
(0 votes)

தந்தை பெரியார் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!

எனது 87-ஆம் பிறந்த நாள் என்ற பேரால் பெரிய ஏற்பாடுகள் செய்து பணப் போர்வை போர்த்தியும் பல அன்பளிப்புகள் செய்தும் பெருமைப் படுத்திய கழகத் தோழர்களுக்கும், மகளிர் கழகத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சென்ற ஆண்டும் இதுபோல செய்தீர்கள். எதற்காக இப்படிச் செய்கின்றீர்கள் என்றால், எனது தொண்டை உற்சாகப்படுத்தும் முறையில் இப்படிச் செய்கின்றீர்கள்.

எனது தொண்டு உங்களுக்குத் தெரியும். மனித சமுதாயத் தொண்டு சாதாரணமான தொண்டல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வருகின்ற இழிவை, அறியாமையைப் போக்கச் செய்யப்படும் தொண்டாகும்.

இன்றைக்கு சட்டசபைக்குப் போக வேண்டும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும். பதவிக்குப் போக வேண்டும். பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதைத் தான் பொதுத் தொண்டாகக் கொண்டவர்கள் இருக்கின்றார்களே ஒழிய, மனித சமுதாயத்தின் திருத்தப்பாட்டுக்குத் தொண்டாற்ற எவரும் இல்லை. மனித சமுதாயத்துக்காக உழைத்தார்களா என்று பார்ப்போமானால், விரலை விடக்கூட ஒரு ஆள் இல்லை.

இந்த நாட்டில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், அவதார புருஷர்கள் எல்லாம் தோன்றியுள்ளார்கள் - ஒருவருக்குக்கூட கவலை இல்லை. இந்தியாவுக்கு வெளியே போனால், நம் நாட்டைப் பற்றி அவர்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால், மூட நம்பிக்கையைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, காட்டுமிராண்டி நாடு என்று தான் கருதுகின்றார்கள். உலகத்தினர்கள் கண்களுக்கு முன்னால் நாம் சுத்த காட்டு மிராண்டிகள் என்று எண்ணப்படுகின்றோம்.

இன்றைக்கு உலகம் மளமளவென்று வளர்ந்து கொண்டே போகின்றது. விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு உன்னத நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் நாடு மட்டும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது.

நமது காட்டுமிராண்டி நிலைக்குக் காரணம் நமது மதங்கள், இலக்கியங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் இவைகள் என்றுதான் சொல்லலாம். இப்படி கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகள் எல்லாம் நமக்கு மட்டும் அல்ல, உலகில் மற்ற நாட்டினருக்கும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 100, 120 கோடி மக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. இவைகள் ரஷ்யா போன்ற சில நாடுகள் தான் இவைகளை நீக்கிப் பார்த்தால் மற்ற நாட்டுக்காரர் களுக்கு எல்லாம் கடவுள் உண்டு, மதம் உண்டு, சாஸ்திரமும் உண்டு. இவர்கள் 150 - 200 கோடி இருப்பார்கள். அப்படித்தான் மேல் நாட்டுக்காரர்கள் புத்தகங்களே எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள மதங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் பகுத்தறிவையோ, விஞ்ஞானத் தையோ புதுப்புது கண்டுபிடிப்புகளையோ தடை செய்து குறுக்கே நிற்கவில்லை. உலகில் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு சமுதாயமும் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட மதத்தினர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நம்மைப் போல பல கடவுள்கள் இல்லை. பல சாஸ்திரங்கள் இல்லை. ஒரே கடவுள், ஒரே சாஸ்திரம்தான் உண்டு. அவர்களுக்கு எல்லாம் மதத்திற்கு ஒரு தலைவன்தான் உண்டு. ஒன்று அல்லாமல் இரண்டு என்று நம்புகின் றவன் கிறித்துவனோ, முஸ்லிமோ ஆகமாட்டான். அவன் அஞ்ஞானி என்றே கருதப்படுவான்.

கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்று துறைகளிலும் நாம் எவ்வளவு மடையர்களாக உள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள். கிறித்துவ மதத் துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ என்றைக்கு முதல் ஏற்பட்டது என்பதற்கு காலக் குறிப்பு உள்ளது.

நமது மதத்துக்குக் குறிப்பே கிடையாதே. நமக்கு எது மதம்? எது சாஸ்திரம்? எது முதல் ஏற்பட்டது? என்பதற்கு ஆதாரமே கிடையாது. பார்ப்பான் நமது மதத்தையே வேத மதம் என்றுதான் கூறுவான். நமது மானங்கெட்டவர்கள் ஆமாம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.

வேதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா என்றால் தெரியாது. நாம் ஏன் சூத்திரன்? தீண்டத்தகாதவன் என்றால் இந்து மதப்படி, கடவுள்படி, சாஸ்திரபடி தான் ஆகும். இவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் தொண்டாற்று கின்றேனே, இதற்காகத்தான் இப்படி பாராட்டுகின்றீர்கள்.

கிறித்தவரும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான், உருவம் கிடையாது. அவருக்கு ஒன்றும் வேண்டியது இல்லை. அவர் கருணையானவர், அன்பானவர், அருளாளர் என்று தான் கூறுகின்றார்கள்.

நமது கடவுள் இப்படியா பல கடவுள், பல உருவங்கள், பெண்டு பிள்ளைக் குட்டிகள், சோறு, சாறு, கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணுகின்றானே. எந்தக் கடவுளை எடுத்தாலும் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம் இவற்றை அல்லவா கொடுத்து உள்ளீர்கள்.

இவற்றை எல்லாம் கண்டிக்க, புத்தி கூற எங்களை தவிர யார் உங்களுக்கு பாடுபட்டார்கள்?

இத்தகைய மடமைகளை எல்லாம் மாற்ற நமது அரசாங்கத்துக்கு சக்தி போதவே இல்லை. நம்மை மனிதத் தன்மையில் பழக்கும்படியான நூல்கள் நம்மிடையே இல்லையே? நமது நாட்டில் ஏராளமான பத்திரிகைகள் இருக்கின்றன. ஒருவன்கூட மக்களை திருத்தும்படியாக நாலு வரிகூட எழுதுவது கிடையாது. மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும்படியான செய்திகளைத் தான் வெளியிட்டு காசு சம்பாதிக்கின்றார்கள்.

எனவே, இந்த நாட்டில் பகுத்தறிவு ஊட்டக் கூடிய சாதனங்களே இல்லாமல் போய் விட்டதே! ஏதோ, காமராஜர், நேரு ஆகியவர்கள் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்பாக, காங்கிரசுக்கு எதிர்ப்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றது என்றால் எதற்காக நடக்கின்றது? பகுத்தறிவு வளர்ச்சிக்கு எதிர்ப்பாகத்தான்.

காங்கிரஸ் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாதாட வரவில்லை. இது போய்விட்டால் இன்று விடப் பல மடங்கு கேடான ஆட்சி தானே ஏற்படும்? என்பதற்காகத்தான் ஆகும்.

தோழர்களே, நாட்டில் எப்படி இத்தனை கடவுள்கள் தோன்றியுள்ளன. நமது முட்டாள்தனத்தை முதலாகக் கொண்டுதானே ஆரம்பிக்கப்படுகின்றன?

இந்த நாட்டில் மதத் துறையில், கடவுள் துறையில், சாஸ்திர, சம்பிரதாயத் துறையில் எவ்வளவு முட் டாளாக இருக்கின்றோமோ, அவ்வளவு முட்டாள் களாகத்தானே அரசியல் துறையிலும் இருக்கின்றோம்.

 

17.9.1965 அன்று பெங்களூருவில் நடை பெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.

விடுதலை - 23.9.1965

Read 52 times