Print this page

பார்ப்பனப் பத்திரிகைகள். குடி அரசு சிறு குறிப்பு - 11.07.1926

Rate this item
(0 votes)

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரையும் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷீ’ ‘பிர்ம ரிஷீ’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவர்களையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினாமாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை. எங்கோ ஒரு மூலை யில் ஒன்றரை அங்குலத்தில் பொது ஜனங்கள் ராஜினாமாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்டவில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுதவில்லை. ஒரு வயிற்றுச் சோத்து பார்ப்பனன் ஒரு உத்தியோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பியிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டுபோய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள். இதுபோலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன் வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா? அல்லது அலக்ஷியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்! பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது! ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டெழும்போது பத்திரிகையைப் பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசியுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச்சாக்ஷியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!

குடி அரசு சிறு குறிப்பு - 11.07.1926

Read 53 times