Print this page

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள். குடி அரசு - விமர்சனம் - 06.06.1926

Rate this item
(0 votes)

இதைப்பற்றி ‘குடி அரசு’ பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டியாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ , ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல்லாதவருக் கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவு வதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும், விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடத்தையே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தை கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத் தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள்; அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும்கூட ஒத்துப் பாடுகிறார்கள். ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்கு பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கையென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந் தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக்கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை ‘உரிமை பெரிதா’, ‘வகுப்பு பெரிதா’ என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் ‘உத்தம தேசபக்தர்களை’ வணக்கத்துடன் கேட்கிறோம்.

குடி அரசு - விமர்சனம் - 06.06.1926

 
Read 49 times