Print this page

மௌலானா முகமதலியின் மத பக்தி. குடி அரசு - கட்டுரை - 23.05.1926

Rate this item
(0 votes)

மௌலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின் கையிலிருந்து அதைக்காப்பாற்ற வேண்டுமென்றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிறதென்றும் சொல்லி வருகையில் “நாம் இந்துக்களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பக்ஷத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்கமுடியும். நமதுநபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதியர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல” என்று சொன்னாராம்.

இதை ‘சுதேசமித்திரன்’ இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி ‘மௌலானா முகமதலியின் முழக்கம்’ என்கிற தலைப்பின் கீழ் இதை எழுதியிருக்கிறது. மௌலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. மௌலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ்லீம்கள் தேவையில்லை. இதே 21 கோடி இந்துக்கள் என்போர்களை முக்கால் கோடிக்கும் குறைவான பிராமணர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் தலையெடுக்க வொட்டாமல் பணிய வைத்திருக்கவில்லையா? விபசாரத்தரகில் ஜீவிக்கும் பிராமணனை கூட ஜமீன்தாரரான பிராமணரல்லாத இந்து தூதுக்கடிதம் வாங்கும் போதும் “சுவாமி” என்று கூப்பிடவும், தலைவணங்கி கும்பிடவும் அவன் ஆசீர்வாதம் சொல்லி கடிதம் கொடுக்கவும் தானே நடந்து வருகிறது.

ஒரு சமூகம் எவ்வளவு பெரிய எண்ணிக்கை உள்ளதானாலும் தங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தீண்டாதவராய் , பார்க்கக்கூடாதவராய் மதித்துக்கொண்டு மக்களைப் பிரித்து வைத்து ஒருவர் உழைப்பில் ஒருவர் பிழைக்க நினைத்துக்கொண்டு இருப்பவர்களை உள்ளே வைத்திருக்கும் வரையில் மிகச்சிலரால் பணிய வைத்து விடலாம். இதற்கனுகூலமாக நமது நாட்டில் “பிராமணீயம்” இருக்கும்வரை நம்மை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சுலபமாய் பணிய வைக்கமுடியும். ஆதலால் மௌலானா சொல்லுவதில் கணக்குத் தவறு இருக்கிறதே தவிர அதிசயம் ஒன்றும் இல்லை. அவரும் நாம் மகமதியர்களோடு சண்டை போட நினைத்தால்தான் தன்னால் இந்துக்களை பணிய வைக்க முடியும் என்கிறாரே தவிர மற்றபடி பிராமணர்களை தங்களுக்கு அன்னமளிப்பவர்களை பணிய வைத்திருப்பதைப்போல் அல்ல. ஆதலால் மௌலானா சொன்னதில் யாரும் குற்றங் கருதமாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.

குடி அரசு - கட்டுரை - 23.05.1926

 
Read 67 times