Print this page

இந்து மகாசபை. குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.05.1926

Rate this item
(0 votes)

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகிவிட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெருவகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால்தான் முடியும் என்பது ஒரு பழமொழி. அப்பழமொழிக்கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அதுபோலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவினையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தரமாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள். அவைகளின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணாசிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும்.

இதை மகாத்மா எப்படியாவது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவுடன், நமது பிராமணர்கள் புது தந்திரம் ஒன்று செய்திருக்கிறார்கள். அதுதான் “இந்து மகாசபை”. அது இந்துக்களை மாத்திரம் நிரந்தரமாய்ப் பிரித்து வைப்பதோடல்லாமல் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் நிரந்தரமாய் ஏற்படாமலிருப்பதற்கு செய்த சூழ்ச்சியாகும். தற்காலம் தேசமெங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். தற்கால பிராமணீயம் உள்ளவரை தேசம் உருப்படப்போவதில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.05.1926

 
Read 47 times