Print this page

சட்டசபைக்கு ஆள் பிடிக்கிற "தேர்தல் கங்காணிகள்" குடி அரசு - அறிக்கை - 25.04.1926

Rate this item
(0 votes)

தமிழ்நாட்டிலே நிலவும் பத்திரிகைகளில் பெரும்பாலும் தனது மனசாக்ஷிக்கு விரோதமாக எழுதி தன் சுயமரியாதையை இழந்து வருகின்றன. முதுகெலும்பில்லாமல் இருக்கும் இவைகள், எவ்வளவுதான் யோக்கியதையாயிருப்பதுபோல - போலித்தனமாக கைவீசி காலுதறி நடப்பதாகப் பாவனை செய்துவரினும் அவைகளுக்கு முதுகெலும்பில்லாத தத்துவத்தை நாட்டார் அறியாமலிருக்கமாட்டார்கள். இப்பத்திரிகைகளெல்லாம் உண்மையறிய முடியாமலோ, பலக்குறைவாலோ வேண்டுமென்றே சூழ்ச்சிக்காரர்கள் பக்கமாகவேயிருந்து வருகின்றன. ஆனால் பிறருடைய உதவியை நாடாது தன் கால் பலத்திலேயே நிற்கக்கூடிய பத்திரிகைகளில் ஒன்றாகிய நமது “நாடார் குலமித்திரன்” சுயராஜ்யக் கக்ஷியினுடைய சூழ்ச்சியின் உண்மை கண்டு தைரியமாய் வெளிவந்து எழுதியிருப்பதில் ஒருசிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

“சட்டசபைக்கு ஆள்பிடிக்கிற கங்காணிமார்கள் (சுயராஜ்யக் கக்ஷியார்) தேசமெங்கும் உலாவித் திரிகின்றனர். . . சொற்கேளாப்பிள்ளையினால் குலத்துக்கீனமென்ற பழமொழி இவர்களுக்கே தகுமென்று மகாத்மா காந்தி மௌன யோகத்திலிருந்து விட்டார். நமது நேரு கங்காணி, தமது தோழர்களையெல்லாம் பிரிய விட்டு விட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரீனிவாசக் கங்காணி ஆள் பிடிக்கிற வேலையை வெகு துரிதமாய் நடத்திக்கொண்டு வருகிறார். ஒவ்வொரு முக்கிய விடத்திலும் கங்காணியாபீஸ்கள் இரகசியமாய் அமைத்து வருகிறார்.”

இவ்வுரைகள் சீனிவாசய்யங்கார் கோஷ்டிக்கு ஒரு பீரங்கி வெடி போலவே தோன்றும். சுயராஜ்யக் கக்ஷியின் கபடக் கோட்டையைத் தகர்ப்பதில் நாடார்குலமித்திரனும் நமக்குதவியாய் பங்கெடுத்துக் கொண்டிருப்பதற்கு நம் மனப்பூர்வமான நன்றி செலுத்துகிறோம்.

குடி அரசு - அறிக்கை - 25.04.1926

Read 24 times