Print this page

பிரசாரக் கூட்டங்களில் குழப்பம். குடி அரசு கட்டுரை - 14.02.1926

Rate this item
(0 votes)

தற்காலம் சுயராஜ்யக்கக்ஷிப் பிரசாரத்திற்காக ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், கலியாணசுந்தர முதலியார் முதலியோர் ஆங்காங்கு செல்லுவதும் சட்டசபை அபேக்ஷகர்களைத் தங்கள் கக்ஷிக்கு இழுப்பதுமான பிரசாரங்கள் நடந்து வருவதைப் பத்திரிகை வாயிலாக அறிகிறோம். அதோடு கூடவே ஒவ்வொரு கூட்டங்களிலும் குழப்பங்களும் கூச்சல்களும் நடப்பதும் பார்க்கிறோம்.

உதாரணமாக, மதுரையில் மீட்டிங்கு நடக்கவிடாமற்செய்ததும் கும்ப கோணத்தில் போலீஸ் உதவியினால் தலைவர்கள் என்போர் வீடு போய்ச் சேர்ந்ததும், காஞ்சீபுரத்தில் கேள்விகளும் குழப்பங்களும் நடந்ததும் பத்திரிகைகள் மூலமாகவும் நிருபர்கள் மூலமாகவும் தெரிய வருகிறது. இம்மாதிரியான காரியங்களை நாம் மனப்பூர்த்தியாக வெறுக்கிறோம். பிரசாரகர்கள் என்ன கருத்தோடு வந்த போதிலும் அவர்கள் சொல்லுவது முழுமையும் பொறுமையாய்க் கேட்டுவிட்டு மறுப்பு ஏதாவது இருந்தால் பேசுவதற்கு அவகாசம் கேட்க வேண்டியது, அக்கூட்டத்தார் அதை மறுப்பார்களானால் பேசாமலிருந்துவிட்டு அடுத்தநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி நமது அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமேயல்லாமல், குழப்பம் செய்வதோ, பேச முடியாமற் தடுப்பதோ போலீஸ் தயவைக்கொண்டு வீடு போகச்செய்வதோ மிகவும் இழிவான காரியமென்றே சொல்லுவோம்.

குடி அரசு - கட்டுரை - 14.02.1926

 
Read 47 times