Print this page

விஷமப் பிரசாரம் - கதர் பக்தி. குடி அரசு கட்டுரை - 17.01.1926

Rate this item
(0 votes)

டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச்சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக்கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற்பட்டுப்போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற்றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றிவிடுவார்களோவெனப் பயந்து கொண்டு ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும் அவர் கோஷ்டியாரும் ஒவ்வொரு பிரசங்கத்திலும், “டாக்டர் நடேச முதலியார் அந்நிய ஆடையை அணிந்து கொண்டு கதர்ச்சாலையைத் திறந்து வைத்தார். இது பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்த வேலை”யென்று ஓயாமல் பேசியும் வருகிறார்கள்; எழுதியும் வருகிறார்கள்.

இப்படிச் செய்வது வெறும் விஷமப்பிரசாரமே தவிர, இதில் யோக்கியதை கொஞ்சமுமில்லை. முதலாவது, டாக்டர் நடேச முதலியார் கதர்ச்சாலையை திறந்து வைக்கும்போதே டாக்டர் வரதராஜுலு நாயுடு ஓர் சீட்டில் நீங்களேன் கதர் உடுத்தவில்லை என்று எழுதி அவரைக்கேட்டார். அதற்கு பதிலாய் டாக்டர் நடேச முதலியார் பேசுகையில், தான் அணிந்திருப்பது கதர் தானென்றும், தங்களுடைய கொள்கைப்படி பட்டும் உள்நாட்டு யந்திரத்தால் செய்யப்பட்ட நூலைக் கொண்டு உள்நாட்டு நெசவுக்காரர்களால் நெய்யப்பட்ட துணியும் கதர் என்று பாவிப்பதாகவும், அந்தக் கொள்கைப்படியே நான் இப்போது உள்நாட்டுப் பட்டாடைதான் அணிந்திருக்கிறேனென்றும் சொன்னார்.

மிதவாதிகளும் சுயராஜ்யக் கக்ஷியாரும் இதே கொள்கையை உடையவர்கள்தான். அதற்குக் காரணமாகத்தான் சுயராஜ்யக் கக்ஷியார், காங்கிரஸில்கூட கதர் ஒரு நிர்ப்பந்தமாயிருக்கக் கூடாதென்று ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்று பெல்காம் காங்கிரஸிலும், கான்பூர் காங்கிரஸிலும் ஸ்ரீமான்கள் ஏ. ரெங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி இவர்களும், அபயங்கர், ஜெயகர், மூஞ்சி இவர்களும் முறையே அந்நியநாட்டு நூலும், ஜரிகையும் கொண்ட வஸ்த்திரத்தைத்தான் அணிந்து கொண்டிருந்தார்கள். தாங்கள் வோட் பிரசாரம் செய்யும் போது மாத்திரம் தங்கள் கதருக்கு தங்கள் இஷ்டம் போல் வியாக்கியானம் செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் மாத்திரம் அவர்கள் உண்மையான கொள்கையைப் பின்பற்றுவதே பெரிய தப்பிதமாகக் கருதப்படுகிறது. இவ்வித சூழ்ச்சியால் பிராமணரல்லாதாரை இந்தப் பிராமணர்கள் எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றலாமென்றிருக்கிறார்களோ தெரியவில்லை.

குடி அரசு கட்டுரை - 17.01.1926

 
Read 46 times