Print this page

சேலம் தியாகராய நிலையம் திறப்பும் கதர்ச்சாலை திறப்பும். குடி அரசு சொற்பொழிவு - 13.12.1925

Rate this item
(0 votes)

சிறந்த தேசபக்தரும், உண்மை சமூகத் தொண்டருமான காலஞ்சென்ற ஸ்ரீமான். தியாகராய செட்டியாரின் ஞாபகார்த்தத்திற்காக ஏற்பட்ட தியாகராய நிலயம் என்னும் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் நான் அடைந்ததைப்பற்றி அளவிலாத மகிழ்ச்சி எய்துகிறேன். இக்காரியத்தைச் செய்ய எனக்குக் கட்டளையிட்ட ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களுடைய அன்பையும், விடாமுயற்சியையும் நான் பாராட்டுவதோடு, அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன். ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களின் குணாதிசயங்களை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவால் கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜீய விஷயத்தில் அவருக்கும், நமக்கும் அபிப்பிராயபேதமிருந்தாலும், அவருடைய அபிப்பிராயம் நமது அபிப்பிராயத்தில் குறுக்கிடுவதாயிருந்தாலும், அவரது உண்மைத் தத்துவத்தையும் ஊக்கத்தையும் நான் பாராட்டாமலிருக்க முடியாது.

ஸ்ரீமான். தியாகராய செட்டியார் தென்னாட்டுக்கே பழுத்த தேசாபிமானி. அவர் நமது சமூகத்துக்கு உண்மையாய்த் தொண்டு செய்தவர். பிராமணரல்லாதாருக்கு மறக்க முடியாத தலைவர். அவருடைய காரியங்களெல்லாம் கொஞ்சமும் சுயநலமற்றது. ராஜீய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதங்களிருந்தாலும், சமூக முன்னேற்றத்தில் எங்களுடைய அபிப்பிராயம் ஒன்றாகவே இருந்து வந்தது. சமூக விஷயத்தைப் பற்றியும், ராஜீய விஷயத்தைப்பற்றியும், அவருக்குள்ள அபிப்பிராயங்களை ஓர் பெரிய தீர்க்கதரிசனமென்றேதான் சொல்ல வேண்டும். சமூக விஷயத்தைப்பற்றி அவர் சொன்ன அபிப்பிராயந்தான், இன்றைய தினம் காங்கிரசிலுள்ள பிராமணரல்லாத பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜீய விஷயத்தில் அவரது அபிப்பிராயங்களை இன்னமும் என் போன்றார் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், காங்கிரசில் பிரதானமானவர்களென்றும், செல்வாக்குள்ளவர்களென்றும் சொல்லப்படும் சுயராஜ்யக்கட்சியாரென்போரும் அதையே பின்பற்றுகிறார்கள். பாஷையில் ஏதாவது வித்தியாசமிருந்தாலும், தத்துவத்தில் வித்தியாசமில்லையென்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்கள். இந்திய பொதுஜன சேவையில் ஒரே அபிப்பிராயத்தோடு கிளம்பி தொண்டுசெய்து அதே அபிப்பிராயத்தோடு காலஞ்சென்றவர் ஸ்ரீமான். தியராகராயசெட்டியார் என்று சொல்லுவது ஒரு விதத்திலும் மிகையாகாது.

5000, 6000 ரூபாய் சம்பளம் வரும் மந்திரி உத்தியோகம் போன்ற பெரும் பதவிகளெல்லாம், தனது காலடியில் வீழ்ந்து கிடந்த காலத்தில் தனக்கென்றாவது, தனது மக்களுக்கென்றாவது, தனது பந்துக்களுக்கென்றாவது எடுத்துக்கொள்ளாமல், அந்நியர்களுக்கே அவைகளை வழங்கி வந்தார். இவ்வித சுயநலமற்ற தன்மையுடைய தலைவர் யாராவது இருக்கின்றார்களாவென்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு நேர்மையான பெரியாரை இதுவரை நான் சந்தித்துப் பேசிய தில்லையானாலும், அவருடைய மாசற்ற உள்ளத்தினிடம் எனக்கு எப்பொழுதும் பக்தி உண்டு. அப்பேர்ப்பட்ட பெரியாரின் ஞாபகார்த்தத்திற்காக ஏற்படுத்தியிருக்கும் கட்டிடத்தைத் திறந்துவைப்பதை நான் ஓர் பெரும் பாக்கியமாகவே கருதி இத் தொண்டைச் செய்கிறேன். எனக்குக் காயலாவாய் இருப்பதால் அதிகமாகப் பேசமுடியாததற்கு வருந்துகிறேனென்று சொல்லி வெள்ளிச் சாவியினால் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

குறிப்பு:05.12.1925 இல் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கட்டப்பட்ட தியாகராயர் நினைவு கட்டடம் மற்றும் கதர்ச்சாலை திறப்புவிழா உரை.

குடி அரசு சொற்பொழிவு - 13.12.1925

Read 45 times