Print this page

கடவுளின் நடவடிக்கை. குடி அரசு - 19.10.1930

Rate this item
(0 votes)

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப் படுமானால் அவரை நடுநிலைமையுடையவரென்று சொல்லுவதைவிட பாரபக்ஷமுடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரை கருணையுடையவரென்று சொல்லுவதைவிட கருணை யற்றவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ உதாரணங்கள் யிருக்கின்றன.

 

அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்வதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

 

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றாரென்பதை விட தீமையை செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாக்ஷிகள் மிதந்து கிடக்கின்றன.

அவர் நாகரீக முடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டு மிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்து வதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்.

- சித்திரபுத்திரன்

(குடி அரசு - கட்டுரை - 19.10.1930)

 
Read 92 times