Print this page

தியாகராயர் திருநாள். குடி அரசு துணைத் தலையங்கம் - 13.12.1925

Rate this item
(0 votes)

இம்மாதம் 16, 17, 18-ந்தேதி ஆகிய மூன்று நாட்களையும், காலஞ்சென்ற பெரியாரான ஸ்ரீமான். பி. தியாகராய செட்டியாரின் நினைவுக்குறிய திரு நாளாகக் கொண்டாடவேண்டுமென்று, கனம். பனகல் இராஜா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனைப் பற்றி "லோகோபகாரி" பத்திரிக்கை பின்வருமாறு எழுதுகிறது:-

"டிசம்பர் மாதம் 16,17,18-ந்தேதிகளை காலஞ்சென்ற பெரியாரான திரு. பி. தியாகராய செட்டியாரவர்களின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள். காலஞ்சென்ற பெரியாருக்கு ஞாபகச் சின்னம் ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும், அவர் கொள்கைகளை நாடெங்கும் பரப்பவேண்டுமென்றும், அதற்காக நன்கொடைகள் வசூலிக்க வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காலஞ்சென்ற தியாகராயர் நாட்டின் நல்வாழ்வு கருதியும், சிறப்பாகப் பிராமணரல்லாதாரின் பெரு வாழ்வு கருதியும், பெருந்தொண்டு செய்தாரென்பதை யாரும் மறக்கமுடியாது. அவர் திருநாளைத் தக்கதோர் முறையில் கொண்டாடவேண்டும். அவர் நினைவை மற்றவர்கள் எவ்வாறு கொண்டாடினும் கொண்டாடட்டும்.

தியாகராயர் பெயரால் நாட்டிலே தகுதியான பல இடங்களில், கதர் நெசவுச் சாலைகள் ஏற்படுத்தவேண்டுமென்று நாம் சொல்லுவோம். இதனால் பிராமணரல்லாதார் பெரும்பயனடைவார்கள். காலஞ்சென்ற செட்டியார், சென்னையில் சுமார் பதினைந்து வருடங்களுக்குமுன் ஒரு நெசவுச்சாலையைத் தமது சொந்தப் பொறுப்பில் நடத்தி வந்தமை இதனையொட்டி நமது நினைவுக்கு வருகிறது."

நமது சகோதரப் பத்திரிக்கையின் ஆசைகளை நாம் மனதார ஆமோதிக்கிறோம். காலஞ்சென்ற பெரியாரின் திருநாளை, உண்மைப் பிராமண ரல்லாதார் யாவரும் தக்க சிறப்புடன் கொண்டாடவேண்டுமென்பதே நமது விருப்பமாகும். இதனை அறிந்தும், பிராமணரல்லாத பத்திரிக்கைகள் பல மௌனஞ் சாதித்திருப்பதை நோக்கும்போது, இப்பத்திரிகைகள் இத்திருநாளைக் கொண்டாடவேண்டுமென எழுதினால், பிராமணப் பத்திரிக்கைகளும், அப்பத்திரிக்கைக் கோஷ்டியினரும் இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்கள் எனக் கூச்சலிடுவார்கள் எனப் பயந்து இருக்கின்றார்கள் போலும்; யார் எப்படியிருந்த போதிலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. பிராமணரல்லாதார் இத்திருநாளைக் கொண்டாடவேண்டுமென மீண்டும் வலியுருத்துகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 13.12.1925

 
Read 55 times