Print this page

காஞ்சீபுரம் தமிழர் மகாநாடுகள். குடி அரசு வேண்டுகோள் - 15.11.1925

Rate this item
(0 votes)

காஞ்சீபுரத்தில் 31 - வது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22 -ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் அக்கிராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வ கக்ஷியார்களும் அடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும்.

பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்கு கொண்டுவரவும், ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங்காரணமாகவாவது, சொந்த அசவுரியங்காரணமாகவாவது அலக்ஷியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்.

தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால் தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சீபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஈரோடு ஈ.வெ.ராமசாமி

குடி அரசு வேண்டுகோள் - 15.11.1925

 
Read 56 times