Print this page

அனுப்பபாளையம். குடி அரசு சொற்பொழிவு - 11.10.1925

Rate this item
(0 votes)

ஸ்தல ஸ்பனங்களின் நிர்வாகங்களில் பலவித ஊழல்களிருக்கின்றது. அவைகளை நிவர்த்தி செய்யவேண்டுமானால் தேர்தல்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் மனஸ்தாபத்தின் காரணமாகவே ஸ்தல ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளில் கட்சி வேற்றுமைகளும், காரியக் கெடுதிகளும் ஏற்படுகின்றதென்றுங் கூறியதுடன், இக்குறைகள் அகற்றப்பட வேண்டுமானாலும், பொதுஜனங்களின் வரிப் பணமானது முறையுடன் செலவழிக்கப்பட வேண்டுமானாலும், நிர்வாகத்தை யோக்கியமாய் நடத்தக்கூடிய திறமைசாலிகளையே தெரிந்தெடுக்க வேண்டுமெனக் கூறினார். மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகத்தில் அரசியல் கட்சிகளைப் புகவிடுவது, வேலைக்கே கெடுதியைத் தருமென்றும், இதை மகாத்மாவும் பலதடவைகளில் வற்புருத்தியிருக்கிறாரென்றும் சொன்னார்.

பின்னர் கதர், மதுபானம் தீண்டாமை முதலியவைகளைப்பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் கேட்போர் மனதில் உணர்ச்சி உண்டாகக்கூடியவாறு பேசியபின் காங்கிரஸைப்பற்றி ஸ்ரீமான் நாயக்கர் கூறியதின் சாரமாவது:-

காங்கிரஸைப்பற்றி நீங்கள் அதிகமாகக் கவலை கொள்ளவேண்டியதில்லை, ஒத்துழையாமைக்கொள்கைக் காங்கிரஸினின்று எடுபட்டபிறகு காங்கிரஸினால் படித்தவர்களுக்கும் அவர்கள் பிள்ளை குட்டிகள் இரண்டொருவருக்கும் உத்தியோகம் கிடைக்கலாமே தவிர தேசத்திற்கு அதனால் ஒரு காரியமும் உண்டாகாதென்பது என்னுடைய அபிப்பிராயம். பழயபடி காங்கிரஸை ஒத்துழையாமை தர்மத்திற்குக் கொண்டு வரவேண்டுமானால் நாம் யாவரும் காங்கிரஸில் சேர்ந்து உழைப்பதற்கு அர்த்தமுண்டு. அப்படிக்கின்றி யாரோ சில பிராமணர்களும் படித்தவர்களும் உத்தியோகத் திற்குப் போவதற்காக நாம் எல்லாரும் ஜெயிலுக்குப் போவது முட்டாள்தனமென்றே நினைக்கிறேன்.

இனி பொதுத்தொண்டு செய்பவர்களுக்கு நிர்மாணத் திட்டம் தான் முக்கியமானது. பாட்னா, அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி மீட்டிங்கில், நிர்மாணத் திட்டம் அடியோடு கைவிடப்பட்டுப் போய் விட்டது. காங்கிரசின் பேரால் பொதுமக்களிடத்தில் பணம் வசூல் செய்யவும், அதை எலெக்ஷன் களுக்குச் செலவு செய்யவும் சுயராஜ்யக் கக்ஷியாருக்கு முழு அதிகாரமும் கொடுத்தாகிவிட்டது. மகாத்மா அவர்களும் காங்கிரசை வைத்துக் கொண்டி ருப்பதால், நமக்கு ஒரு பிரயோஜனமில்லையென்று கருதி, கலகக்காரர்களிடமே ஒப்புவித்து விட்டார். நூல்நூற்கும் சங்கத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதற்கு ஒவ்வொருவரும் தங்களாலான உதவி யைச் செய்யவேண்டும்.

குறிப்பு: 30.09.1925 இல் திருப்பூரை அடுத்த அனுப்பபாளையம் கிராமத்தில் யூனியன் பஞ்சாயத்துத் தலைவர் அளித்த ஓர் உபசாரப்பத்திரத்திற்கு பதிலளித்துப் பெரியார் பேசிய சொற்பொழிவு.

குடி அரசு சொற்பொழிவு - 11.10.1925

 
Read 20 times