Print this page

ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சம். குடி அரசு கட்டுரை - 27.09.1925

Rate this item
(0 votes)

வரவர நமது நாட்டு முனிசிபாலிட்டிகளும், டிஸ்டிரிக்ட் போர்டுகளும், தாலூகா போர்டுகளும், மனிதர்கள் பதவியை அனுபவிக்க ஒரு சாதனமாயிருப்பதோடல்லாமல் அதன் தலைவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் ஒரு சாதனமாகிக்கொண்டு வருகிறது. இவை கொஞ்ச காலங்களுக்கு முன்பாக நூற்றுக்கு பத்து பதினைந்து பேர்கள்தான் இம்மாதிரி தப்புவழியில் நடக்கக் கூடிய தலைவர்களை உடைத்தாயிருந்தன. இப்பொழுது பணம் சம்பாதிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகப்பட்டுக்கொண்டு வருவதோடல்லாமல் பொதுஜனங்களுக்கும் சர்க்கார் காரியங்களில் நீதி பெறுவதுபோல் பணம் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் ஸ்தல ஸ்தாபனங்களில் சாதித்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் வந்துவிட்டது. இம்மாதிரியான காரியங்கள் இரட்டை ஆட்சி ஏற்பட்டபிறகு அதிகப்பட்டுப்போய்விட்டது.

இரட்டை ஆட்சிக்கு முன்பாகவும் இம்மாதிரி காரியங்கள் இருந்துவந்தது என்றாலும் சேர்மன் முதலானவர்கள் இவ்வளவு தைரியமாய் அந்தக்காலத்தில் லஞ்சம் வாங்கத் துணியவே இல்லை. லஞ்சம் வாங்குவதென்பது சகஜமாய் போய்விட்டால் பிராதுகளும், புகார்களும் எப்படி உண்டாகும்? இம்மாதிரியான காரியங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தால் பிராது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சுத்தப் பயித்தியக்காரத்தன மென்பதோடு வேண்டுமென்றே சும்மா இருப்பதற்கு பிராது வரவில்லையே என்ற சாக்கை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்வோம்.

எவ்வளவோ உபயோகமில்லாத காரியங்களுக்கு ஸி.ஐ.டி. என்று சொல்லுகிற வேவுக்காரர்களையும் வைத்து வரிகொடுப்போரின் பணத்தைப் பாழாக்குகிற நமது சர்க்காருக்கு லஞ்சம் வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பதற்கு வேவுக்காரர்களை வைப்பது கஷ்டமென்றோ அதிக செலவென்றோ சொன்னால் எவரேனும் ஒப்புக்கொள்வார்களா? ஜனங்களெல்லாம் யோக்கியமாய் இருப்பார்கள் என்று ‘அரசாங்கத்தார் நினைப்பார்களானால் கோர்ட்டுகளும், நிர்வாகமும் தேவையே இல்லையே. சர்க்காரார் வேண்டுமானால் இது விஷயங்களுக்குச் சுலபமாக ஒரு பதில் சொல்லிவிட முடியும். என்னவென்றால், அப்படிப்பட்ட சேர்மன்களையோ பிரஸிடெண்டுகளையோ அங்குள்ள கவுன்ஸிலர்கள் ஏன் தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்கள், என்று கேட்கலாம்.

கவுன்சிலர்களும், மெம்பர்களுமே ஆயிரம் பதினாயிரக்கணக்காய் ஓட்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து பதவி பெறுகிறபொழுது சேர்மன் முதலியவர்கள் வாங்குகிற லஞ்சம் இவர்களுக்கு எப்படிக் கிரமமாகத் தோன்றும்? இவர்கள் லஞ்சம் கொடுத்து பதவி பெறுகிற காரணத்தினால் லஞ்சம் வாங்குகிற சேர்மனை அநுமதிக்க வேண்டியதாகப் போய்விட்டது. இதுதான் உண்மையான கர்மபலன் என்று சொல்லுவது.

ஜனங்கள் சுயராஜ்யத்திற்கு அருகர்களாகப் போய்விட்டார்கள். ஆதலால் சுயராஜ்யம் கொடுக்க வேண்டுமென்றும் பிரிட்டிஷார் ஒரு அதிகாரத்தைக்கூட தங்கள் கையில் வைத்துக்கொள்ளாமல் முழு சுதந்தரத்தையும் குடிகளுக்கே வழங்கிவிட வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் கொஞ்சம் நஞ்சம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படும் குட்டி சுயஆட்சி ஸ்தாபனங்களிலெல்லாம் இம்மாதிரி லஞ்சங்களும் ஒழுங் கீனமான காரியங்களும் தாண்டவமாடுவதானால் அதற்குப் பொதுஜனங்களே உடந்தை யாயுமிருப்பார்களானால் சுய ஆட்சிக்கு நாம் அருகதை உடையவர்கள் என்று சொல்லுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

தேசத்தின் சுதந்தரத்திற்காக ஏழைமக்கள் கஷ்டப்படுவதும், தேச பக்தர்கள் தியாகம் செய்வதும் இம்மாதிரி படித்தவர்களும், பணக்காரர்களும் லஞ்சம் வாங்கவும் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கவும்தானா உபயோகப்படுத்த வேண்டும்? மகாத்மா சொல்லுகிறபடி தமது சுயராஜ்யத் திட்டத்திற்கு படித்த வகுப்பார்தான் எதிரியாயிருக்கிறார்கள் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சுயராஜ்யத்திற்கு நாம் அருகர்களல்ல என்பதற்கும் இந்தப் படித்த கூட்டத்தாரே தான் ஆதாரமாயிருக்கிறார்கள் என்பதை நாம் வருத்தத்துடன் சொல்லாமலிருக்க முடியவில்லை.

குடி அரசு கட்டுரை - 27.09.1925 

Read 33 times