Print this page

கும்பகோணம் பிராமணர்களின் தேர்தல் தந்திரம். குடி அரசு கட்டுரை - 13.09.1925

Rate this item
(0 votes)

கும்பகோணம் முனிசிபல் தேர்தலுக்கு காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி பெயரைச் சொல்லிக்கொண்டு இரண்டு அய்யர்களும் ஒரு அய்யங்காரும் ஒரு சாஸ்திரியாரும் அபேட்சகர்களாய் நிற்கிறார்கள். காங்கிரஸ் வேலைகள் நடந்த காலத்தில் இவர்கள் எங்கு இருந்தவர்கள்? காங்கிரசுக்கு இவர்கள் என்ன செய்தவர்கள்? காங்கிரஸ் கொள்கையில் எதெதை இவர்கள் ஒப்புக் கொண்டவர்கள்? கும்பகோணம் பொது ஜனங்களும் காங்கிரஸ் தொண்டர்களும் செய்த காங்கிரஸ் கைங்கர்யங்கள் இந்த அய்யர்கள் அய்யங்கார்கள் சாஸ்திரிகள் முனிசிபாலிட்டியில் ஸ்தானம் பெறத்தான் உதவவேண்டுமா? தீண்டாமை விலக்கைப்பற்றியும், குருகுலத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்க்காமை விலக்கைப் பற்றியும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு செய்த பிரசாரத்தின் பலனாய் காங்கிரஸ் கமிட்டிக்கு நூல் சந்தாவே அனுப்பக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்ட கூட்டத்தாருக்கும், காங்கிரஸ் பதவியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து ஓடிப்போன கூட்டத்தாருக்கும் முனிசிபல் தேர்தல் வந்தவுடன் தங்கள் மானம் வெட்கத்தையெல்லாம் விட்டு காங்கிரஸ் காரர்களின் தியாகத்தின் மறைவில் ஸ்தானம் பெற ஆசைப்பட்டு, காங்கிரஸ் பேரால் ஸ்தானம் பெற முன் வந்து விட்டால் இந்த சுயமரியாதை இல்லாத வகுப்புள்ள நாட்டுக்கு எப்படி சுயராஜ்யம் கிடைக்கும்?

கும்பகோணம் பிராமணரல்லாதார், கும்பகோணம் பிராமணர்களாகிய அய்யர் அய்யங்கார் சாஸ்திரிகளின் மாய வலையில் சிக்காமல், போலிக் கட்சிக்காரர்களை உதரித் தள்ளி, உண்மையாய் அந்த ஸ்தானங்கள் பெற யோக்கியதையும் பாத்தியமும் உடையவர்களுக்கு தங்கள் ஓட்டுகளை கொடுக்கவேண்டும். பிராமண ரல்லாதார் புத்தியில்லாதவர்கள் என்றும், மானம் ரோஷம், ஜாதி அபிமானம் இல்லாதவர்கள் என்றும், பிராமணர்கள் நினைப்பதினாலும் வயிற்று ஜீவனத்திற்கும் பொய்க்கீர்த்திக்கும் ஆசைப்பட்ட பிராமணரல்லாதார் சிலர் பிராமணர்கள் பணத்தினாலும் அவர்கள் விளம்பர சவுகரியத்தினாலும் அவர்களுக்கு அடிமைப்பட்டு பிராமணரல்லாதாருக்கு விரோதமாயும் பிராமணர்களுக்கு அனுகூலமாயும் வேண்டிய ஆள்கள் பிராமணரல்லாதாரிலேயே கிடைக்கும் என்கிற தைரியத்தினாலுமே அவர்கள் இந்த தேர்தல்களில் இவ்வளவு தைரியமாய் நிற்கிறார்கள். பிராமணரல்லாதாரே இதை உணருங்கள்!

குடி அரசு கட்டுரை - 13.09.1925

 
Read 29 times