Print this page

ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு. குடி அரசு துணைத் தலையங்கம் - 30.08.1925

Rate this item
(0 votes)

தஞ்சையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டின் நடவடிக்கைகளையும் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரின் புலம்பலையும் பத்திரிகைகள் வாயிலாக நேயர்கள் வாசித்திருக்கலாம். இவரது பிரசங்கத்தினின்று ஜஸ்டிஸ் கட்சியின் நிலை எல்லோருக்கும் நன்கு விளங்கிவிட்டது.

பிராமணரல்லாதார்களில் அநேகர் இக்கட்சியில் சேராமலிருந்ததற்குக் காரணம் கூலிக்கு ராஜபக்தியும் உத்தியோகவேட்டையும் மிகுந்திருப்பதேயன்றி வேறல்ல. இக்குணங்கள் இக்கட்சியினின்றும் ஒழிந்து இக்கட்சிக்கு இவ்வரசாங்கத்தினிடம் இருக்கும் கூலிபக்தியும் ஒழியுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் இதில் சேருவார்கள். இல்லாவிடின் செட்டியாரைப் போன்ற இக்கட்சியார் எல்லோரும் மந்திரிகளுள்பட ஒவ்வொருவராய் ஒப்பாரியிட வேண்டியதாகத்தான் முடியும். சுயராஜ்யக்கட்சியாரும் இவர்கள் போலவே உத்தியோக வேட்டையிலும் பதவிவேட்டையிலும் நுழைந்துள்ளார்கள். இவர்களது ஆர்ப்பாட்டங்களைக்கண்டு தேசமக்கள் முதலில் ஏமார்ந்து போனாலும் இவர்களது யோக்கியதையையும் விரைவில் அறிந்துவிடுவார்கள்.

பாமரஜனங்களை ஏமாற்றுவதால் எந்தக் கட்சி முன்னுக்கு வருவதாயிருந்தாலும் அது வெகு நாளைக்கு நீடித்திருக்காது என்பதை ஜஸ்டிஸ் கட்சியாரும் சுயராஜ்யக்கட்சியாரும் அறியவேண்டுமென விரும்புகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 30.08.1925

 
Read 45 times