Print this page

அகில இந்திய தேசபந்து ஞாபக நிதி. குடி அரசு – துணைத் தலையங்கம் - 26.07.1925

Rate this item
(0 votes)

தேசபந்து தாசர் இரவு பகலாய்ச் செய்யவேண்டுமெனக் கருதி வந்த கிராம நிர்மாண வேலை செய்யும்பொருட்டு இந்நிதி வசூலிக்க காந்தி அடிகள், பண்டித மதிலால் நேரு, சரோஜனி தேவியார், ஜம்னாலால் பஜாஜ், பி.ஸி.ரே, சௌகத் அலி, ஜவஹர்லால் நேரு முதலிய அரிய தலைவர்கள் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்நிதியைப் பிரசாரத்திற்குச் செலவு செய்யப்படப் போவதில்லை. படித்தவர்களை கிராமங்களுக்கு அனுப்பி அங்கு அவர்கள் கிராம நிர்மாண வேலைகள் செய்வதற்கே செலவு செய்யப்படும். தாசர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தார்ஜிலிங்கில் “எனது நோய் குணப்பட்டவுடன் கிராமங்களில் இராட்டினங்களைப் பரவச் செய்வதற்கே வேண்டிய முயற்சி செய்யப்போகிறேன்” என்று காந்தி அடிகளிடம் கூறினாராம். உணவில்லாது வாடும் மக்களைக் காப்பதற்கு இந்நிதி வேண்டுவது மிகவும் அவசியமாகும். இக்கிராம நிர்மாண வேலையே நமக்குச் சுதந்தரத்தை அளிக்கக்கூடியது. நகரங்கள் என்னும் பேய்களின் நாகரீகம் என்னும் மாயை ஒழித்து மக்கள் எல்லோரும் கிராம வாழ்வு வாழ்ந்து, பண்டைக் கைத்தொழிலை உயிர் பெறச்செய்தல் வேண்டும். இந்நிதியானது இந்தியாவெங்கும் கிராம நிர்மாண வேலை செய்வதற்கு உபயோகப்படுமாகையால் ஒவ்வொருவரும் எளியவராயினும் சரி, செல்வந்தராயினும் சரி தங்களது சக்திக்கேற்றவாறு உதவி செய்து தாசரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுவது அவசியமென யாம் கூறவேண்டுவதில்லை.

குடி அரசு – துணைத் தலையங்கம் - 26.07.1925

 
Read 39 times