Print this page

சாஸ்திரியாரின் தேசாபிமானம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1925

Rate this item
(0 votes)

திரு.வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரை அறியாத இந்தியர் இரார் என்பது உறுதி. நமது தேசாபிமானிகளில் ஒருவராக அவரும் விளங்கி வருகின்றார். ஆங்கிலேயர் இதுவரையிலும் இந்தியர்களுக்கு அளித்த பட்டங்களில் உயரிய பட்டத்தைப் பெற்றவராவர். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் அவர் தமது தேசாபிமானத்தின் ஆழத்தை இந்தியருக்கு அளந்து காட்டியிருக்கிறார். நாட்டின் தற்கால அரசியல் நிலையைப் பற்றிச் சிறந்த தேசாபிமானிகளின் அபிப்பிராயங்களை அறிய வேண்டி ‘பம்பாய் கிரானிகல்’ பத்திரிகை சில கேள்விகளை விடுத்திருக்கிறது. அக்கேள்விகளுக்குப் பதில் அளித்த பெரியார்களில் நமது சாஸ்திரியாரும் ஒருவர். அக் கேள்விகளில் ஒன்று பின்வருமாறு:- “அந்நிய நாட்டு ஆடை அணிவதை விட்டு விடத் தாங்கள் தயாராக இருக்கிறீர்களா? தாங்கள் அந்நிய ஆடையை உபயோகித்துக் கொண்டு வரின், சுதேசி இயக்கம் முன்னேற்றமடைய அதை விட்டுவிட ஒருப்படுகிறீர்களா?” இக்கேள்விக்கு ‘இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நமது சாஸ்திரியார் பதில் கூறிவிட்டார். என்னே இவரது தேசாபிமானம்! என்னே ஏழை இந்திய மக்களிடத்து இவருக்குள்ள பேரன்பு! ஏழை இந்திய மக்கள் பாடுபட்டுக் கொடுத்த வரிப்பணத்தில் உலகஞ்சுற்றி வந்த நமது சாஸ்திரியாரா இந்திய ஏழை மக்களுக்கு இரங்கப்போகிறார்? எல்லாம் வெறும் பகற்கனவே. ஆங்கில மாயையில் அழுந்திக் கிடக்கிறார் பாவம் நமது சாஸ்திரியார். ஆங்கில மோகத்தின் வலிமையே வலிமை! பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் உதறித் தள்ளிவிடும்படி சாஸ்திரியார் போன்ற உத்தமர்களையும் வெருட்டி விடுகின்றது. சாஸ்திரியார் நீடுழி வாழ்க!

குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1925

Read 43 times